உன்னை அன்றே கண்டிருந்தால்
பல்வேறு முகங்களுடன் உறவாகத் தினம் பழக, இன்னும் சொல்லப்போனால் உரிமையுடன் பேச, அரியவாப்பு பெற்றவர்கள் கலைஞர்கள். (ஆண்டாள்)
கலைஞனுக்கு கலைகள் வசப்படுவதுபோல், காதலும் நன்கு வசப்படும். கரையில் வந்து மோதும் கடல் அலைகள்போல் வந்து, வந்து, அவர்கள் காலடியில் காதல் அலைமோதும்.
காதலே கலை என்றாலும், சலனம் இல்லாத மனிதர்களே இல்லை. சலனங்களை சலசலப்பின்றி வென்றவர்களும் உண்டு. வெல்வேன் என்று சலனத்துள் வீழ்ந்தவர்களும் உண்டு.
இங்கே ஒரு பெரும் மிருதங்கக்கலைஞன். அக் கலைஞனுக்கு எதுவித பட்டமும், பதவியும், கிடையாது. பரம்பரையாக வந்த கலையோ என்றால் அதுவும் அறவே கிடையாது. தானாக ஒவ்வொரு நாளாக விரும்பி விரும்பிக் கற்ற கலை. யாரும் சிறப்பாக மிருதங்கம் வாசித்தால் ‘அவன் ஒரு முத்துக்குமார்“ என புகழ்வார்கள். அந்த அளவிற்கு அவன் பெயரே பெரிய விருதாய் விரிந்து கிடந்தது. இன்று 40 வருடங்களாக மிருதங்கம் அவன் வாழ்வின் லயமாகவே உள்ளது.
எத்தனை மேடைகள், எத்தனை பாடல்கள், அத்தனயிலும் முத்திரை பதித்த மிருதங்க கலைஞன் முத்துக்குமார்.
மிருதங்கத்திற்கு இருபக்கம்போல் அவனுக்கும் இருபக்கங்கள்.
மனைவி பேரப்பிள்ளைகள் என அட்டகாசமான ஒரு குடும்பம் ஒரு பக்கம். மறுபக்கம் புதிதாக ஒரு தேடல்….
அவன் மனைவி ஒரு குடும்பவிளக்கு. வீட்டுவேலைகள், வெளிவேலைகள் என அவளாகவே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள். அதிகம் பேச்சு வராது. தொலைபேசியிலும் அதிகநேரம் இருக்கமாட்டாள். தொலைக்காட்சி நாடகம் அறவே பிடிக்காது. காரணம் நாடகத்தில் ஒரு கணவனுக்கு இரு மனைவிகள். மற்றும் திருமணமான பெண்ணை விரும்புதல், போன்ற காட்சிகளை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. பாட்டுமட்டும் கேட்பாள். கர்னாடக இசை பெரிதும் பிடிக்கும்.
முத்துக்குமார் நான்கு மாதமாக ஒரு அரங்கேற்ற நிகழ்வுடன் ஒன்றிப் போயிருந்தார். சாதாரணமாக ஒரு நான்கு வார ஒத்திகையுடனே அரங் கேற்றத்திற்கு வாசிக்கும் முத்துக்குமார், இன்று நான்கு மாதமாக ஒத்திகை என்று அலைகிறார். அந்த அரங்கேற்றம் மூன்றுமாதத்திற்கு முன்பு நடந்திருக்கவேண்டும். அரகேற்றம் செய்ய இருக்கும் ஆண்டாள் சிறந்த நர்த்தகி. அவளது அம்மம்மா இறந்ததால் நடக்க இருந்த அரங்கேற்றம் நின்றுபோனது. இப்போது இந்தமாதம் அரங்கேற்றம். ஒத்திகை தொடர்கிறது.
குமாரின் மிருதங்கவாசிப்புக்கு தாளம் தப்பாது நடன மாடுவாள் ஆண்டாள். எத்தனை அரங்கேற்றங்கள் எத்தினை ஒத்திகைகள் அவற்றில் எல்லாம் காணாத ஒரு மந்திரசக்தியை ஆண்டாள் காலடியில் கண்டு மிரண்டான் முத்துக்குமாரு.
அந்த மந்திரத்தில் அந்தரத்தில் தொங்கி ஊசலாடியது அவன் மனது. அந்த விரல்களின் அழகும்,அந்த பாதங்கள் சுமந்துநிற்கும் சுமையும், அவன் இதயத்தில் கனத்தது. வயது அறுபது. ஆனால் அறுத்துக்கொண்டு ஓடும் வெள்ளாடுபோல் மனம் ஓடியது. காரணம் அவளின் துள்ளும் இளமை மட்டுமல்ல அவள் ஆடும் அற்பதக்கலையும் தான்.
அன்று கே.பாலச்சத்தரின் சிந்துபைரவி படம் பார்த்தபோது எப்படி இந்த அளவு வயது வித்தியாசத்தில் ஒரு இரசிகையை தாயாக்க முடிந்தது. ஜே.கே.பியும் சிந்துவும் கொண்ட உறவு அவனுக்கு ஏற்கமுடியாது இருந்தது. இன்று அந்த உறவே அவனுக்கு முன் வந்து முன்னுதாரணமாக சிந்துபடிக்கின்றது.
ஆண்டாள் தன்னை மறந்து நான்கு மாதமா முத்துக்குமாரின் தாளத்துடன் இணைந்து ஆடப்பழகி விட்டாள்; அவளுக்கு வயது இருபத்தினான்கு. அவள் எங்கோ வீழ்ந்துவிட்டுடேன் என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது.
அது பரதத்தினுள்ளா அல்லது மிருதங்கத்தின் ஒரு அங்கமாகிவிட்டாளா என்பது இன்று வரை அவளுக்கு தெரியவே இல்லை.
முத்துக்குமார் போடும் தாளம் தப்பாது. ஆடும் ஆண்டாளை அவன் ஆளத்தொடங்கினான். கலையில் உள்ள ஆர்வத்தால் வந்த தொல்லை இது. அவர் திருமணமானவர் வயதோ அறுபது. ஆனால் எந்தப் பொண்களுக்கும்; இல்லாத அடக்கம், அவளுள் அடங்கிக்கிடந்து. எந்த சந்தரர்ப்பத்திலும் அவள் தாளம் தவறி ஆடியது கிடையாது. அது மேடையாக இருந்தாலும் சரி வாழ்வாக இருந்தால் சரிதான்.
அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பது முத்துக்குமாரின் கலையானது. முத்துக்குமார் மெல்ல மெல்ல மிருதங்கத்தை நிமிர்;த்திவைத்து சுத்தியலால் சுதி ஏற்றத் தட்டுவது போல் அவளையும் சுத்தி சுத்தி கைகளால் தட்டித் தட்டி கதைக்க ஆரம்பித்தார்.
இதுமட்டுமல்லாமல் இன்றை இளையவர்போல் தொலைபேசியில் உள்ள அத்தனை சலுககைளையும் தன் காதல் கலைவளர்க்கப்பாவித்தான். வட்சப் செய்திகளால் நிரம்பி வழிந்தது.
‘தருவாயா நம் வரவு செலவு கணக்கு பார்க் ,ஒரு நாள். நஷ்டம் என்றாலும் இஸ்டம் தான்” என்று எழுதினான் முத்துக்குமாரு.
பதிலுக்கு ஆண்டாள் : வரவு என்று ஒன்றிருந்தால் செலவு என்று ஒன்று இருக்கும் . இதற்கு என்ன கணக்குபார்க்க இருக்கு என எழுதிவிட்டாள்.
(என்னகொடுமை இந்த தமிழிற்கு எதனையும் இருமுறை வாசித்தால் போதும் இரட்டைக்கருத்தை அது அள்ளி வீசும்.)
நீ பிடிகொடுக்காமல் எழுதுகிறாய். நான் உன்னில் பிடித்ததை எழுதுகின்றேன் எனப்பதில் போட்டான் முத்துக்குமாரு. யாழ்ப்பாணத்தில் மின்வெட்டாலும் அவன் வட்சப்பை தடுக்கமுடியவில்லை. அவன் எந்த நேரமும் புல் சாஜ்யில் இருந்தான்.
அவன்; காதல் வரிகளை காமச்சிதறல்களை எழுதினால் ஆண்டாள் அதனைப் பார்த்தகையோடு தானே அழித்துவிடுவான். அவள் பாரத்தால் போதும் அது இந்த ஜென்மத்திற்கு அது போதும்.
ஆண்டாள் வாசிக்கும் ஒவ்வொரு குறும் செய்திகளும் அவள் இளமையை துள்ளவைத்தது என்பது எப்படி உண்மையோ, அதுபோலவே அந்த துள்ளலுக்கு முத்துக்குமாரின் காதல் காரணம் அல்ல, அந்த வரிகளில் உள்ள காந்தம் மட்டுமே காரணம் என்பதும் பேருண்மையாகும்.
கண்ணதாசனின் பாடல்கள் கண்ணதாசனை காதலிக்க வைக்கவில்லை. ஆனால் பலரது காதலுக்கு அதுவே காதல் வரிகளானது போல்தான் முத்துக்குமாரது வரிகளும் அமைந்திருந்தது.
முத்துக்குமார் முதல் முறையாக தன் எண்ணத்தை நேராகவே கேட்டேவிட்டார். அது புதிதாக எதுவும்; இல்லை. வயதானவர்கள் விடும் முதல் காதல் அம்பு அதுதான்
உன்னை நான் முன்பு கண்டிருந்தால்.. நீ இன்னும் முந்திப்பிறந்திருந்தால் …..
நீ என்னை விரும்பியிருப்பாயா என்பதுதான்.
ஆண்டாள் ஒரு கணம் திகைத்தாலும் அந்த கலைஞனின்; அற்புத திறன் அவளை முழுமையாக ஆட்கொண்டிருந்ததால். இது என்ன கேள்வி … அன்று கண்டிருந்தால் நானே கடத்திக்கொண்டு போய் இருப்பேன் என்றாள்.
இப்போ முத்துக்குமாரின் மடியில் இருப்பது மிருதங்கமல்ல. ஆண்டாளேதான்.
இந்த சம்பாஷனை நடந்தது நேற்று காறில் ஆண்டாளை வீட்டில் விடச் சென்றபோது. இரவு 9 மணி இருக்கும். ஆண்டாள் சொன்னது இறந்தகாலம். கடத்திக் கொண்டுபோய் கட்டி இருப்பேன் என்றது இப்போது என்ற பொருளில் இல்லை.
ஆனால் முத்துக்குமார் இறந்தகாலத்தைப் போட்டு நிகழ்காலத்தைப்பிடிக்க முயல்கிறார் என்பதனை ஆண்டாள் இப்போது நன்கு உணர்ந்து கொண்டாள். இந்தக்காலத்துப் பெண்கள் வெளிப்படையாகவே கதைப்பார்கள். அவை சிலசமயம் வயதானவர்களது இளமைப் படலத்தை திறந்துவிடும்.
ஆண்டாள் காறால் இறங்கி வீட்டுக்குள் ஓடியவள். சட்டென திரும்பி வந்தாள். அவள்; யன்னல் அருகே வந்து தனது கைத்தொலைபேசியை விட்டுவிட்டேன் என்று எடுத்தாள். அப்போது கைத்தொலைபேசி காரில் சாச்சரில் போட்டிருக்க வயர் அவளைத் தடுத்து. ஆண்டாள் இன்னும் சற்று குனிந்து எடுத்தாள்.
அவள் குனியவும் இவன் நிமிரவும் விழிகள் இணையவும் வயரைப்பிடுங்கவும் அந்த அசைவில் இருவரது இதழ்களும் ஒரு நொடி முட்டி மோதி விலகின. முத்துக்குமாருக்கோ அவள் முதல் முத்தம்.
தொலைபேசியை எடுத்துக்கொண்டு வெறுப்பு விருப்பற்ற ஒரு ஞானிபோல் விரைந்தாள்.
அவள் திரும்பி பார்ப்பாளா என இவன் மனம் ஏங்கியது. தான் தப்புச்செய்துவிட்டேன் என்பதனைவிட அது தப்பு இல்லை என அவளுக்கு எப்படி புரியவைக்கலாம் என்ற எண்ணமே குமாரிடம் ஓங்கி நின்றது. அவள் திரும்பி பாரக்கவே இல்லை. முத்துக்குமார் பொறுமையாக பாரத்தபடி இருந்தார். காரணம் அவரது முதுமை. அவள் ஒரு ஞானிபோல் நடந்தாலும் அழகாக இருந்தாள்.
இரவு 11.00 ஆண்டாளின் வட்சாப் அடித்தது. ஆம் ஆண்டாள் நினைத்தது போலவே முத்துக்குமாருதான். மறுபுறத்தில் மிருதங்கத்திற்கு சுதியேற்ற கட்டைகளை அடிப்பதுபோல் முத்துக்குமாரு கட்டம் கட்டமாக அடித்து தனக்கேற்ற சுருதியாக ஆண்டாளை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தான்.
ஆண்டாள் முத்துக்குமாருக்கு நீங்கள் திருமணமானவர் எனக்கு குருவானவர் என்று சொல்ல முயலும் வேளை எல்லாம் அவர் தனி ஆவாத்தனம் செய்வார்.
நான் என் மனைவியுடன் மகிழ்வாக இல்லை. குழந்தைகள் பெற்றது எல்லாம் காமத்தின் கூத்திலும் இல்லை. கலையோடு வாழ்வதால் கவலைமறந்து இருந்தேன் இப்படி எல்லாம் நீங்கள் எனக்குச் சொல்லி என்னைத் தேவதையாகப் பார்க்கலாம்.
இந்த ஆண்டாள் காணும் ஆண் ஒரு கலைஞனாக இருந்தால் மகிழ்வேன். ஆனால் மணப்பதற்கு கலைக்கும் அப்பால் சிலவற்றைத்தேடுவேன்.
என் வீட்டில் உங்களை தெய்வமாக மதிக்கின்றார்கள் எனவே நான் நாளை உங்கள் வீட்டிற்கே வருகிறேன். உங்கள் குடும்பத்துடன் ஒரு பொழுது வாழ்கின்றேன். அப்பா அம்மாவிற்கு அரங்கேற்த்திற்கான ஒத்திகை என்று சொல்கின்றேன். ஆனால் அது வாழ்க்கைபற்றிய ஒத்திகை என்பதனை உங்களுக்கு மட்டும் சொல்கின்றேன்.
அதற்காக திட்டமிட்டு உங்கள் மனைவியை எங்கும் அனுப்பவேண்டாம். அந்த அதிஷ்டசாலியை நானும் காணவேண்டும். என்றாள். அவள் அதிஷ்ட சாலி என்றால் அவள் என்னை எந்த இடத்தில் வைத்துள்ளாள் என்பதை சட்டென்று புரிந்துகொண்டான்.
முத்துக்கமாரு வீட்டுவாசல் மணி அடிக்க, வெட்கம் கலந்த மகிழ்வுடன் திறக்கின்றார். ஆண்டாள் ஒரே ஒரு பார்வை. பின் உள்ளே நுழைகின்றாள்.
மனைவி காயத்திரி ஓடிவந்து வா மகளே நான் கொடியில் உடுப்பு காயவிட்டுக்கொண்டு நின்றேன். இந்த மனுஷன் இருந்தா எழும்பாது. தனிய மிருதங்கத்திற்கு சுதி ஏற்றுவதும் தட்டுவதும்தான் பிழைப்பாய்போச்சு. எல்லா வேலையும் நான்தான் பார்க்கணும்.
ஆண்டாள் பலநாள் பழக்கம்போல் நானும் கெல்ப்பணிறேன். என்று காயத்திரியுடன் சென்றாள் ஆண்டாள்.
உடுப்பை காயவிடுகிறாள் காயத்திரி. ஆண்டாளும் அரைவாசி எடுத்து காயவிடுகிறாள். மீதி எடுக்க காயத்திரி உள்ளேசெல்ல. 18வயது இளைஞன் போல் வாசலில் வந்து ஒரு பார்வை பார்கிறார் முத்துக்குமாரு.
ஆண்டாள் விலகிய ஆடையயை ஒதுக்கியபடி
அப்போதே கண்டிருந்தால் நானும்
இதைதான் பண்ணி இருப்பேன்
நேற்றுக் கேட்ட கேள்விக்கு இன்று பதில் இப்ப சொல்லி இருக்கிறேன். மனைவி வேறு! காதலி வேறு!! என்னை அப்போது கண்டிருந்தால் என்னை கட்டி இருப்பாயா என இனி அவரையும் கேட்காதீர்கள்.
அன்று காதலியாக இருந்து இன்று மனைவியாக இருப்பவர்கள் எல்லாம் இதைத்தான் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் என்றாள் ஆண்டாள்.
முத்துக்குமாரு …. அப்படி என்றால் அந்த முத்தத்தின் போது எதிர்க்;கவில்லையே. பின்பும் அதுபற்றி சினக்கவில்லையே. அந்தச் சிறுசிணுங்கல் மட்டும்தான் எனக்கு இப்பவும் கேட்கிறது. அதனை மறந்துவிட்டாயா ஆண்டாள் என படங்களில் வரும் வில்லன்கள்போல் கேட்டான்.
அவள் நிதானமாக முத்தம் !!! எப்போ என்றாள்.
முத்துக்குமாரு நேற்று காருக்குள் நடந்த அந்த நிகழ்வை அவளுக்கு நினைவுபடுத்தினான்.
அவள் திகைத்து நின்றாள். நீங்கள் சொல்லித்தான் அது முத்தம் என்றே தெரிகிறது. அது ஒரு விபத்து. காறின் வெறும் அசைவால் எமது இதழ் முட்டி இருக்கலாம். எத்தனை தடவை என்னை தட்டி தட்டி கதைத்திருப்பீர்கள் அது எந்த உணர்வையும் எனக்குத் தூண்டவில்லையே.
சரி அதை முத்தம் என்றே வையுங்கள் மகிழுங்கள்
அதற்காக மொத்த வாழ்கையையே நான் தொலைக்க முடியுமா?
முத்துக்குமாரின் மனைவி காயத்திரி ஆண்டாள் நீங்கள் பேசிக்கொண்டு இருங்கள் அவருக்கு 12 மணி என்றால் சாப்பாடு மேசையில் இருக்கவேண்டும். என்றபடி அடுப்படிக்குள் நுழைந்தாள்.
வீட்டு வாசலில் ஐயா என்று சத்தம் கேட்க முத்துக்குமாரும் ஆண்டாளும் வாசலுக்கு சென்றனர். மரத்தில் பிடுங்கிய தேங்காயுடன் ஒரு வயதானவர் கம்பீரமாக நின்றார். உங்கமரத்து தேங்காய்தான் என்று முத்துக்குமாரிடம் கொடுத்தார்.
ஆண்டாள் ‘அட டா ஆளைப்பார்க்க வயசே தெரியல்லை என்ன.”
இவரை நான் அப்பவே கண்டிருந்தால் …..
முத்துக்குமாரு மனைவி காயத்திரியும் வாசலுக்கு வந்திட, எங்க வீட்டில் தேங்காய்பிடுங்க வரச்செல்லி இருப்பேன் என்றாள் ஆண்டாள்.
—————————————————————-
— மாதவி
1,147 total views, 3 views today
1 thought on “உன்னை அன்றே கண்டிருந்தால்”