குடியிருந்த கோயில்

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை அவரது ரசிகர்களும், மக்களும், தொண்டர்களும் மிகப்பெரிய அளவில் கொண்டாடுவார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் தனது பிறந்த நாளை அதிகம் கொண்டாடியதில்லை. அந்த நாள் அவருக்கு பரவசமான நாளாகவும் இருந்ததில்லை என்பது தான் உண்மை. அவரோடு இருந்த மக்களுக்கே அது மிகப்பெரிய வியப்பைக் கொடுத்தது. ஒரு முறை அவரிடம் வெளிப்படையாகவே கேட்டு விட்டார்கள்.

“பிறந்த நாள் தான் ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய மலர்ச்சியைக் கொடுக்க வேண்டிய நாள். சந்தோசமா இருக்க வேண்டிய நாள். நீங்க மட்டும் இந்த நாளில் மௌனமாகவும், கொஞ்சம் கவலையாகவுமே இருக்கிறீர்களே? ஏன் “

அதற்கு எம்.ஜி.ஆர் சொன்ன பதில் மெய் சிலிர்க்க வைக்கிறது.

“நான் பிறந்த நாள் ஏன் கொண்டாடறதில்லைன்னு கேக்கறீங்க. கொஞ்சம் யோசிச்சு பாருங்க,  இந்த நாளில் தானே என்னைப் பெற்றெடுக்க என் அம்மா கதறியிருப்பார்கள். இந்த நாளில் தானே அவர்கள் வலியால் துடியாய்த் துடித்திருப்பார்கள். என் அம்மாவின் பிரசவ வலி தான் இந்த நாள் முழுவதும் எனது கண்களிலும் மனதிலும் இருக்கிறது. இந்த நாளைக் கொண்டாடவேண்டும் என நினைக்கும் போதெல்லாம் எனக்குக் கூசுகிறது. மிகப்பெரிய தயக்கம் வருகிறது. என் அம்மா வலியால் துடித்த நாளை நான் கொண்டாடுவது நியாயமா என்ன ?”

எம்.ஜி.ஆர் சொன்ன இந்த வார்த்தைகள் அவர் தனது அன்னையின் மீது எந்த அளவுக்கு அன்பு வைத்திருந்தார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அவர் தனது படங்களில் கூட அம்மாவை போற்றும் காட்சிகளைத் தான் வைத்திருப்பார். ஏன், படத்தின் தலைப்புகளில் கூட எம்.ஜி.ஆரைப் போல அம்மாவைச் சிறப்பு செய்த நடிகர் உண்டா என்பது சந்தேகமே.

தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, தாய் மகளுக்குக் கட்டிய தாலி, தாய்க்குத் தலை மகன், தெய்வத் தாய், தாயின் மடியில், தாயைக் காத்த தனையன் என எக்கச் சக்க படங்கள் அம்மாவை குறிப்பிடுவனவாக அமைந்தது மிகச் சிறப்பு !

காற்றில்லாத‌ பூமியும், ஊற்றில்லாத நீர்நிலையும் போல அன்னையில்லாத வாழ்க்கையும் வறண்டே போகும். தமிழ் இலக்கியமும், கலாச்சாரமும் அன்னையை எப்போதுமே முதலிடத்தில் தான் வைத்திருக்கின்றன. இறைவனையே மூன்றாவது இடத்தில் தள்ளி அன்னையை முதலிடத்தில் அமர வைத்தது தான் நம் வரலாறு. மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் வரிசை ஆனாலும் சரி, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எனும் கொன்றை வேந்தனானாலும் சரி, ஆதி பகவன் எனும் குறளானாலும் சரி, எங்கும் எதிலும் அன்னையே முதன்மையாய் !

அன்னை நாம் குடியிருந்த கோயில். ஆலய கருவறை அல்ல, அன்னையின் கருவறையே நமக்கு முதலில் பரிச்சயமானது. சதையாலான வீடே நாம் முளை விட்ட முதல் நிலம். தொப்புள் கொடியில் ஒரு பட்டமாய் முதலில் நாம் பறந்தது அங்கே தான். விரல் விரித்து, கால் உதைத்து நாம் முதலில் குதித்து விளையாடிய இடம் தண்ணீர் குளமல்ல, பன்னீர் குடம்.

தொட்டும் தொடாத தூரத்தில் முதன் முதலில் வருடிச் சென்றது அன்னை விரல்கள் தான். பேசாக் கடவுளுடன் பேசிக் களிக்கும் பக்தனைப் போல, வயிற்றுச் சுவருக்குள் வாகாய் நாம் கிடக்கையிலே,  செல்லம் கொஞ்சிச் சிரித்து மகிழ்ந்தது அன்னையின் குரல்கள் தான். எப்பக்கம் படுத்தாலும் பிள்ளைக்கு வலிக்குமோ என தூங்காமல் தவமிருந்தே சோராமல் சோர்ந்தவைஅன்னை இமைகள் தான்.

பசிக்காமல் உண்டு, குடம் குடமாய் தண்ணீர் குடித்து, எடை இழுக்க நடை தளர நடைப்பயிற்சி செய்து, பிடித்தவற்றை ஒதுக்கி பிடிக்காதவற்றை விரும்பி, தன் குழந்தைக்காய் வாழ்க்கையை அர்ப்பணிப்பது ஒரு அன்னையைப் போல வேறு யாருமே இல்லை. தன் மழலையின் பாதம் பூமிக் காற்றை முத்தமிடும் போது வலிமையாய் இருக்க வேண்டுமென்றே அன்னை ஆசிக்கிறாள். அதற்காகவே அத்தனை வலிகளையும் வலிமையாய்த் தாங்கிக் கொள்கிறாள். பதிலுக்கு அவள் எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே !

குழந்தையின் முதல் அழுகை, அன்னையின் தேசிய கீதம். பிந்தைய அழுகைகள் அன்னையின் துடிப்பின் கணங்கள். முதல் புன்னகை அன்னையின் பரவச தேசம். தொடரும் புன்னகைகள் பரவச தேசத்தின் பளிங்கு மாளிகைகள். ஏழு கடல் ஏழு மலை தாண்டி கிளியின் உடலில் உயிரை வைக்கும் மந்திரவாதியைப் போல, தனது உயிரை அள்ளி குழந்தையின் உடலில் வைத்து உலவ விடுகிறாள் அன்னை.

அந்தக் குழந்தையின் வளர்ச்சி தான், அவளுடைய மகிழ்ச்சி. அந்த குழந்தையின் வெற்றி தான் அவளுடைய வெற்றி. அந்தக் குழந்தையின் புன்னகை தான் அன்னையின் புன்னகை. அந்தக் குழந்தையின் கண்ணீர் தான் அன்னையின் அழுகை. ஜீவனோடு கசிந்துருகி இரண்டறக் கலந்து இளைப்பாறுவாள் அன்னை. பதிலுக்கு அவள் எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே !

பால்யப் பருவத்தில் தோளில் தாங்கி, பதின் வயதுப் பருவத்தில் நெஞ்சில் தாங்கி, இளைய பருவத்தில் இதயத்தில் தாங்கி, மரணம் வரைக்கும் உயிரில் தாங்குவாள் அன்னை. குயவன் ஒரு பாண்டத்தைச் செய்வது போல அன்னை ஒரு குழந்தையை வனைகிறாள். குயவன் மண்ணினால் வனைகிறான், அன்னையோ தன்னையே குழைத்து வனைகிறாள்.

அத்தகையை அன்னையைத் தொழுதும், இதயத்தில் அவளைத் தாங்கியும் வாழும் பிள்ளைகள் வாழ்க்கையில் உயரிய நிலைகளில் இருக்கிறார்கள். தன்னை அடிக்கும் மகனைக் கூட, “சாப்பிட்டுப் போடா ராசா’ என கண்ணீரைத் துடைத்துக் கொண்டே சொல்லும் அன்னையின் மனம் வேறு எங்கும் காணக் கிடைக்காதது !

அன்னையை அன்பு செய்வது பிள்ளைகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஆனந்த வாய்ப்பு. அன்னையின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் பிள்ளைகள் வாழ்வின் உன்னத நிலைகளை அடைகின்றனர். அன்னையின் தலைகோதும் விரல்களுடன் வாழும் பிள்ளைகள் ஆசீர்வாதங்களோடு வாழ்கின்றனர் தொலைவில் இருந்தால் தினமும் தொலைபேசியிலேனும் அவர்களுடன் பேசுங்கள். வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்து கொள்வீர்கள்.

அன்னையைப் போற்றுங்கள். அவர்கள் இல்லையேல் இந்த பூமியில் உங்கள் முதல் மூச்சு விழுந்திருக்காது ! அன்னையைப் போற்றுங்கள், அவர்கள் இல்லையேல் இந்த பூமியில் உங்கள் முதல் குரல் ஒலித்திருக்காது ! அன்னையைப் போற்றுங்கள், அவர்கள் இல்லையேல் அன்பின் பொருள் உங்களுக்குப் புரிந்திருக்காது !

அன்னையைப் போற்றுங்கள், அவர்கள் இல்லையேல் தியாகத்தின் வடிவம் உங்களுக்கு விளங்கியிருக்காது !

உங்கள் பெற்றோரை உங்கள் அன்பின் வளையத்திலேயே வைத்திருங்கள். உங்கள் பெற்றோருக்கு நீங்கள் செய்யும் அதிகபட்ச அன்பு அது தான். முதிர் வயதில் அவர்களுடைய பேச்சை அருகமர்ந்து கேளுங்கள், நீங்கள் செய்யும் அதிகபட்ச மரியாதை அது தான். அவர்கள் கரங்களைக் கோர்த்துக் கொண்டு அமைதியாய் அமர்ந்திருங்கள், நீங்கள் அளிக்கும் அதிகபட்ச நிம்மதி அது தான்.

அவர்கள் வேண்டுவதெல்லாம் உங்களுடைய ஆறிலக்க வருமானமல்ல, ஆறுதலான வார்த்தைகள் தான். முதியோர் இல்லத்தின் முற்றங்களில் அவர்களின் அன்பை புதைக்காதீர்கள். நிராகரிப்பின் வீதிகளில் அவர்களுடைய நேசத்தை அவமதிக்காதீர்கள்.

பூமியில் உங்கள் வாழ்க்கை வளமானதாகவும், ஆயுள் நீளமானதாகவும் இருக்க பெற்றோரை அன்பு செலுத்த வேண்டும் என்கிறது கிறிஸ்தவம்.

அன்னையை நேசிப்போம்

வாழ்க்கை அர்த்தம் பெறும்.

Xavier

2,880 total views, 6 views today

1 thought on “குடியிருந்த கோயில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *