கார்த்திகை விளக்கீடு ஒரு சிந்தனைக்கு

கார்த்திகை மாதம் வந்து விட்டாலே எங்கும் ஒளி மயமான காட்சிகள் எங்கள் நாட்டில் மட்டுமல்ல மேலை நாடுகளிலும் “கறுப்பு வெள்ளி” என்று இன்று இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு இன்றிலிருந்து புதுவருடப்பிறப்பு வரை வண்ண வண்ண விளக்குகளால் கொண்டாடத் தொடங்கி விடுவார்கள் . இந்தியாவில் விளக்கீடு நாளில் மட்டுமல்லாது கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டின் உள்ளும் புறமும் விளக்கு ஒளிவிடுவதைக் காணலாம்.

இன்றைய காலப்பகுதியில் சம்பிரதாயம் என்று எத்தனையோ விழாக்களை கடைப்பிடிக்கும் நாம் எமது சந்ததிகள் இவை சார்ந்து எழுப்புகின்ற அறிவியல் சார்ந்த வினாக்களுக்கு சாக்குப்போக்கு சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றோம். பல பெற்றோர் தமக்கு தெரியாத விடயங்களை தங்கள் பிள்ளைகளிடம் ஒத்துக் கொள்வதையே கௌரவக் குறைவாக எண்ணுகின்றனர் . இதனால் தவறானவற்றை சரியாக்கும் விவாதங்களிலும் வென்றுவிடத் துடிப்பார்கள். அல்லது சாமி கண்ணைக் குத்தும் என்பார்கள். சரியான முறையில் சொல்லிக்கொடுக்கும் விடயங்களே காலங்களை கடந்தும் கடைப்பிடிக்கப்படும்.

விளக்கீடு ஏன் ஏற்படுத்தப்பட்டது என்று சிந்திப்போம்;.

காலநிலை பருவ மாற்றங்களில் வருடத்தின் வெயில் காலப் பகுதிகளில் பகல் பொழுது அதிகமாகவும், குளிர்காலம் மற்றும் மாரி மழைக் காலங்களில் இராப் பொழுது அதிகமாகவும் இருக்கும். மழை மேகங்கள் நட்சத்திர வெளிச்சங்களை கூட ஊடுருவ விடாது அடர்ந்த கரிய இருட்டுடன் ஐப்பசி மாதத்தில் தொடங்குகின்ற அடை மழையானது நிலப்பகுதியை குளிர்விக்கத் தொடங்கும். கார்த்திகை மாதம் ஆரம்பிக்கும் போதே நிலத்தடி நீர் உயர்வு காணத் தொடங்கிவிடும். இதுவரை நிலத்தின் குளிர்ச்சியோடு போராடிக் கொண்டிருந்த நிலத்தை அண்டி வாழும் சிறு பிராணிகள், ஊர்வன, விஷப்பூச்சிகள் , பாம்பு ,தேள் இப்படியான உயிரிகள் நீர் பற்று குறைந்த பகுதிகளை நோக்கி நகரத் தொடங்கிவிடும். இப்படியான இயற்கை சூழலில் வாழ்பவர்கள் இந்த மாதங்களில் தெருவெங்கும் வாகனங்களில் நசுக்கப்பட்டு இறந்து கிடக்கும் பல வகையான உயிரினங்களை காண முடியும்.

இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன். இப்படியான உயிரிகள் மக்களின் வாழ்விடங்கள் மேட்டுப்பகுதியாகவும், வீடு கதகதப்பாகவும் உள்ளபடியால் நேரடியாக வீட்டை நோக்கி குடியேற எத்தனிக்கின்றன. உயிர் வாழும் நோக்கோடுதான். பொதுவாக விஷப் பிராணிகள் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியே வாழும் இயல்புடையன. எனவே தான் இந்த மாதம் முழுவதும் இருட்டு வேளைகளில் எங்கெங்கே எங்களுக்கு தேவை இருக்குமோ அங்கங்கே தீபங்களும், நெருப்பு பந்தங்களும் ஏற்றி வைக்கப்படுகின்றன. கிணற்றடி, அம்மிக்கல், உரல் , வாயிற்படி, கால்நடைத் தொழுவம், படுக்கையறை, மலசலகூடம் , முற்றம், கொல்லைப்பகுதி இப்படி எல்லா இடமும் அவரவர் வசதிக்கேற்பவும், சேமித்து வைத்திருக்கின்ற எண்ணெய்க்கு ஏற்பவும் விளக்குகள், பந்தங்களை ஏற்றுகின்றனர். பல வீடுகளில் பழுதடைந்து சக்கு பிடித்த தேங்காய் எண்ணெய்யை வீணாக்காமல் இந்த பந்தங்கள் எரிப்பதற்காகப் பக்குவப்படுத்துவார்கள். இப்படியாக ஏற்றப்பட்ட விளக்குகளின் ஒளியை விலத்திச் செல்லும் இந்தப் பிராணிகள். இன்னுமொரு பயன் அப்படியும் தாண்டி இந்தப் பிராணிகள் நுளைந்து விட்டால் அவற்றை கண்ணால் கண்டு எம்மை பாதுகாத்துக் கொள்ளவும் இந்த விளக்குகள் தான் காவலாளிகளைப் போல் துணை புரிகின்றன. மார்கழி மாதத்திற்குள் இப் பிராணிகள் தமக்கான வதிவிடத்தை தேர்ந்தெடுத்துவிடும்.

இதற்காகவே இப்படியான சம்பிரதாயங்கள் உருவாக்கப்பட்டன. பொது இடங்களில் சொக்கப்பனை என்று மிகவும் உயரமாக பெரு நெருப்பை எரியவிடுவர். வீடுகளில் ஏன்றப்படும் கார்த்திகை தீபம் இறைவணக்கம் என்றால் அவற்றை எப்படி கொல்லைப்புறத்திலும், மலசலகூடங்களிலும் கூட ஏற்ற முடியும். இறைவனுக்கு தேவை என்ற ஒன்றும் இல்லை. எல்லாவற்றையும் படைத்த இறைவனுக்கு தனக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்ள தெரியாதா என்ன? நல்ல சமுதாய பழக்கவழக்கங்களை நடைமுறை மாறாது பேணிக்காக்கவே வழிபாடுகளில் பல நல்ல விடயங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. விதண்டாவாதம் பேசுபவர்கள் விளக்கம் பெறுவதற்கு கூட பொறுமை கொள்வதில்லை.

திருக்கார்த்திகை பௌர்ணமி நாளில் திருவண்ணாமலையில் பெரும் ஜோதி ஏற்றுவார்கள். இறைவன் ஜோதி வடிவான ஒருவனே என்ற பொருள்பட வழிபாடு செய்வார்கள். மழைக்கால இராப் பொழுதுகள் அமைதிக்கும் சமாதானத்துக்கும் வழிவகுத்தாக வேண்டும். இந்தக் காலங்களில் போர் , களவு, வழிப்பறி, தீய ஒழுக்கங்கள் என்பன மேற்கொள்ளப்பட்டால் வெயில் காலங்களை விட மிகப் பெரும் பாதிப்பு உண்டாகும். மக்கள் தம்மை பாதுகாத்து கொள்வதும் சிரமம். எனவே இவை பிரார்தனைகளுக்கான மாதங்களாகி விட்டன. மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை , திருவெம்பாவை பாடிக் கொண்டு ஊர்வலம் வந்து அதிகாலை இறைவழிபாடு, பாவை நோன்பு என்பனவும் நல்லதொரு ஊர்க்காவல் முறையாகும். மற்றும் அந்தக்காலத்தில் கிடைக்கின்ற உயர்ந்த பிராண வாயுவை பெற்று வருடம் முழுக்க ஆரோக்கியமாக வாழும் வழிதான்.
புராணங்களோடு ஒப்பிடாமல் வெறுமனே புத்திமதியை அந்தக் காலத்திலும் மதிக்கவில்லை போலும். மனித மனம் அப்படி.

இது தவிர கோடை காலத்திலும் காண்டாவனம் என்று சொல்லப்படுகின்ற அக்கினி வெயில் வைகாசியில் முடிய அதன் காரணமாக ஆடி மாதம் வறட்சி பட்டினி பஞ்சம் ஏற்பட்டுவிடும். எனவே இந்த மாதத்தில் தெருவெங்கும் அம்மன் ஆலயங்களில் கூழ் வார்ப்பார்கள். இதனால் பட்டினிச் சாவுகள் தடுக்கப்பட்டன. மற்றும் ஆடி மாதம் சக்திவாய்ந்த உயிர்ப்பு மாதம் எனப்படுகின்றது . இந்த காலத்தில் பல்வகை நுண்ணங்கிகள் உயிர்ப்பு பெறுகின்றன. இக்காலத்தில் அம்மை, செங்கமாரி போன்ற வைரஸ் நோய்கள் அதிகம் தாக்கும். எனவே ஆடி உயிர்ப்பு சக்தி மாதம் எனப்படுகிறது. வேப்பிலை , மஞ்சள், மாவிலை என இந்த மாதத்தில் தான் நோய்களில் இருந்து தம்மை பாதுகாக்க நுண்ணுயிர் கொல்லிகள் சமய சடங்குகளில் பாவிக்கப் படுகின்றன.

ஆலயங்களில் பாவிக்கப்படும் துளசி தீர்த்தம், அருகு, வில்வம் , செம்பு பாத்திரம் , மருத்து நீர் என்பன அன்றாடம் நமது வாழ்வில் பாவிக்கப்பட வேண்டும் என நினைவுபடுத்தவும் விழிப்புணர்வுக்காகவும் தான். விக்கிரகங்களின் அடியில் பூசப்படும் மருந்து பலவகையான பொக்கிச மூலிகை நிறைந்து சாற்றப்பட்டு குறிக்கப்பட்ட ஆண்டுகள் இடைவெளியில் மாற்றப்படுகின்றன. இவற்றில் பட்டு வடியும் நீர் ஆரோக்கிய மருந்தேயாகும். ஆலயங்களில் இவற்றை கடைப்பிடித்து வீட்டில் ஏனோதானோ என ஆரோக்கியத்தை கெடுப்பவர்களை என்னவென்பது. இவற்றை தனக்கென கேட்குமளவிற்கு இறைவன் வியாதிக்காரன் அல்ல என்பதை அறிக!

சைவமும் வாழ்வியலைத் தான் சம்பிரதாயங்கள் மூலம் சொல்லித் தந்திருக்கின்றது. மதங்கள் என்பன வழிகாட்டிகளே தவிர பின்பற்றுபவர்களை பாகப் பிரிவினை செய்வதற்கானது அல்ல. எந்தப் பாதையில் பயணித்தால் அந்த சூழலுக்கு சரியாகவும், இலகுவானதாகவும் இருக்குமோ அந்தப் பாதையில் பயணிப்பவர்களை தொந்தரவு செய்து கருத்து திணிப்பு செய்வது கூடாது.

மீண்டும் சொல்ல அனுமதியுங்கள் சமயம் என்பது வாழ்வியல். அதனை தொலைவாக நின்று ஏதோ பிராணியை பார்ப்பது போல் பார்க்காமல் ஆராய்ந்து அறிந்து தேவையானதை தேர்ந்தெடுத்து வாழ்ந்து பாருங்கள் பயன் பெறுவீர்கள். கடவுளைத் தேடி மரத்துக்கு மரம் தாவி ஓடாதீர்கள் கண்டு கொள்ளவே மாட்டீர்கள். ஏனென்றால் உங்கள் தேவை கடவுள் என்றால் அவரே உங்களை தேடி வருவார். உங்கள் கடவுள் எல்லாவற்றையும் படைத்தவர் என்றால் அவரே உங்களிற்கும் தற்போது நீங்கள் இருக்கும் இடத்திற்கும் சொந்தக்காரர். (அண்டத்தின் துளி நீ உனக்குள்ளும் ஒரு பேரண்டம்)

நன்றி
அன்புடன் ஹரிணி

730 total views, 1 views today

1 thought on “கார்த்திகை விளக்கீடு ஒரு சிந்தனைக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *