கைவிடப்படும் புதிய அரசியலமைப்பு; மகாசங்கத்தினர் போர்க்கொடி

“புதிய அரசியலமைப்பு இப்போது அவசியமில்லை. தேர்தல்களை நடத்துவதே இப்போதைக்கு முக்கியம்” என இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்தவராகக் கருதப்படும் மல்வத்த மகாநாயக்கர் திபட்டுவாவே சிறி சுமங்கல தேரோ திட்டவட்டமாகக் கூறிவிட்ட நிலையிலேயே அரசியலமைப்பாக்க முயற்சிகள் கைவிடப்படும் எனத் தெரிகின்றது.
அமைச்சர்கள் உட்பட ஐதேக எம்.பி.க்கள் சிலர் மல்வத்த மகாநாயக்கரை சந்தித்த போதே இதனை அவர் உறுதியாகக் கூறினார். புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு சிங்களக் கடும் போக்காளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகியிருக்கும் பின்னணியிலேயே மகாநாயக்கரும் தனது நிலைப்பாட்டை இப்போது பகிரங்கமாக்கியிருக்கின்றார்.
மகாநாயக்கரின் இந்த நிலைப்பாடு ஐதேகவுக்கு சங்கடமான ஒரு நிலையைக் கொடுத்திருக்கும். அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளைக் கைவிட்டுவிடுவதற்கும் அவர்களுக்கு இது உதவலாம். இது அதிகளவுக்கு நெருக்கடியைக் கொடுக்கப்போவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான்.
புதிய யாப்பை உருவாக்குவதற்கு எதிராக தென்பகுதியில் எழுந்திருக்கும் எதிர்ப்புக்களின் பின்னணியில், தமது நிலைப்பாட்டை மகாநாயக்கர்களுக்கு விளக்குவதற்காகவும், மகாநாயக்கர்களின் நிலைப்பாட்டை நாடிபிடித்துப் பார்க்கவும் ஐதேக அமைச்சர்களும் எம்.பி.க்களும் இந்தச் சந்திப்பை மேற்கொண்டார்கள். மல்வத்த மகாநாயக்கரை மட்டுமன்றி, அஸ்கிரிய மகாநாயக்கரையும் அவர்கள் சந்தித்தார்கள். அஸ்கிரிய மகாநாயக்கருடனான அவர்களுடைய பேச்சுக்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இலங்கை அரசியலமைப்பில் மகாநாயக்கர்களுக்கு என முக்கியமான இடமோ அந்தஸ்த்தோ உத்தியோகபூர்வமாகக் கொடுக்கப்படவில்லை. ஆனால், எழுதப்படாத ஒரு சட்டமாக நாட்டின் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் மகாநாயக்கர்களின் ஆலோசனையைப் பெறுவது வழமையாக இருக்கின்றது. புதிதகப் பதவியேற்கும் அமைச்சர்கள், தலைவர்கள் முதலாவதாக மகாநாயக்கர்களைச் சந்தித்து ஆசிபெறுவதும், ஆலோசனை கேட்பதும் வழமை.
மகாநாயக்கர்களின் கருத்துக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்பட்ட ஒரு சந்தர்ப்பம் என்றால், அது 1987 ஆம் ஆண்டு இலங்ககு இந்திய உடன்படிக்கையில் ஜனாதிபதி ஜெயவர்த்தன கைச்சாத்திட்டதைக் குறிப்பிடலாம். இந்திய அழுத்தம் காரணமாக மகாநாயக்கர்களின் கருத்தைக்கூட கேட்காமல் அந்த உடன்படிக்கையை ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்ட போது, நாடே சுடுகாடாகியிருந்தது. ஆனால், அதன்மூலம்தான் 13 ஆவது திருத்தம் பிறந்தது.
அரசாங்கம் ஒன்று இருந்தாலும், அதற்கும் மேலாக அதிகாரத்தைக் கொண்டவர்களாக மகாநாயக்கர்கள் இருக்கின்றார்கள். இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடாக இருப்பதால் மகாநாககர்களுக்குச் சவால்விடும் வகையில் செயற்பட எந்தத் தலைவருமே முன்வருவதில்லை. அது தமக்கு ஆபத்தானது என்பது அவர்களுக்குத் தெரியும். அவ்வாறு செயற்பட்டால் தம்மீது தேசத்துரோக முத்திரை குத்தப்பட்டு, அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டி நிலை வரலாம் என்ற அச்சமும் அவர்களுக்கு இருக்கின்றது.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் மகாநாயக்கர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும், அதன் மூலம் அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்றுத்தான் அடுத்த கட்ட நகர்வை முன்னெடுக்க முடியும் என்ற நிலையிலேயே அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லை தலைமையிலான ஐதேக குழுவினர் மகாநாயக்கர்களைச் சந்தித்தார்கள். மகாநாயக்கர்களின் நிலைப்பாடு எவ்வாறானதாக இருக்கும் என்பதை ஓரளவுக்குத் தெரிந்துகொண்டுதான் அவர்கள் அங்கு சென்றிருக்கின்றார்கள் என எதிர்பார்க்கலாம்.
இதன்போது அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லை தெரிவித்த கருத்துக்களும் முக்கியமானது. “அரசியலமைப்புக்கான நகல் யோசனை எதனையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை. பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது வழிநடத்தல் குழுவின் ஒரு அறிக்கை மாத்திரமே. எனவே, அரசியலமைப்புக்கான நகல் ஒன்று முன்வைக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் சொல்வது நியாயமற்றது” எனவும் அமைச்சர் கிரியெல்ல கூறியிருக்கின்றார். அதாவது, புதிய அரசியலமைப்பாக்க முயற்சிகளைப் பொறுப்பேற்க ஐதேக தயாராகவில்லை என்பது அவரது பதிலில் பிரதிபலிக்கின்றது.
ஐதேக குழுவினர் மகாநாயக்கர்களுக்குத் தெரிவித்த கருத்துக்களும் கவனத்துக்குரியவை. அரசியலமைப்பில் பௌத்தத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள அதி உயர் அந்தஸ்த்து தொடர்ந்துதம் பாதுகாக்கப்படும் எனக் குறிப்பிட்டிருக்கின்றார் அமைச்சர் தயா கமகே. மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது என உறுதியளித்திருக்கின்றார் அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார. இதனை மறுவழமாகப் பார்த்தால் “நாம் சிறுபான்மையினருக்கு எதனையுமே கொடுக்கப்போவதில்லை” என்பதை மகாநாயக்கர்களிடம் உறுதியாகக் கூறிவிட்டுச் செல்வதற்காகத்தான் அவர்கள் கண்டிக்கு வந்திருந்தார்கள்.
அரசியலமைப்பு நகல் திட்டம் எதுவும் முன்வைக்கப்படாமல், நிபுணர்குழுவின் யோசனைள் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே இந்தளவு எதிர்ப்புக்கள் இனவாதிகளிடமிருந்து வருகின்றது. முக்கியமான தேர்தல்கள் எதிர்கொள்ளப்படும் நிலையில் ஐதேகவுக்கு இது கடினமான ஒரு நிலையைக் கொடுத்துள்ளது. நிலைமைகளைச் சமாளிப்பதற்கான ஒரு உபாயமாகத்தான் இதனை அரசாங்கத்தின் யோசனைகளாக வெளியிடாமல், நிபுணர்குழுவின் அறிக்கையாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டார்.
அதற்கும் மேலாக அரசியலமைப்பாக்க முயற்சிகளிலிருந்து ஐதேகவும் விலகிக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தமும் கொடுக்கப்பட்டு வருகின்றது. தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் ஐதேக விஷப் பரீட்சையில் இறங்கக்கூடாது என கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வலுவடைந்துவருகின்றது. இவை எல்லாவற்றையும் கவனத்திற்கொண்டதான் மகாநாயக்கர்களை சந்திக்க ஐதேக உயர்மட்டக்குழு சென்றது. “இப்போதைக்கு புதிய அரசியலமைப்பு தேவையில்லை” என மகாநாயக்கர் திட்டவட்டமாகக் கூறிவிட்ட நிலையில், ஐதேக அடுத்த காலடியை எடுத்துவைக்கும் என எதிர்பார்க்க முடியாது.
நடைபெறும் அரசியல் நகர்வுகளைப் பார்க்கும் போது இரு விடயங்கள் தெளிவாகத் தெரிகின்றது. முதலாவது, புதிய அரசியலமைப்பாக்க முயற்சிகள் அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. இரண்டாவது, அவ்வாறு புதிய அரசியலமைப்பு வந்தாலும் சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் வகையில் அதில் எதுவும் இருக்கப்போவதில்லை. சிங்கள இனவாதிகளைத் திருப்திப்படுத்தக்கூடிய ஒன்றாகவே அது இருக்கும்.(இலங்கை )
– கொழும்பிலிருந்து பாரதி –