வெளிச்சம் நல்கும் கிறிஸ்து பிறப்பு

ஒளி தோன்றுக” ! இது தான் உலகைப் படைக்கும் போது இறைவன் சொன்ன முதல் வார்த்தைகள். ஒளியைப் படைப்பதும், இருளிலிருந்து ஒளியைப் பிரிப்பதும் இறைவனுடைய நோக்கமாய் இருந்தது.

ஒளியை நோக்கிய பயணமே ஆன்மீகப் பயணம். ‘நானே ஒளி’ என்றார் இயேசு. அந்த ஒளியாம் இயேசுவை நோக்கிய பயணமே ஆன்மீகப் பயணம்.

இறைமகன் இயேசுவின் பிறப்பு ஒளியின் வருகையே. அந்த ஒளியின் வருகையைக் குறிப்பிடும் போதும் வானிலிருந்து ஒரு நட்சத்திர ஒளி தோன்றி ஒளியாம் இறைவனை சுட்டிக் காட்டியது. பிற இனத்தாருக்கும் இருள் அகற்றும் ஒளியானவராக இறைமகன் தோன்றினார்.

நட்சத்திரங்களும், குடில்களும், கிறிஸ்மஸ் மரங்களும் புடைசூழ கந்தையில் பிறந்த பாலகனை, கரன்சியில் பிறக்க வைப்பதா கிறிஸ்மஸ். உண்மையில், கிறிஸ்து பிறப்பு கொண்டு வருகின்ற செய்தி என்ன ? சொல்லித் தரும் பாடம் என்ன ?
1 . பிறரன்பு

“பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” (மத்தேயு 7:12 ) என்றார் இயேசு. இதை ஆங்கிலத்தில் ‘கோல்டன் ரூல்’ என்கிறார்கள். இயேசுவின் பிறப்பு நமக்குச் சொல்லித் தருகின்ற முக்கியமான பாடம் இது தான்.
தன்னைப் போல பிறரை நேசிப்பதில் இருக்கிறது வாழ்வின் மகத்துவம். வாழ்க்கை என்பது பூமராங் போல. எதை எறிகிறோமோ அதுவே நம்மை திரும்ப வந்தடையும். அன்பை வீசக் கற்றுக் கொள்வோம், அப்போது அன்பு நம்மை நோக்கி திரும்ப வரும்.
2. மன்னிப்பு
“மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்” (மத்தேயு 6 :14 ) என்றார் இயேசு.
இறைமகன் வருகையின் நோக்கமே, மனுக்குலத்திற்கான மன்னிப்பு தான். நமக்கு இறைவன் தந்த மாபெரும் மன்னிப்பின் சாரலாக நாம் பிற மனிதர்களுடைய குற்றங்களை நிபந்தனைகளின்றி மன்னிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மன்னிப்பை விதைக்கக் கற்றுக் கொள்வோம், அப்போது உறவின் பூக்கள் மலர்ந்து வரும்.
3. பணிவு
“உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர் ( மத்தேயு 23 :11) என்றார் இயேசு.

இறைமகனின் வருகை பணிவின் அடையாளமாய் இருந்தது. தந்தையிடமிருந்து வந்தவர், கந்தையிடம் தஞ்சமானார். ஆண்டவனாய் வாழ்ந்தவர் ஆடிடையே அடைக்கலமானார். சீடர்களின் பாதங்களைக் கழுவியதானாலும் சரி, பரமனின் பாதத்தில் சரணடைந்து சிலுவையில் அறையுண்டதானாலும் சரி, பணிவைப் புறக்கணித்த பணிகள் எதையுமே இயேசு செய்யவில்லை. பணிவை அணியக் கற்றுக் கொள்வோம், செயல்கள் நன்றாய் சிறந்து வரும்.
4. மறைவு !

“நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார் ( மத்தேயு 6 3 )
இறைமகனின் வருகையின் நோக்கங்களில் ஒன்று மண்ணுலகின் போலித்தனங்களை அறுத்தெறிந்து விட்டு, மனிதத்தை வினியோகிப்பது. வெளிப்படையாகத் தம்பட்டம் அடிக்கின்ற செயல்கள் ஈகையானாலும் சரி, செபமானாலும் சரி, ஆன்மீக நோன்புகளானாலும் சரி, அவையெல்லாம் அர்த்தமற்றவையே. மறைவாய் செய்வதே உயர்வாய் இருக்கும். மனிதத்தை மறைவாய் செய்யக் கற்றுக் கொள்வோம், மனித மாண்பு சிதையாமல் இருக்கும்.
5. நிராகரிப்பு
“உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம் சாவுக்குரிய உங்கள் உடலின்மீது ஆட்சி செலுத்தவிடாதீர்கள் (ரோமர் 6 :12 )

பாவத்தை நிராகரித்து வாழ்கின்ற வாழ்க்கையை இயேசு வாழ்ந்து காட்டினார். சாத்தான் சோதனைகளை அவர் முன்னால் அடுக்கடுக்காய் நீட்டிய போதும் அவர் சலனப்படவில்லை. அவற்றை நிராகரித்து வாழ்ந்தார். பாவத்தை நிராகரிப்பதில் நாகரீகம் பார்க்கத் தேவையில்லை. பிறர் மனம் புண்படுமே என பாவத்தை அங்கீகரிக்கவும் தேவையில்லை. நாம் பாவத்தை நிராகரிக்கும் போது, இயேசுவை அங்கீகரிக்கிறோம். இயேசுவை அங்கீகரிக்கும் போது கிறிஸ்து பிறப்பை அர்த்தமுள்ளதாய் மாற்றுகிறோம்.

அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துகள்.

— சேவியர்

1,379 total views, 1 views today

1 thought on “வெளிச்சம் நல்கும் கிறிஸ்து பிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *