வெள்ளி ஏன் சூரிய குடும்பத்தின் விசேஷ கொள் ?
ஒரு நாள் என்றால் என்ன? சுமார் 24 மணிநேரங்களை ஒரு நாள் என்று அழைக்கின்றோம். சரி அது இருக்கட்டும். ஆனால் அதே ஒரு நாள் ஒரு ஆண்டை விட நீளமானால் எப்படி இருக்கும்? அட இது என்னடா ஆரம்பமே இப்படி இருக்கிறது என்று யோசிக்கின்றீர்களா? சரி பரவாயில்லை, இதற்குப் பின்னால் அப்படி என்ன மர்மம் இருக்கிறது என்று அறிய விரும்பினால் தொடர்ந்து படியுங்கள்.
நீங்கள் இரவு நேரத்தில் மேலே வானத்தை அவதானித்தால், ஒரு பிரகாசமான வெளிச்சத்தை அவதானிக்கலாம். அது நீங்கள் நினைப்பது போல் ஒரு நட்சத்திரம் கிடையாது. அது தான் சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவது இடத்தில் அமைந்துள்ள வெள்ளி, சுக்கிரன் அல்லது வீனஸ் (venus) என்று அழைக்கப்படும் கோளாகும். பல ஆண்டுகளாக, குறிப்பாகப் பண்டைய மக்கள், சில வேற்றுக் கோள் அரக்கர்கள் வெள்ளியில், மேகங்களுக்குக் கீழ் வாழ்வதாக நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்பொழுது வெள்ளியில் கடும் வெப்பத்தால் இது சாத்தியமே இல்லை என்பது நமக்குத் தெரியவந்துள்ளது.
வெள்ளி பல அற்புதமான இயல்புகளைக் கொண்டுள்ளது. அந்தக் கோளும் பூமியும் இரட்டைக் கோள்களாகவே பெரும்பாலும் கருதப்படுகின்றன. அது ஏன் தெரியுமா? வெள்ளியும் பூமியும் எறத்தாழ ஒரே அளவில் இருப்பது மட்டுமல்லாமல், இந்த இரண்டு கோள்களும் ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் இருப்பதும் இதற்குக் காரணமாக உள்ளது. இதைத் தவிர்த்து வெள்ளி பற்றிய இன்னும் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்தக் கோள் நீங்கள் நினைப்பது போல் நமது பூமியைப் போல் சுற்றுவது இல்லை, இதனது சுழற்சி பிற்போக்கான சுழற்சி, அதாவது ஆங்கிலத்தில் Retrograde Rotation என்று அழைக்கப்படும். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? நமது பூமியில் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும், ஆனால் வெள்ளியில் மேற்கில் உதித்து கிழக்கில் மறையும்.
வெள்ளி பற்றிய இன்னும் ஒரு சுவாரசியமான விஷயம் என்ன தெரியுமா? சூரியக் குடும்பத்திலே அதிக அளவில் எரிமலைகள் காணப்படும் கோள் வெள்ளி தான். அதில் 1,600 கும் மேற்பட்ட எரிமலைகள் காணப்படுகின்றன. உண்மை சொல்லப்போனால், இந்த எண்ணிக்கையை விட அதிகமாகத் தான் இருக்கும், ஏனென்றால் ஆராய்ச்சியாளர்களால் இன்னும் சிறிய சிற்ய எரிமலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன தான் வெள்ளியைப் பூமியின் இரட்டைச் சகோதரக் கோள் என்று கூறினாலும், அதில் நம்மால் வாழவே முடியாது. ஏனென்றால் நமது சூரிய குடும்பத்திலேயே வெப்பம் அதிகமான கோள் வெள்ளி தான். அதுவும் சும்மா வெப்பம் இல்லை! வெள்ளியில் சராசரியாக 462 பாகை செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்.
ஆனால், இது எல்லாவற்றிலும் என்னை மிகவும் வியக்க வைத்த விஷயம் என்ன தெரியுமா? வெள்ளியில் ஒரு நாள், அதன் முழு ஆண்டை விட நீளமானது என்கிற உண்மை தான். என்ன புரியவில்லையா? வெள்ளி தன்னைத் தானே சுற்றி வர, மிகவும் மெதுவாக, பூமியின் நாள் கணக்கின்படி 243 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஆனால் அந்த வெள்ளி சூரியனைச் சுற்றி வர, பூமியின் நாள் கணக்கின்படி 225 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. எனவே வெள்ளியில் ஒரு நாள் அதன் ஒரு ஆண்டை விட நீளமானது. இது ஆச்சரியமாக இல்லையா?
சரி நண்பர்களே இனி நீங்கள் கூறுங்கள். வெள்ளி பற்றி உங்களுக்கும் ஏதும் சுவாரசியமான விஷயங்கள் தெரியுமா? இதற்குப் பதிலை மட்டுமில்லை, எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக எனது முகநூல் பக்கத்தில் (www.facebook.com/scinirosh) அறியத்தாருங்கள்!
3,690 total views, 3 views today
1 thought on “வெள்ளி ஏன் சூரிய குடும்பத்தின் விசேஷ கொள் ?”