கண்களை மூடித்திறப்பதே இன்று அபாயம்?

இமையாநாட்டம் – கலாநிதி பால.சிவகடாச்சம்

தேவர்களைப்பற்றிய ஏராளமான குறிப்புக்கள் வேதங்கள், புராணங்கள் இதிகாசங்கள் ஆகியவற்றில் காணப்படுகின்றன.
இவர்களுக்கென்று தனியாக ஒரு உலகம் உள்ளதாகக் கூறப்படுகின்றது. தேவர்கள் பூமிக்கு வந்தால் அவர்களின் பாதங்கள் நிலத்தில் படமாட்டா என்று கூறுவர்.

அப்படியானால் இவர்கள் புவியீர்ப்பிலும் பன்மடங்கு ஈர்ப்பு உடைய ஒரு கிரகத்தில் வாழ்ந்துவரும் வேற்றுலகவாசிகளாயிருத்தல் கூடுமோ என்று நான் யோசித்ததுண்டு.
தேவர்களுக்கே உரிய விசேட இயல்புகள் பற்றித் தெரிவிக்கப்படும் செய்திகளுள் ஒன்று அவர்கள் கண்களை இமைப்பதில்லை என்பதாகும். இதனையே இமையா நாட்டத்தோர்’ என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
மீன்கள் கண்களை இமைப்பதில்லை. இந்த இமையாநாட்டத்தைத் தேவர்களே மீன்களுக்கு வரமாகக் கொடுத்தனர் என்னும் புராணக்கதை ஒன்றும் உள்ளது.

தமயந்தியின் பேரழகு பற்றிய செய்தி தேவர்களுக்கும் எட்டிவிட்டது. அவளது சுயம்வரம் பற்றிக் கேள்விப்பட்டதும் தேவர்கள் அதில் கலந்து கொள்ளத் தீர்மானித்தனர்.

தமயந்தி நளன் என்னும் அரசனைக் காதலிப்பதை ஏற்கெனவே அறிந்துவைத்திருந்த இந்திரன் முதலான தேவர்களுள் ஒருசிலர் நளனது உருவத்திலேயே சுயம்வரத்தில் கலந்துகொண்டு தமயந்தியைத் திகைக்கவைத்தனர்.

எனினும் சிறந்த புத்திசாலியான தமயந்தி நளன் உருவத்தில் இருந்த தேவர்களை அவர்களுக்கே உரிய சில அடையாளங்களின் மூலம் தெரிந்து கொள்கின்றாள். ஒருவனுக்கு மட்டும் கண்கள் இமைக்கின்றன. காலடிகள் நிலத்தைத் தொடுகின்றன. அணிந்திருக்கும் வர்ணப்பூமாலை வாடிவிட்டது. இவனே தன் காதலனாகிய மனிதகுல நளன் என அறிந்துகொண்ட தமயந்தி அவனுக்கே மாலையிட்டாளாம்.

கண் இமைத்தலால் அடிகள் காசினியில்
தோய்தலால்
வண்ணமலர்மாலை வாடுதலால் – எண்ணி
நறுந்தாமரைவிரும்பு நன்னுதலே யன்னாள்
அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு.
(நளவெண்பா 150)

தேவர்கள் ஏன் கண்களை இமைப்பதில்லை என்பதற்குப் பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் காரணம் கூறுகின்றார்.

முன்னின்று ஒருவன் முகத்திலும் வாயினும்
கன்னின் றுருகக் கலந்துரைத்து- பின்னின்று
இழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர்
விழித்திமையா நின்ற நிலை
(அறநெறிச்சாரம் 38)

ஒருவரின் முகத்துக்கு நேரே கல்லையும் உருக்கும் கனிவான சொற்களால் இனிக்க இனிக்கப் பேசிவிட்டு அவர் அங்கிருந்து சென்று கண்மூடித்திறக்கும் நேரத்துள் அவரைத் தூற்றிப் பேசும் ‘பெரியோர்கள்’ (?) வாழும் உலகில் கண்களை மூடித்திறப்பதே அபாயம் என்று கருதியே இங்கு வரும் தேவர்கள் தம் கண்களை இமைப்பதில்லை என்கிறார் இப்புலவர்.

Why don’t Devas blink their eyes?

Devas are benevolent supernatural beings in the Vedic era literature, with Indra as their leader. Deva means “heavenly, divine, anything of excellence”. Devas are believed to dwell in a eavenly planet. Indian religious texts attribute various characteristics to these mystical creatures.

Whenever they visit the earth their feet do not touch its surface. This description once compelled me to visualize them as alien visitors from another planet whose gravitational force is many imes greater than that of our earth. Another quality of devas as described in texts is that they never blink their eyes.

In the love story of Damayanthi and Nala, Indra, the king of Devas and four of his companions attend the ‘chuyamvaram’ (public choice of a consort by a princess from a company of suitors) of Damayanthi in the hope of marrying her. As they already knew Damayanthi had fallen in love with a prince called Nala, the Devas present themselves at the’chuyamvaram’ all of them assuming the physical form of Nala.

However, Damayanthi was able to identify her human lover by noticing his blinking eyes since she knew Devas never blink their eyes.

An ancient Tamil poet attributes this characteristic of the Devas to their distrust of humans who converse very sweetly in front a person but gossip very badly about him as soon as he moves away.

நன்றி: தமிழர் தகவல்- கனடா

644 total views, 1 views today

1 thought on “கண்களை மூடித்திறப்பதே இன்று அபாயம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *