நாங்கள் ஏன் நகங்களைக் கடிக்கின்றோம்?

நீங்கள் எல்லோருமே ஒரு விஷயத்தைக் கவனித்திருப்பீர்கள். உங்களைச் சுற்றி இருக்கும் யாராவது ஒருவர், அல்லது ஏன், நீங்களும் கூடு ஒரு விஷயத்தைச் செய்வீர்கள். அது என்ன தெரியுமா? நகத்தைக் கடிப்பது. அதுவும் காரணத்துடன் இல்லை, சும்மா ஒரு காரணமுமே இல்லாமல் கண்டபாட்டுக்கு எல்லாம் நகத்தைக் கடிப்பதை அவதானித்திருப்பீர்கள் அது சரி தானே? ஆனால் இப்படி நகத்தைக் காரணம் ஒன்றும் இல்லாமல் தானா கடிக்கின்றோம்? இல்லவே இல்லை!

ஏன் அவசியமின்றி நகங்களைக் கடிக்கிறோம் என்பதைப் பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யப் பட்டது. அந்த ஆராய்ச்சியின் படி, வயது எல்லை ஒன்றுமே இல்லாமல், அனைவரும் நகம் கடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நடுத்தர வயதுடையவர்களில், 20 சதவீதத்தினர் நகங்களையோ அல்லது பென்சில் போன்ற ஏதாவது பொருள்களைக் கடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்த ஆராய்ச்சி மேலும் கண்டுபிடித்த விஷயம் என்னவென்றால், பெரும்பாலும் தங்களது செயல்களில் வெற்றியடையும் மனிதர்களே நகங்களைக் கடிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்கள் என்பது தான்.

109 நபர்களைக் கொண்டு மேற்கொள்ளப் பட்ட மற்றுமொரு ஆராய்ச்சியில், நகம் கடிப்பவர்களில் 89 சதவீத நபர்கள் தங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்கிற பயம் கலந்த தாழ்வு மனப்பான்மை உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவர்கள் தங்களுக்குப் பாதகமான சூழ்நிலைகளில் அதிகமாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையும், அதே நேரம் தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளில் குறைவாக அல்லது நகங்களைக் கடிக்காமலேயே கூட இருக்கும் தன்மையையும் கொண்டிருந்தார்கள். தங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத ஒரு நிலையில் தங்கள் நகங்கள் மீது கோபத்தைக் காட்டி விடுபவர்களும் கூட உண்டு.

இது எல்லாம் போதாது என்று இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் நகம் கடிக்கும் பெண்கள் மென்மையாக இருக்கிறார்கள் என்பதும், அதே வேளையில் நகம் கடிக்கும் ஆண்களோ முரட்டுத்தன்மை உள்ளவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இது சுவாரசியமாக இல்லையா?
சரி நண்பர்களே, இனி நீங்கள் கூறுங்கள்! உங்களுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டா? எந்தச் சந்தர்ப்பங்களில் நீங்கள் நகங்களைக் கடிப்பீர்கள்? இதற்குரிய பதிலை மட்டும் இல்லை, எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக எனது முகநூல் பக்கத்தில் (www.facebook.com/scinirosh) அறியத் தாருங்கள்!

–Dr. நிரோஷன்

726 total views, 1 views today

1 thought on “நாங்கள் ஏன் நகங்களைக் கடிக்கின்றோம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *