ஈழத் தமிழர் ஒருவர் முயற்சியால் யேர்மன் NRW மாநிலத்தில் புனித மாட்டீனார் பாரம்பரியம்

சடப்பொருள் அற்ற கலாச்சார வழக்கமாக (The Inventory of the Intangible Cultural Heritage of North- Rhine Westphalia(NRW)) அங்கீகாரம் பெற்றுள்ளது யேர்மனி கெம்பென் நகரசபை அங்கத்தவரும் பிரதேசசபை உறுப்பினருமான ஜெயரட்ணம் கனீசியஸ் மற்றும் யேர்மனியரான Rene Bongarz ஆகியோர் எடுத்த தீவிர முயற்சி காரணமாக புனித மாட்டீனார் பாரம்பரியம் யேர்மன் NRW மாநிலத்தில் சடப்பொருள் (உணரும் கலை) அற்ற கலாச்சார வழக்கமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் கடந்த 25.10.2018 அன்று டுசில்டோப் மாநில சட்டசபையில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் ஜெயரட்ணம் கனீசியஸ் மற்றும் யேர்மனியரானRene Bongarz ஆகியோரிடம் கலாச்சார அமைச்சின் செயலர் திரு. Klaus Kaiser அவர்களால் கையளிக்கப்பட்டது.

இதன் அடுத்த கட்டமாக இவர்கள் இருவரும் யேர்மன் நாடு முழுவதும் இதை ஒரு சடப்பொருள் அற்ற கலாச்சார வழக்கமாக (The Inventory of the Intangible Cultural Heritage of Germany) அங்கீகரிக்க யேர்மன் மத்திய கலாச்சார அமைச்சிடம் விண்ணப்பிக்கவுள்ளனர். இதன் நோக்கம், மக்களால் முன்னெடுக்கப்படும் இப் பாரம்பரிய கலாச்சார வழக்கத்தை யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கச் செய்வதாகும்.

கத்தோலிக்க திருஅவையில் புனித மாட்டீன் மிகப் பிரபலமான புனிதர்களில் ஒருவர் என்பதுடன், உலகெங்கும் இவர் பெயரில் நகரங்கள், கிராமங்கள், தீவுகள், வீதிகள், ஆலயங்கள், குருமடங்கள், பாடசாலைகள், யாத்திரை வழிகள் போன்றவை உள்ளன.
புனித மாட்டீனார் விழா யேர்மனி  மாநிலத்தில் (North- Rhine Westphalia(NRW) நீண்ட பாரம்பரியமான வகையில் கொண்டாடப்படுகின்றது, கெம்பென் நகரில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 9 மற்றும் 10 இல், இரு பெரிய ஊர்வலங்களாக இவ்விழா இடம்பெறுவதுடன், இதில் ஆயிரக் கணக்கான பிள்ளைகளும் பெரியோர்களும் கைகளில் விளக்குகளை ஏந்தி, பாடல்களைப் பாடியவாறு பங்கேற்பர். மாட்டீன், இவரது பிறப்புப் பெயர் மாட்டீனுஸ், இவர் ஒரு உரோமிய இராணுவச் சிப்பாயின் மகனாக இன்றைய கங்கேரி நாட்டில் பிறந்தார். தனது இளம் பிராயத்தை தனது தந்தையின் ஊரான இத்தாலிய பாவியாவில் கழித்தபோது முதல்முறையாக கிறிஸ்தவத்தை அறிமுகப்படுத்திக் கொண்டதுடன், தனது 10வது வயதில் திருமுழுக்குப் பெறும் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டார். இருப்பினும் சிப்பாயின் மகனான இவர் கட்டாயமாக இராணுவத்தில் இணைய வேண்டும் என்ற சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டியவரானார்.

அதற்கமைய தனது 15வது வயதில் கொன்ஸ்ரன்ரின் அரசரின் மெய்ப்பாதுகாவலர் படையில் சேர்க்கப்பட்டு மைலாண்ட் சென்றார். இதன் பின்னர் இவர் பல ஆண்டுகளாக அங்கு கடமையாற்றியபோதும் தனது 35வது வயதில் திருமுழுக்குப்பெற்று அதன்பின் சில போர்களில் பங்கேற்க மறுப்புத் தெரிவித்ததால் இவரது 40வது வயதில் 25வருட சேவையின் பின்பு இராணுவ சேவையில் இருந்து விடுவிக்கபப்பட்டார். இதன்பின் 361ம் ஆண்டில் தன்னை குருமடத்தில் சேர்த்துக்கொண்டு துறவியாக மாறினார். அவசர வேளைகளில் உதவுதல் மற்றும் அதிசயங்களை நிகழ்த்துபவர் என்பதால் மாட்டீன் விரைவில் அப்பிரதேசம் முழுவதும் பிரபலமானார். 372ம் ஆண்டில் அவர் தூர்ஸ் மறைமாவட்ட ஆயராக நியமனம் பெற்றார். அப்படியிருந்தும் ஆயராக புகழுடன் நகரத்தில் வாழாமல் நகர எல்லைச் சுவருக்குப் பக்கமாக இருந்த பலகைக் குடிசையில் வாழ்ந்தார். இவர் 397ம் ஆண்டு கார்த்திகை 8இல் தனது 81வது வயதில் இறைவனடி சேர்ந்ததுடன், இவரது உடல் கார்த்திகை 11இல் தூர்ஸ் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது இரக்க சுபாவம் காரணமாக புனித மாட்டீன் பிரயாணிகள், ஏழைகள், இரவலர்கள், குதிரை வீரர்கள்; இதற்கும் மேலாக அகதிகள், சிறைக் கைதிகள் மற்றும் போர்வீரர்களின் பாதுகாவலராக மதிப்பளிக்கப்படுகிறார். யேர்மனியில் அனைத்து சமூகத் தளங்களாலும் ஒன்றுசேர்ந்து கொண்டாடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

514 total views, 1 views today

1 thought on “ஈழத் தமிழர் ஒருவர் முயற்சியால் யேர்மன் NRW மாநிலத்தில் புனித மாட்டீனார் பாரம்பரியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *