தமிழ் மொழிச் சேவை கலாசார மன்றம்
தமிழ் மொழிச் சேவை கலாசார மன்றம் (Germany, Essen) எசன் தமிழ்ப் பாடசாலையின் 30 வது ஆண்டு விழா 03.11.2018 அன்று பிற்பகல் 2:00 மணிக்கு இப் பாடசாலையின் ஆரம்ப கர்த்தாக்களும் பிரதம விருந்தினர்களுமான திரு திருமதி வேலாயுதம் அவர்களின் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதைத் தொடந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலியின் பின் மன்ற கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. மதகுருமாரின் ஆசியுரை, மன்றப் பொருளாளர் திரு. சு.விக்னேஸ்வரன் அவர்களின் வரவேற்புரை, “சங்க தமிழ் எடுத்து சிந்தையுள்ளம் கவர… என்ற பாடலிற்கான பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம், மன்றத் தலைவர் திரு. சி.சிவஅருள் அவர்களின் தலைமையுரை என்பன இடம் பெற்றன.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. நடனங்கள், நாடகம், பட்டிமன்றம், தாளலயம், கதையும் பாட்டும், வாய்பாட்டு, வயலின், வீணை இசைகள், இசையும் கதையும், கிராமிய நடனங்களான கரகம், காவடி, கோலாட்டம், உழவர் நடனம், திரையிசை நடனங்கள், கவிதை, திரையிசைப்பாடல்கள், பழைய மணவர்கள், பெற்றோர்களின் நிகழ்ச்சிகள் என இடைவெளியில்லாது பார்வையாளர்கள் சளைக்காது மிக தரமாக விறுவிறுப்பாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 4,5 வயது பிள்ளைகளின் நிகழ்ச்சியில் இருந்து 60 வயது வரையானவர்களின் நிகழ்ச்சிகள் வரை மிக மிக காத்திரமாக நடைபெற்றன. இவ்விழாவில் நடைபெற்ற பட்டி மன்றம் புலம்பெயர்ந்து வாழும் மாணவர்கள் தமிழ் கல்வி கற்பது அவசியமா? அவசியமில்லையா? என்னும் தலைப்பில் பாடசாலையின் ஆசிரியர் திருமதி தவக்குமார் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்று அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது.
இவ் விழாவின் இன்னொரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி விருந்தினர்களை மேடைக்கு அழைத்து வந்த முறை. மண்டப முன் வாயிலில் இருந்து தமிழப்; புலவர்களான வள்ளுவன், பாரதி, ஒளவை, ஆறுமுகநாவலர், சோமசுந்தரப்புலவர், விபுலானந்தர் முன்னே அணிசெய்ய சிலம்பு, குதிரை, மயில், புலி, கரகம், காவடி, கும்மி, கோலாட்டம் என்பவற்றின் ஆட்டத்துடன் பறை முழங்கி தொடர்ந்து அணிவகுக்க பின்னே விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர். சபையோரின் கதைதட்டல், பிள்ளைகளின் மகிழ்ச்சியான ஆரவாரங்கள் என மண்டபம் ஒரே குதூகலமாக காட்சியளித்தது. எசன் தமிழப் பாடசாலை என்ற விதையை விதைத்தவர்களான திரு திருமதி வேலாயுதம் அவர்களிற்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து, பூச்செண்டுகள் கொடுத்து கௌரவிக்கப்பட்டார்கள். பின் அவர்களின் சிறப்புரைகள் இடம்பெற்றன.
அடுத்து இப்பாடசாலையில் வருடா வருடம் நடைபெறும் பேச்சுத்திறன், விளையாட்டு போட்டிகளுக்கு நடுவர்களாக கடமையாற்றுபவர்கள், முன்னாள் நிர்வாகிகள், முன்னைநாள் ஆசிரியர்கள், தற்பொழுது பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கல்வியாண்டு 2017-2018 ஆண்டு பத்து, பதினொன்று நிறைவு செய்த மாணவர்கள் போன்றோர் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டார்கள். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களின் உரைகள் இடம் பெற்றன.
வெற்றிமணி பத்திரிகை ஆசிரியர் திரு. மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் ஆண்டுவிழா மலரினை விவரித்து வெளியிட யேர்மன் எழுத்தாளர் சங்கச் செயலாளர் திரு. பொன் புத்திசிகாமணி அவர்கள் முதல் மலரைப் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. சிறுவர்களின் மழலை மொழி கதைகள் நிகழ்ச்சிகளை மெருகேற்றின. பழைய மாணவர்கள் அரங்கிற்கு அழைக்கப்பட்டு பாராட்டப் பட்டார்கள். பாடசாலை பழைய புதிய பெற்றோர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு நிழற் படங்கள் எடுக்கப்பட்டன.
உபதலைவர் திரு. பி.வசீகரன் அவர்களின் நன்றியுரையை தொடர்ந்து விழாவில் நிகழ்ச்சிகள் செய்த பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்களிற்கான சான்றிதழ், ஆண்டுவிழா நினைவுப்பட்டயம் என்பன வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகள் அனைத்தையும் திரு இராயசூரியர் வெகு சிறப்பாக தொகுத்து வழங்கினார். நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பழைய பெற்றோர்களின் ஒத்துழைப்பால் விழா இனிதே அதிகாலை (04.11.18) 1:00 மணியளவில் சிறப்பாக நிறைவடைந்தது.
1,079 total views, 1 views today
1 thought on “தமிழ் மொழிச் சேவை கலாசார மன்றம்”