நன்றி மறந்தவர்க்கு உய்வுண்டா?
நன்றி என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது ஒளவையார் சொன்ன
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்
என்னும் வரிகளே ஞாபகத்திற்கு வருகின்றன. வேர்களின் மூலம் பெறுகின்ற நீர் மனிதனால் கொடுக்கப்பட்டதாக இருக்கலாம். வானிருந்து வந்த மழையின் மூலம் பெற்றதாக இருக்கலாம். ஆனால், கிடைக்கும் பலனோ மனிதனுக்குத்தான். தான் பெற்ற நீரைத் தண்ணீராக மனிதனுக்கு தென்னை மரம் இளநீராகத் தருகின்றது. வானுக்கு நீராக எப்படி நன்றிக் கடனாகச் செய்ய முடியும் என்றால், வியர்வைத் துளியாகவும், ஏதோ வழியாகவும், அந்நீர் திரும்பவும் வானத்திற்குச் சென்று விடுகின்றது. இவ்வாறே சுழற்சி முறையில் நன்றி செய்தவருக்குச் சென்றடையும் என்பதே உண்மை. நாம் ஒருவருக்கு உதவி செய்கின்றோம். அதன் பலனை எதிர்பார்த்துச் செய்வதில்லை. “கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே|| என்று கிருஸ்ணபரமாத்மா அர்ச்சுனனுக்குச் சொல்கின்றார். நாம் செய்கின்ற உதவிக்குப் பிரதியுபகாரமாக அவ்வுதவிக்கு நன்றியானது பிறர் எமக்குச் செய்யும் உதவியின் மூலம் கிடைக்கின்றது.
காலம் அறிந்து செய்யும் உதவியானது உலகத்தைவிட பெரிதானது என்று வள்ளுவர் எடுத்துச் சொன்னது எத்தனை உண்மை என்று புரிந்து கொள்கின்றோம். தாயகத்திலே பல கஸ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு பாரிய உதவிகளை இங்கு வாழுகின்ற மக்கள் செய்கின்றார்கள். அவர்கள் நன்றி சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவை செய்யப்படுவதில்லை. ஆனால், அதன் மறுவடிவம் எமக்கு ஏதோ வடிவில் கிடைக்கின்ற போது அவ்வுதவியின் நன்றியை நாம் பெற்றுக் கொள்ளுகின்றோம் என்பது அர்த்தமாகப்படுகின்றது. ஓரிடத்தில் இவ்வளவு செய்கின்றோம் ஒரு நன்றி சொல்லவில்லையே என்று யாருமே கலங்க வேண்டியது அவசியமில்லை. அது உலகின் மூலையின் சேகரிக்கப்படுகின்றது என்பதே உண்மை. சிலர் வார்த்தையால் சொல்கின்றார்கள். சிலர் கண்களின் பரிவினால் காட்டிக்கொள்கின்றார்கள். பெற்றதாய் கற்பப்பையினுள் பாதுகாப்பாக வைத்திருந்து உலகத்திற்கு எம்மை நன்கொடையாகக் கொடுக்கும் போது இந்த உலகத்தின் நன்றியைத் தாய் எதிர்பார்க்கவில்லை. நாள்தோறும் ஊட்டி வளர்த்தபோது பிள்ளை வாயிலிருந்து நன்றி என்ற வார்த்தையைத் தாய் என்றுமே எதிர்பார்த்து இருப்பதில்லை.
கடலில் தோன்றுகின்ற முத்து மனிதனுக்கே பயன்படுகின்றது. மனிதன் கடலுக்கோ சிப்பிக்கோ நன்றி சொல்வதில்லை. எங்கு தோன்றுகிறதோ, அங்கே பரிசளிக்கப்படுகிறது. நன்றி என்பது வெறும் வார்த்தை அல்ல. அது உள்ளத்து உணர்வு. அந்த உணர்வில் நாம் மூழ்கடிக்கப்படும் போது ஏதோ வகையில் அதைத் திருப்பிச் செலுத்த முற்படுகின்றோம். இவ்வுலகிலே நாம் வாழுகின்ற போது ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டுக் கொண்டே இருக்கின்றோம். காலையில் எழுந்து பல் துலக்குவதில் இருந்து உணவு அருந்துவதில் இருந்து ஒருநாள் வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனித்தோமென்றால், பற்பசை உற்பத்தியாளரிலிருந்து மெத்தை தயாரிப்பாளர் வரை நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்களாக முடியும். அங்கே அவருக்கு அளிக்கும் வேதனம் ஏதோ முறையில் எங்கள் நன்றி உணர்வை தீர்த்துவிடுகின்றது. இது உள்ளத்தின் வெளிப்பாடாக இருக்கும் பட்சத்தில் யாருக்கு நாம் நன்றிக்கடன் பட்டோமோ அவருக்கு எம்மையறியாமலே மதிப்பளிக்கத் தலைப்படுகின்றோம். அவர் பண்புகளை ஏற்றுக் கொள்ள முற்படுகின்றோம். அவர் செய்கின்ற தவறுகளை மன்னிக்கத் தலைப்படுகின்றோம்.
ஏனென்றால், இங்கு வள்ளுவரை முன் நிறுத்த ஆசைப்படுகின்றேன்.
~~நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று||
நன்றல்ல என்று நாம் நினைத்து அவரிடம் வஞ்சம் பாராட்டுவதால், எவ்வித இலாபமும் கிடைக்கப் போவதில்லை. காலப்போக்கில் அவரில் மாற்றம் ஏற்படலாம், நன்றல்லாத விடயத்தை நன்றாக்குவதற்குரிய கடமைகளில் அவர் ஈடுபடலாம். காலம் கூடிவரும் பட்சத்தில் நாம் மறந்தது நன்றெனவே எமக்குத் தோன்றும்.
இதைவிட ஒருவருக்கு ஒரு உதவியைச் செய்துவிட்டு அதற்குரிய நன்றியை எதிர்பார்த்திருப்பது முறையாகாது. நல்லது அதாவது நன்று என்ற சொல்லில் இருந்து நன்றி பிறக்கின்றது. நாம் பிறருக்குச் செய்வது நன்று என்றால் அது நன்றியாக உருமாறுகின்றது. ஒருவர் செய்த நல்ல காரியமானது அதனை ஏற்றுக் கொள்பவர்களைப் பொறுத்து அமைகின்றது. பஞ்சமே இல்லாத ஒருவருக்கு அள்ளிக் கொடுப்பதும், பசியே இல்லாத ஒருவருக்கு சமைத்துப் படைப்பதும் எந்தவிதத்தில் நன்றாக முடியும். அதை ஏற்றுக் கொள்பவர் மனநிலை எப்படி இருக்கும். இந்த சந்தர்ப்பத்தில் எமக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியே எமக்குக் கிடைப்பதும், அவர் எமக்குத் தருவதுமான நன்றியுணர்வு என்று ஏற்றுக் கொண்டு எதிர்பார்ப்புக்களைத் தவிர்க்க வேண்டும்.
பொன்னும் பொருளும் அள்ளிக்கொடுத்த மன்னர்களுக்கு பாட்டைத்தவிர வேறு எதுவுமே இல்லாத புலவர்கள் பாடல்களால் புகழ்மாலை சூட்டி நன்றிக்கடனை தீர்த்தார்கள்.
~~மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்
வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என
நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லை என
அறம்பாடிற்றே ஆயிழை கணவ||
என புறநானூற்றுப் பாடலிலே சோழன் குளமுற்றத்துத் துஞ்சி கிள்ளிவளவன் என்னும் மன்னனுக்கு ஆலத்துக்கிழார் பாடுகிறார். தாலி அணிந்த பெண்ணின் கருவைச்சிதைத்தல், பார்ப்பானை அடித்தல் ஆகிய பாவச்செயல்களைச் செய்தவர்களும் கழுவாய் செய்து போக்கிக் கொள்ளலாம். ஆனால், உலகமே கைவிட்டுப் போவதாயினும் நன்றி மறந்தவனுக்கு அப்பாவத்திலிருந்து தப்புவதற்கு வழியே இல்லை. இதேபோல்
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு”
என்று வள்ளுவர் அச்சுறுத்துகின்றார். மனமறிந்து நன்றி செய்வார் அதனை மறந்திருக்க, நன்றிக்கடன் பட்டவர் அக்கடனை எவ்வகையிலும் தீர்த்து வைப்பது இயல்பாக நடக்க வேண்டிய கடமையாகின்றது.
–கௌசி
1,101 total views, 1 views today
நிச்சயமாக இல்லை.