நெதர்லாந்தில் சோழர் தமிழ் செப்பேடுகள்!
ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்களை கையால் தொட்டு உணருங்கள் !
இன்றைக்கு சற்றேரக்குறைய ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவின் பெரும்பகுதியையும்,ஈழத்தின் பெரும்பகுதியையும் ஆட்சிசெய்து தஞ்சையில் விண்ணுயர பெரியகோயில் கட்டிய சோழன் இராஜராஜன். இவனது காலத்திய தமிழ் செப்பேடு ஒன்று இன்றைக்கும் நெதர்லாந்து நாட்டில் பாதுகாக்கப்படுகிறது. கேட்கவே ஆச்சர்யமாய் இருக்கிறது அல்லவா ? வாருங்கள் அதனைப் பற்றி பார்ப்போம்
தாய்நாட்டில் இருக்கும்போது சோழர் பாண்டிய வரலாறுகளை புரட்ட ஆரம்பித்த காலத்திலிருந்தே லெய்டன் செப்பேடுகளை பற்றி படித்ததுண்டு, சோழர் காலத்திய இரண்டு செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டின் லெய்டன் நகர அருங்காட்சியகத்தில் இருப்பதாக இருவரி செய்திகளாகவும், இந்திய தொல்லியல்துறை பதிப்பாம் எபிகிராபிகா இண்டிகாவிலும் பார்த்ததுண்டு !
டியூலிப் தேசமாம் ஒல்லாந்தில் பணிநிமித்தமாய் வந்து சோழர் செப்பேடுகளை தேடிச்சென்று காண்பது ஒரு புது அனுபவம் தான், காற்றில்லா இடத்தும் கடந்து செல்லும் காதல் போல் தமிழும், தமிழின் சுவடுகளும் உலகெலாம் பரவியுள்ளன!
கடல்கடந்த நாடாம் கடாரத்து அரசன் சோழ நாட்டில் நாகபட்டினத்து அமைத்த சூளாமணி பன்ம விஹாரத்திற்கு சோழமன்னர்கள் செய்த கொடையை சொல்ல செப்பேடுகள் எழுதப்பட்டன, இந்த செப்பேடுகள் இன்று சோழ நாட்டில் இல்லை கடல் கடந்து மற்றோர் தேசமாம் நெதர்லாந்து எனும் ஒல்லாந்தில் உள்ளது.
லெய்டன் பெரிய செப்பேடு, லெய்டன் சிறிய செப்பேடு என்று இரண்டு செப்பேடுகள் லெய்டன் அருங்காட்சியகத்தின் பிரத்தியேக சேகரிப்பு பகுதியில் உள்ளன.
1. பெரிய லெய்டன் செப்பேடுகள் (21 ஏடுகள்) – முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழன்
சமஸ்கிருதம்- 6 ஏடுகள், 111 வரிகள்
தமிழ்- 15 ஏடுகள் ,332 வரிகள்
2. சிறிய லெய்டன் செப்பேடுகள்(3 ஏடுகள்)- முதலாம் குலோத்துங்கன்
எப்படி இந்த செப்பேடுகள் நெதர்லாந்து வந்து சேர்ந்தன?
எப்படி இந்த செப்பேடுகள் நெதர்லாந்து வந்து சேர்ந்தன என்ற கேள்விக்கு, அந்த லெய்டன் நூலகத்தில் இந்த செப்பேடுகளுடன் அவர்கள் வைத்திருந்த குறிப்பு விடையளித்தது, இந்த இரண்டு செப்பேடுகளும் ஒல்லாந்ததை சேர்ந்த திரு பிலோரென்ஷியஸ் காம்பெர் என்பவரால் இந்தியாவிலிருந்து ஒல்லாந்து (நெதர்லாந்து) கொண்டுவரப்பட்டன, இவர் பட்டாவியா அமைச்சராயிருந்தார். அவரது குடும்ப சொத்தாக இருந்த இந்த இரண்டு செப்பேடுகளும் அவரது கொள்ளுப்பேத்தி திருமதி ஜோஹன்னா காம்பெர் என்பவருக்கு வர, அவரை மணந்த கணவர் ஹெச்.ஏ. ஹாமேக்கர் என்பவர் இந்த செப்பேடுகளை 1862 ஆம் ஆண்டு லெய்டன் பல்கலைக்கழக நூலகத்திற்கு அளித்தார். இப்படி இந்த செப்பேடுகள் கடல் கடந்து லெய்டன் வந்து சேர்ந்தன.
ஏன் இந்த செப்பேடுகள் முக்கியம்?
கடல் கடந்து இந்த தூரதேசத்திலும் மிகவும் சிறப்பாய் பாதுகாக்கப்படுகின்ற தமிழர் பொக்கிஷங்களில் இவைகளுக்கு முதலிடம். இன்றைக்கும் படிக்கக்கூடிய அளவு தெளிவாய் மிக கவனத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
சோழ நாட்டிற்கும் இன்றைய மலேயா தீபகற்பத்தில் இருக்கும் கடார தேசத்திற்கும் இருந்த தொடர்புக்கு ஆதாரமாய் விளங்குகிறது. இதனால் கடல் கடந்தும் பரவியிருந்த சோழர் செல்வாக்கை அறியமுடிகிறது.
இவைகளில் இடம்பெற்றுள்ள வடமொழி சுலோகங்களால் சோழ மன்னர்களின் வரிசையையும், வரலாற்றையும் அறிய முடிகிறது.
மெய்க்கீர்த்திகளால் மன்னனின் வீரச்செயல்களும், அவர்கள் ஆற்றிய போர்களும் வெற்றிகளும் அறியமுடிகிறது.
சோழநாட்டின் உட்பிரிவுகள், ஊர்ப்பெயர்கள், அந்த காலத்து வாழ்ந்த மக்களின் பெயர்கள், நிலஅளவைகள், வரிகள் பற்றி அறியமுடிகிறது.
சைவ வைணவ கோயில்களை பேணியது போல புறசமயங்களான பௌத்த, சமணப்பள்ளிகளையும் சோழ வேந்தர்கள் பேணினர் என்பதும் நோக்கத்தக்கது.
இடைக்கால தமிழக வரலாற்றை மீள்கட்டமைத்து வரலாறு அறிய, மிகவும் உதவியாக இந்த செப்பேடுகள் திகழ்கின்றன.
எங்கிருக்கிறது செப்பேடுகள் ? எப்படி காணலாம்?
நெதர்லாந்தின் தலைநகரம் ஆம்ஸ்டர்டாம் ஸ்கிபோல் விமான நிலையத்திலிருந்து சுமார் முப்பதுஃநாற்பது நிமிட இரயில் பயணத்தில் வரும் இடமே லெய்டன், புகழ்பெற்ற பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஊர். நெதர்லாந்தில் இரயில்பயணம் மிகவும் சுலபமும் அதிவேகமானதும் ஆகும். லெய்டன் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நீங்கள் இறங்கினால் கூகிள் மேப் பார்த்து நடந்து செல்ல சுமார் பத்து நிமிடம் பிடிக்கும், பேருந்தில் சென்றால் மூன்று நான்கு நிமிடத்தில் லெய்டன் பல்கலைக்கழக வாசலை அடையலாம்.
லெய்டன் பல்கலைக்கழக நூலகத்தின் சிறப்பு சேகரிப்பில் இந்த செப்பேடுகள் உள்ளன, சிறப்பு சேகரிப்பு “திங்கள் முதல் வெள்ளி” வரை காலை 9 மணி முதல் மாலை 5 வரை திறந்திருக்கும். நூலகத்தை பார்வையிட உங்களுக்கு ஒரு நாள் பார்வையாளர் அட்டை அல்லது ஒரு வருட அட்டை தேவைப்படும்.
வரலாற்றில் ஆர்வமுள்ள தமிழர்கள் இந்த ஒல்லாந்து பகுதிக்கு அருகே இருக்கிறீர்கள் என்றால் கட்டாயம் ஒரு முறை போய் பார்த்து வாருங்கள் ! ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்களை கையால் தொட்டு உணருங்கள் !
-தனசேகர் பிரபாகரன்
2,177 total views, 1 views today
1 thought on “நெதர்லாந்தில் சோழர் தமிழ் செப்பேடுகள்!”