முகப்புத்தகத்தில்; எங்கள் வறுமையின் வலியைப் போட்டு !எமக்கு வலிமை!! சேர்க்காதீர்கள்!!!

மிகப்பெரிய விழா. வாரி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.
மைக் அறிவிப்பை ஒலிபரப்பியது. “இப்போது, ஏழைகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி.”
கூட்டம் கரவொலி எழுப்பியது. பாப்கானைக் கொறித்துக் கொண்டும், ஸ்மார்ட் போனை நோண்டிக்கொண்டும் இருந்த மக்களின் கண்கள் அரங்கை நோக்கின.

“முதலில் கணவனை இழந்த செல்லாயிக்கு ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது”
கூட்டம் கைகளைத் தட்ட, கதர் சேலையோடு அந்த ஏழைத் தாய் மேடையேறினாள். காஸ்ட்லி கேமராக்கள் வெளிச்சத்தை அவள் மேல் விசிறியடித்து புகைப்படங்களாய் அள்ளிக் கொண்டன. ஏழ்மையின் அத்தனை அம்சங்களையும் தன் முகத்தில் போர்த்தியிருந்த அவள் நடுங்கும் விரல்களால் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டாள்.

உடலெங்கும் கூசியது. பணக்காரத்தனத்தின் முன்னால் அருகதையற்ற ஒரு ஏழையாய்த் தன்னை பிரகடனப்படுத்துகிறார்களே என அவளது உள்ளம் குத்தப்பட்டது. கூனிக் குறுகினாள். இருந்தாலும் அந்த அவமானங் களையெல்லாம் புறந்தள்ளி அவள் புன்னகைத்தாள். நாளை பத்திரிகைகளில் அவள் புகைப்படம் வரக்கூடும். மேடைபோட்டு கொடுத்த அவமானம் நாட்டின் பிற இடங்களுக்கும் பயணப்படும்.
பணத்தை வாங்கிக் கொண்டு இருட்டில் நழுவி சற்றுத் தொலைவில் இருந்த குடிசையை நோக்கி நடந்தாள் செல்லாயி. குடிசைக்குள் ஓரமாய் அமர்ந்து இயலாமையின் சுவர்களில் நகத்தால் சுரண்டிக்கொண்டிருந்தாள் பருவம் தாண்டிய அவளுடைய மகள்.

நம்மைச் சுற்றிலும் செல்லாயிக்கள் நிரம்பியிருக்கின்றனர்.

நான் பிறரிடம் ஏந்திப் பிழைக்கும் சாதி என பிரகடனம் செய்ய பத்திரிகைகளிலும் முகப்புத்தகத்திலும் என் புகைப்படத்தை வெளியிட்டு பரப்புரை செய்தீர்கள். எனக்கு கைக்குட்டை வழங்குவதற்காக என் ஆடைகளை உரிவதைப் போல அவஸ்தையைக் கொடுத்தீர்கள். பெற்றுக் கொள்ள வேண்டிய சூழல், ஏற்றுக் கொள்ள முடியாத அவஸ்தை.

ஏழைக்கு உதவ வேண்டும் எனும் எண்ணத்தை விட, நான் தர்மவான் என்று காட்டிக்கொள்வதையே இன்றைய சமூகம் விரும்புகிறது.

எல்லோருமே இறைவனின் பிம்பங்கள் தான். இறைவனின் படைப்பில் வேறுபாடு இல்லை. ஏழையின் இதயத்துக்கும், பணக்காரனின் இதயத்துக்குமிடையே இறைவன் டிசைனில் வேறுபாடு காட்டவில்லை.

ஏழையில் இரத்தப் பிரிவுக்கும், பணக்காரனின் இரத்தப் பிரிவுக்கும் கடவுள் எந்த பாகப்பிரிவினையும் செய்யவில்லை.
உனக்கான நாளுக்கு இருபத்து நான்கு மணிநேரமெனில், ஏழைக்கும் அது தானே வழங்கப்பட்டிருக்கிறது. உனக்கான சூரியனும் ஏழைக்கான சூரியனும் ஒன்று தான் ! உனக்கும் அவனுக்கும் இரவில் உதிப்பது நிலா தான். இறைவன் அனைத்தையும் பொதுவில் வைக்க, மனிதன் மட்டுமே பொதுவையும் தனக்குள் பதுக்கினான்.

பொருளாதாரத்தில் பல் பிடித்து, அந்தஸ்தின் கணக்கு பார்த்து வாழ்கின்ற வாழ்க்கை செயற்கையின் வெளிப்பாடு. இயற்கை விரும்பிய வாழ்க்கையும், இறைவன் விரும்பிய வாழ்க்கையும் அதுவல்ல. உடலின் உறுப்புகள் போல சமூகத்தின் மனிதர்கள் இணைந்து வாழ்தலே சிறப்பான வாழ்க்கை !

ஏழைகள் எதிலும் குறைந்தவர்களல்ல. அவர்களுக்கு பொருளாதாரம் மறுக்கப்பட்டிருக்கிறது, நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அது ஒன்றே வேறுபாடு. இருப்பவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்வதே தேவையானது. இல்லாதவர் குறைந்தவருமல்ல, இருப்பவர் பெரியவருமல்ல. இந்த வாழ்க்கையை முடிக்கும்போது வங்கிக் கணக்கின் அடிப்படையில் பேரின்ப வீடு ஒதுக்கப்படுவதுமில்லை.

உதவி என்பது பிறர் அறியாமல் செய்ய வேண்டியது. வலது கை செய்யும் உதவி இடது கைக்குக் கூட தெரியக் கூடாது இது கர்ணனின் கொடையுள்ளம்.

நாமோ ஊருக்கே விளம்பரம் செய்து தான், நாலுபேருக்கு பருக்கைகள் கொடுக்கிறோம்.

மகளுக்கு உதவி செய்வதை விளம்பரம் செய்யும் தந்தையில்லை. மனைவிக்கு சேலை வாங்கிக் கொடுப்பதை போஸ்டர் அடித்து பிரபலப்படுத்தும் கணவன் இல்லை. தந்தைக்கு உணவளிப்பதை தரணிக்கே சொல்லும் மைந்தன் இல்லை. அத்தகைய அன்புதான் அவர்களுக்குத் தேவையானது.

முகப்புத்தகத்திலும் பத்திரிகைகளிலும் தலைகுனிந்து தன்மானம் இழந்து நிற்கும் எங்கள் படங்களைப் போடாதீர்கள். உங்கள் படங்களைப் போடுங்கள். கொடுக்கும்போது உங்கள் முகம்தானே தெரியும். எங்கள் பின்பக்கம்தானே தெரியும். அதுவே உங்கள் சேவைக்கு சாட்சியாக இருக்க போதுமானது. எங்கள் பின்பக்கம் தான் உங்கள் உதவியின் பின்னணியாக இருக்கட்டும்.

அதன் மூலம் எங்களுக்கு உதவ முன்வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம். நீங்கள் எங்கள் படங்களைப் போடுவதற்காக கூறும் காரணங்களுக்கும் இது மாற்றீடாகவும் அமையலாம்.

பொது நிறுவனங்களுக்கு நீங்கள் அளிக்கும் உதவியை படம்பிடித்துப் போடுங்கள். அது சேவையாளரும் சேவையாளரும் கைகுலுக்கும் ஆனந்தக் காட்சியாக அமையட்டும்.
உண்மையான உதவி என்பது முதலில் ஏழைகளை ஏழைகளாய்ப் பார்க்காமல் சக தோழர்களாய்ப் பார்ப்பது தான். அவர்களை எந்த வகையிலும் தன்னை விடக் குறைந்தவர்களாய்ப் பார்க்காமல் இருப்பது முதல் தேவை.

ஏழைகளுக்குத் தேவை நமது பொருளாதாரப் பகிர்தல் மட்டுமல்ல, அன்புப் பகிர்தல். அவர்களோடு நாமும் இணைந்திருக்கிறோம் என அவர்கள் நினைத்தால் அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல். அதுவே ஆகப்பெரிய அன்பு.
ஒரு ஏழைக்கு உதவி தேவையெனில் அவர்களுடைய குடிசைக்குச் சென்று ரகசியமாய் கொடுத்து வாருங்கள். உங்களுடைய பணத்தின் எண்ணிக்கையல்ல, உங்கள் மனதின் எண்ணங்களே முக்கியம். உள்ளதைக் கொடுப்பதும், அவர்களுக்கு உங்கள் உள்ளத்தைக் கொடுப்பதும் தான் மிகவும் முக்கியம்.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ஒரு செய்தியைச் சொன்னார். அவர்களுடைய ஆலயத்தில் ஏதேனும் ஏழைக்கு உதவி தேவைப்பட்டால் வசதி இருப்பவர்கள் பணத்தை ஒரு கவரில் போட்டு அவர்களுக்குத் தெரியாமல் அவர்களிடம் எப்படியாவது சேர்த்து விடுவார்களாம். யார் கொடுத்தது, யார் கொடுக்கச் சொன்னது என்பதை அறியாமலேயே அந்த ஏழைக்குத் தேவையான பணம் சென்று சேர்ந்து விடும்.

நமது ஈகை மறைவாய் இருக்கும் போது, இறைவன் நமக்கு பிரதிபலன் தருவார். நமது ஈகை தம்பட்டமாய் இருக்கும் போது இறைவனின் ஆதரவு அதற்கு எப்போதும் இருப்பதில்லை. அத்தகைய செயல்கள் நிச்சயம் பயனற்ற செயல்களாகவே முடிந்து விடும். விண்ணகத்தின் குறிப்பேட்டுக்கு அது எந்த ஒரு நல்ல செய்தியையும் அனுப்பாது.

பிறருக்கு உதவுவது போல மகிழ்ச்சியான செயல் எதுவும் இல்லை. பிறருக்கு உதவக் கூடிய அளவுக்கு இறைவன் நம்மை வைத்திருக்கிறார் எனில் அது மிகப்பெரிய வரம் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை.

ஏழைகளை கனிவுடன் நோக்குவோம். அவர்கள் இறைவனின் குறைப்பிரவசங்களல்ல, நமது மனதின் இரக்கத்தை அளந்து பார்க்க அனுப்பப்பட்டவர்கள். நம்மிடம் இருப்பது கர்வமா கருணையா என்பதை கண்டறிந்து சொல்பவர்கள் இவர்கள் தான்.

மனதை மாற்றுவோம். ஏழைகள் நமது உயிரின் பாகங்கள். அவர்கள் நமது சகோதரர்கள், சகோதரிகள். அவர்கள் இந்த மண்ணில் நம்மோடு பயணிப்பவர்கள். அவர்களை அரவணைப்போம். அவர்களை கனிவுடன் நோக்குவோம். அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வோம். எந்த வகையிலும் அவர்களுடைய தன்மானம் சிதையாமலும், அவர்களை அவமானம் அணுகாமலும் உதவுவோம்.

முகப்புத்தகத்தில், பத்திரிகைகளில்; எங்கள் வறுமையின் வலியைப் போட்டு எமக்கு வலிமை சேர்க்காதீர்கள்.

–சேவியர்

960 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *