தாய்ப்பால் நீர்தன்மையானதா?
குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை அறியாதவர் எவரும் இன்றைய காலத்தில் இருக்க முடியாது. ஆனால் சில அம்மாக்களும் அம்மம்மாக்களும் ‘தாய் சாப்பிடுகிறாள் இலை, களைச்சுப் போனாள். மாவைக் கரைச்சுக் கொடு’ என்று தூண்டாமலும் இலை.
தன் அழகு கெட்டுவிடும் எனப் பால் கொடுப்பதில்லை எனச் சிலர் தாய்மாரை நக்கல் அடிப்பதும் உண்டு. எவ்வாறாயினும் இவை யாவும் தவறான கருத்துகளாகும். குழந்தைக்கு ஏற்றது தாய்ப் பால் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இருக்க முடியாது. தாயின் பிற்கால் ஆரோக்கியத்திற்கும் பாலூட்டுதல் அவசியமானதே. எல்லாத் தாய்மாரும் போலவே நீங்களும்! உங்கள் குழந்தை பிறந்த உடனேயே அதற்கான உணவு உங்களிடம் தயாராக இருக்கிறது. இயற்கை தந்த வரம் அது.
தாய்ப்பால். அதை குழந்தைக்குக் கொடுக்கத் தவறாதீர்கள். நீடித்த உறவு இருந்தபோதும் தாய்ப்பால் ஊட்டுவதன் முழு வெற்றியும் பலனும் உடனடியாக எல்லோருக்கும் இயல்பாகக் கிட்டிவிடுவதில்லை. முதல் சில தினங்களில் நீங்களும் உங்கள் குழந்தையும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதிலேயே பெரிதும் தங்கியுள்ளது எனலாம். எல்லா முயற்சிகளும் போலவே பயிற்சிக்கப் பயிற்சிக்க பாலூட்டும் உங்கள் வினைத்திறனும் பெருகும். தொடுகையும் அணைத்தலும் அற்புதங்களை நிகழ்த்தும்.
சருமத்துடன் சருமம் படுவதினா உறவு நெருக்கமடையும். குழந்தையுடன் நீங்கள் செலவிடும் நேரம் முக்கியமானது. குழந்தையுடன் உறவுறும் நேரம் அதிகரிக்க உறவின் நெருக்கமும் அதிகரிக்கும். பாலும் சொரியும்.கடும்புப் பால் முதற்பால் அல்லது கடும்புப் பால் பற்றி நீங்கள் அறிவீர்கள். நிறம் சற்று மஞ்சளாக இருப்பதுடன் சற்று தடிப்பாகவும் இருக்கிறது. குறைந்த அளவிற்குள் நிறையப் போசாக்குகள் செறிந்துள்ளன. எனவே குறைந்த அளவையே குழந்தை குடித்தாலும் அதுவே குழந்தைக்குப் போதுமானதாக இருக்கும்.
தொற்று நோய்களைத் தடுக்கும் நோய்களுக்கு எதிரான பிறபொருள் எதிரிகள் (Antibodies) இக் கடும்புப் பாலில் செறிந்திருந்து குழந்தை தொற்று நோய்களுக்கு ஆளாகாமல் பாதுகாக்கின்றது. இவை உங்கள் வாழ்நாள் முழுவதுமாக நீங்கள் நோய்களுக்கு எதிராகப் போராடிப் பெற்ற நோய் எதிர்ப்புக் கவசமாகும்.
உங்களுக்குக் கிடைத்த கவசம் இப்பொழுது உங்கள் குழந்தையையும் பாதுகாக்கிறது. உடனடியாக பாலூட்ட ஆரம்பிக்கும்போது இந்தநோயெதிர்ப்புப் பொருட்கள் முக்கியமாக உங்கள் குழந்தையின் உணவுக் கால்வாயில் படர்ந்து பரவி கிருமிகள் தொற்றாமல் பாதுகாக்கின்றன.
ஒவ்வாமையைத் தடுக்கும் அத்துடன் ஒவ்வாமைகள் (Allergies) ஏற்படாமலும் தடுப்பதாக நம்பப்படுகிறது. அது என்ன ஒவ்வாமை எனக் கேட்கிறீர்களா? எமது பாரம்பரியத்தில் கிரந்தி என்று சொல்வோம். தோற் தடிப்பு, அரிப்பு, தலை அவிச்சல், சளி, மூக்கடைப்பு, தும்மலல் போன்ற பலவும் இவற்றில் அடங்கும். உடனடியாகத் தாய்ப்பால் அதாவது கடும்புப் பால் கொடுக்காது புட்டிப்பால் கொடுக்க ஆரம்பித்தால் மேற் கூறிய பாதுகாப்பு குழந்தைக்குக் கிட்டாமல் கிரந்திநோய்கள் (Atopic) தோன்றலாம். அத்துடன் வயிற்றோட்டம், சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்களுக்கும் ஆளாகலாம். எனவே பிறந்த உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலைத் தவிர வேறெதுவும் கொடுக்காதீர்கள்.
நீங்கள் நோயுற்றால் பாலூட்டும்போது உங்களுக்கு தடிமன், சளி போன்ற தொற்று நோய்கள் வந்தாலல் நீங்கள் தொடர்ந்து பாலூட்டலாமா? நிச்சயம் ஊட்ட வேண்டும். தொற்று நோய்கள் உங்களுக்கு வரும்போது உங்கள் உடல் அதை எதிர்த்துப் போராடுவதால் அதற்கு எதிரான பிறபொருள் எதிரிகள் உங்கள் உடலில் தோன்றும். இவை உங்களது நோயைத் தணிப்பது மட்டுமின்றி குழந்தைக்கும் அதனை தாய்ப்பால் ஊடாக கடத்துகின்றன. அவர்களும் நோயெதிர்ப்பைப் பெறுவார்கள்.
பிறந்த உடன் குழந்தைக்கும் உங்களுக்கும் இரத்த உறவு என்றும் இருக்கவே இருக்கிறது. ஆனால் பிறந்த உடன் குழந்தையுடனான சரும உறவும் நெருக்கமும் அதன் நீட்சிக்கு மிகவும் முக்கியமாகும். பிறந்தவுடன் உங்கள் குழந்தையை உங்கள் சருமத்தில் படவைப்பதால் குழந்தைக்கு உங்கள் சரும வெப்பம் கிட்டும். அமைதிப்படுத்தும், அதன் சுவாசத்தையும் ஒழுங்காக்கும். பெரும்பாலான குழந்தைகள் பிறந்த உடனேயே விழிப் புணர்வுடன் இருக்கும். தாய்ப்பாலை நாடவும் கூடும்.
குழந்தை தாய்ப்பால் அருந்தியதும் உங்கள் உடலானது குழந்தையின் தேவைக்கு ஏற்ப சுரக்கத் தயாராகும். எனவே எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாகப் பாலூட்டலை ஆரம்பியுங்கள். ஊட்டுவது அல்ல தானே குடிப்பது இரண்டு மூன்று நாட்கள் கழிய உங்கள் மார்புகள் கூடுதலாக பருத்து வெப்பமடைவதை உணர்வீர்கள். கடும்புப் பால் கழிந்து பால் அதிகமாகச் சுரக்கத் தொடங்குவதை இது குறிக்கும். எனவே குழந்தை வேண்டுமளவிற்கு அதிகம் பாலூட்ட முயலுங்கள். குழந்தையின் தேவைக்கு ஏற்பவே உங்களுக்குப் பால் சுரக்கும். குழந்தை தனக்குத் தேவையான அளவு தானே உறிஞ்சட்டும். அதிகம் ஊட்ட வேண்டும் என நீங்கள் தெண்டிப்பது அவசியமற்றது. முதல் ஓரிரு நாட்களுக்கு நீங்கள் குழந்தைக்கு ஊட்டுவதாக இருக்கும். அதன் பின்னர் குழந்தைக்கு பழக்கமாகிவிடும். அது தானே தனது தேவைக்கு ஏற்பக் குடிக்க ஆரம்பிக்கும்.
பாலின் தரம் உங்கள் பாலின் தடிப்பு ஆரம்பத்தில் கடும்புப் பாலாக இருந்தது போலன்றி பின் சில நாட்களில் நீர்த்தன்மையாக மாறும். உங்கள் குழந்தையின் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் பாலின் அடர்த்தியும் உள்ளடக்கமும் மாறும். முதல் ஓரிரு நாட்கள் போலன்றி அதன் நீர்த்தேவை அதிகரிப்பதால் அவ்வாறு இருந்தாலும் அதற்குத் தேவையான ஊட்டச் சத்துகள் யாவும் அதில் அடங்கியிருக்கும். தாய்ப்பால் ஊட்டுவது ஓர் அற்புதமான அனுபவம். உங்களுக்கும் குழந்தைக்கும் அது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொடுக்கும். குழந்தை வளர்ந்த பின்னும் அதற்கு தாய்ப்பால் உண்டதால் நல்லாரோக்கியம் தொடர்ந்து கிட்டும், ஊட்டியவருக்கும்தான்! நன்றி:தமிழர் தகவல் – கனடா
— டாக்டர் எம் கே.முருகானந்தன்
1,333 total views, 1 views today
5 thoughts on “தாய்ப்பால் நீர்தன்மையானதா?”