தமிழர்களின் ஆலயம் முள்ளிவாய்க்கால்

-கல்லாறு சதீஷ் –
யார் சொன்னது முள்ளிவாய்க்கால்
தமிழர் தம் கல்லறை என்று?
கல்லறை வேறு ஆலயம் வேறு
அறிவாயா மகனே?
கல்லறையில் தூங்குவது
வித்துடல்கள்
ஆலயத்தில் இருப்பது
தெய்வங்கள்.
முள்ளிவாய்க்கால்தான்
தமிழர்களின் ஆலயம்.
முஸ்லீம்களுக்கு மக்கா
கிறிஸ்தவர்களுக்கு ரோம்
ஏன் இந்துக்களுக்கு காசி
தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால்.
முள்ளிவாய்க்காலேதான்.
நீ தமிழனாக இருந்தால்
முள்ளிவாய்க்கால் போ.
அந்த பூமிக்கு கண்ணீர்
அபிஷேகம் செய்.
அப்போ அந்த தெய்வங்கள்
மலர்ந்து கண் விழிப்பர்.
அந்தப் பூமியெங்கும்
புஸ்பங்கள் மலரும்.
போகும் வழியெங்கும்
நீ பூசகர்களைத் தரிசிப்பாய்
சிலருக்குக் கால்கள் இல்லை
பலருக்குக் கண்கள் இல்லை
மேலும் பலருக்கு கைகள் இல்லை.
இப்படி தமிழுக்காக தங்கள்
உறுப்புகளைத் தானம் செய்த
தியாக சீலர்கள் தெய்வத்தின்
நண்பர்களாய் தெருவில் திரிவார்கள்.
கவனம் கேட்டுக்கோ
மறந்தும் பணத்தை எடுத்து
அன்பளிப்புச் செய்து விடாதே!
இது அவர்களை அவமதிக்கும்
செயலாகும்.
காரணம் ,அவர்கள் உன்னைப்போல்
அனைத்தும் கொண்டு வாழ்ந்தவர்களே!
கையேந்தி வாழ அவர்களின்
தன்மானம் இடம் தராது
உன்னைப் போலவே!
வங்கியில் உனக்கு கடன்
இல்லாமல் இருக்கலாம்
கடனட்டைகளில் கூட
இல்லாமல் இருக்கலாம்
ஆனால் இன்று நீ வாழும் வாழ்வு
அவர்கள் தந்த கடன்.
நீ தரும் அன்பளிப்பை வாங்க
மறுக்கும் அந்த மாந்தர்கள்
இப்படித்தான் நினைப்பார்களோ?
“நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல,
மொழி வாழ உறுப்புகளைத்
தானம் தந்தவர்கள்.
தமிழுக்காக கால்நூற்றாண்டாய்
உழைத்தவர்கள்
ஆனால்,இன்னும் ஊதியம்
பெறாதவர்கள் ”
“எங்களுக்கு பிச்சை
வேண்டாம்
ஊதியத்தைத்
தாருங்கள்.”
-கல்லாறு சதீஷ் –
1 thought on “தமிழர்களின் ஆலயம் முள்ளிவாய்க்கால்”