சேலையும் பெண்களும்
தமிழர் பண்பாட்டைப் பொறுத்தவரையில் அன்றுதொட்டு இன்றுவரை பெண்களையும் சேலையையும் பிரித்துப்பார்க்கவே முடியாது. பெண்கள் என்றாலே உடனே ஞாபகத்திற்கு வருவது சேலைதான். சேலை உடுத்தும்போதே ஒரு பெண் முழுமையான அழகினைப் பெறுகிறாள். பற்பல வர்ணங்களில் மட்டுமல்லாது பல்வேறு விதமான தரங்களிலும் வடிவமைக் கப்படுகின்றது.
சேலைக்கென்றே பொருந்தக்கூடிய அணிகலன்களும் விஷேடமாக வடிவமைக்கப்படுகின்றது. ஓர் பெண் பருவமடைந்ததும் நடாத்தப்படும் பூப்புனித நீராட்டு விழாவிலேயே முதன்முதலாக சேலை உடுத்துகிறாள். இவ்விழாவைக்கூட இன்று சாறிஷெறிமொணி என்றே ஆங்கிலத்தில் அழகாகக்
கூறுகின்றனர். இச்சடங்கில் முக்கிய இடத்தைப் பிடிப்பதும் சேலைதான்.
இன்றைய நிலையில் சுடிதார் சேலையி;ன் இடத்தை ஆக்கிரமித்துள்ளது. அதாவது
அணிவது சுலபமானது, ஆபாசமில்லாதது, வேலைகளைச் செய்வதற்கு சுலபம்,
இளமையாகக் காட்டக்கூடியது, வாகனங்களை ஓட்டுவதற்கு வசதியானது என
பல்வேறு காரணங்களை தாங்கி சுடிதார் பெண்கள் மத்தியில் செல்வாக்குச்
செலுத்துகின்றது. விழாக்களில் கூட சிறு விழாவென்றால் சுடிதாரும்,
விமரிசையாகக் கொண்டாடப்படும் விழாக்களுக்கே சேலை என்ற நிலை
வந்துள்ளது.
இவ்வாறு பல்வேறு காரணங்கள் இருப்பினும் இவற்றையெல்லாம் முறியடித்து பெண்கள்
விரும்பியும், அதிக பணம் மற்றும் நேரத்தை செலவு செய்து வாங்குவது சேலையே.
இலங்கையைப் பொறுத்தவரையில் அரசதுறையில் கடமையாற்றும் பெரும்பாலான
பெண் உத்தியோகத்தர்கள் சேலையே உடுத்துகின்றனர். நேர்த்தியாக சேலை உடுத்தி
பணியிடத்தில் பணிபுரியும்போது ஓர் கம்பீரமான தோற்றத்தையே ஒவ்வொரு பெண்ணும்
பெறுகின்றாள். இவ்விடத்தில் ஒவ்வொரு பெண்ணின் கல்வித்தரம் மற்றும் உத்தியோகம்
என்பவற்றை அவர்களின் சேலையே சமூகத்தில் அவர்களுக்கான நன்மதிப்பை
மென்மேலும் உயர்த்துகின்றது.
புலம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரையில் சேலை அணிவதற்கான
சந்தர்ப்பங்கள் பெண்களுக்கு மிக குறைவாக அமைந்துள்ள போதிலும், விழாக்கள்
நடைபெறும்போது சேலையையே மிகவும் விரும்பி அணிகின்றனர்.
இளம் தலைமுறையினர் மிகவும் பார்த்து பார்த்து சேலையை தெரிவு செய்து
உடுத்துகின்றனர்.
அதிலும் இன்னொருவரது விழாவாக இருந்தாலும் அதற்கு செல்லுமிடத்து,
தம் வீட்டு விழாவாக கருதி மிக மகிழ்ச்சியுடன் புதிதாக சேலை வாங்கி அணிகின்றனர்.
சேலைகட்டும் கலாச்சாரமானது என்றுமே பெண்களுடன் வாழ்ந்து
கொண்டிருக்கும் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை.
சேலையில் பெண்களுக்கு மென்மேலும் அழகு சேர்ப்பது அதனைக்கட்டும்
முறையும், அதற்கேற்ப பொருத்தமாக அணியும் சட்டையும், ஆபரணங்களுமே.
சிலசமயங்களில் சேலையின் விலையை விட அதன் சட்டை
அதிகவிலையுடையதாக காணப்படும்.
அதற்கேற்ப சட்டையும் பல வேலைப்பாடுகளுடனேயே அமைகின்றது. ஆபரணங்கள் கூட ஒவ்வொரு சேலைக்கும் ஒவ்வொரு விதமாக வடிவமைக்கப்படுகின்றது. அதாவது பட்டுசேலைகளுக்கென பிரத்தியேகமானதும், பான்சி சேலைகளுக்கென வேறொரு வகையிலும் அணிகலன்கள் அணியும்போது, அவை மென்மேலும் பெண்களுக்கு அழகைக் கொடுக்கின்றன.
இவை இவ்வாறிருக்க, தாயக மக்களிடையே “வெளிநாட்டில் பெண்கள் ஒரு சேலையை ஒருமுறை கட்டினால் இன்னொருமுறை கட்டுவதில்லை” எனும் கருத்து பரவலாக உள்ளது. இக் கருத்தானது புலம்பெயர் பெண்களால் தாயக பெண்களுக்கு கூறப்பட்டதால் வந்த கருத்தா? அன்றேல் “ஒருமுறை கட்டிய சாறிதான்” என்று கூறி தாயக உறவுகளுக்கு சேலைகளை கொடுப்பதால் ஏற்பட்ட கருத்தா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
— அனித்தா செல்வராஜா பூஷன்
3,744 total views, 3 views today
2 thoughts on “சேலையும் பெண்களும்”