ஒவ்வொரு வருடமும் எத்தனைப் பூச்சிகளை உண்கிறோம்?
எதிர்காலத்தில் உலக மக்கள் தொகை அதிகரிக்கும் காரணத்தால், பூச்சிகளையும் சாப்பிட வேண்டும் என்கிற ஒரு நிலைமை வரப்போகின்றது. எதிர் காலத்தில் என்ன, தற்போதே பல நாடுகளில் பூச்சிகளை சுய விருப்பத்துடனேயே உண்கிறார்கள். குறிப்பாக வெட்டுக்கிளிகள் போன்ற உணவுப் பூச்சிகளை சில்லறை உணவகங்களில் கேட்டு வாங்கி சுவைத்திடலாம். சரி, பூச்சிகளைத் தெரிந்தே உண்பவர்களை விடுங்கள். நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். தங்களுக்குத் தெரியாமலே எத்தனைப் பூச்சிகளை ஒவ்வொருவரும் உண்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அட, அது எப்படி தெரியாமல் பூச்சிகளை உண்பது என்று உங்களுக்குள் சந்தேகம் ஏற்பட்டால், தொடர்ந்து படியுங்கள்!
அது எப்படி நமக்குத் தெரியாமலேயே பூச்சிகளை உண்கிறோம் என்று கேட்கிறீர்களா? தூங்கும் போது நமக்குத் தெரியாமல் பூச்சிகளை உண்பது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் அதை விட அதிகமாக பூச்சிகளை நாம் சாப்பிடும் உணவுகளுடன் உண்கிறோம்! அதுவும் ஒவ்வொரு வருஷமும் சராசரியாக அரைக் கிலோகிராம் பூச்சிகளை உட்கொள்கிறோமாம். இப்படி உண்ணும் இந்தப் பூச்சிகள் பெரும்பாலும் வேறு உணவுப் பொருட்களிலே கலந்திருக்கிறதாம்!
சும்மா ஒரு உதாரணத்திற்கு, நிலக்கடலையில் செய்யப்படும் வெண்ணெய்யில் அதாவது Peanut butterஇல், ஒவ்வொரு 100 கிராமுக்கும் சராசரியாக 30 பூச்சிகளின் பாகங்களைக் கலப்பதற்கு FDA என்கிற அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதிக்கிறது. பழச்சாறில், அதாவது Juiceஇல் ஐந்து Fruit fly எனப்படும் பூச்சிகளின் முட்டைகள், மற்றும் ஒன்று அல்லது இரண்டு இளம் உயிரிகளும் அதாவது larvaவும் கலந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை எல்லாவற்றையும் விட, குறிப்பாக என்னை பாதித்த விஷயம் என்ன தெரியுமா?
நான் மிகவும் விரும்பும் அந்தச் Chacolate இல் கூட பூச்சிகள் கலந்திருக்குமாம்! 100 கிராம் chacolate இல் சராசரியாக 60 பூச்சிகளின் பாகங்களைக் கலப்பதற்கு அனுமதி உள்ளதாம்.
நண்பர்களே, உண்ணும் உணவுகளில் பூச்சிகளும் கலந்து இருக்கலாம் என்பதை நாங்கள் மறுக்கவே முடியாது. இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், அப்படிக் கலந்திருப்பது மனிதனை எவ்விதத்திலும் பாதிக்கப்போவதில்லை. உண்மை சொல்லப் போனால், அது நமக்கு நன்மையைத் தான் தருகிறது, ஏனென்றால் பூச்சிகளில் அதிகளவில் புரதச் சத்து உள்ளது.
சரி நண்பர்களே, இனி நீங்கள் கூறுங்கள்! பூச்சிகளை தெரியாமலே இவ்வளவு காலமும் சாப்பிட்டுக்கொண்டிருந்தீர்கள் என்று இன்று அறிந்ததும் எப்படி இருக்கிறது?
பூமியில் எவ்வளவு தண்ணீர் உள்ளது?
ஒரு சராசரி வாளியினுள் எவ்வளவு தண்ணீர் அடங்கும்? என்ன ஒரு ஐந்திலிருந்து பத்து லிட்டர் இருக்கும், சரி தானே? சரி, வாளி ஒரு பக்கம் இருக்கட்டும், வாளிக்குப் பதிலாக இனி நமது பிரம்மாண்டமான பூமியை எடுத்துக் கொள்வோம். நமது பூமியில் நிறைய நீர் உள்ளது என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒரு விஷயம் தான், ஆனால் உண்மையில் பூமியில் ஒட்டுமொத்தமாக எவ்வளவு லிட்டர் தண்ணீர் இருக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியவில்லை என்றால் கண்டிப்பாகத் தொடர்ந்து படியுங்கள்.
சரி, பூமியில் எவ்வளவு லிட்டர் தண்ணீர் இருக்கின்றது என்பதைத் தெரிய முதல், பூமியில் இருக்கும் தண்ணீரைப் பற்றி சில சுவாரசியமான விஷயங்களை அறியத் தருகின்றேன். பூமியில் உள்ள நீர் ஒரு தொடர்ச்சியான சுழற்சியைக் கொண்டுள்ளது. அது, கடலில் இருந்து ஆவியாகிக் காற்று மூலம் பயணித்து, நிலத்தில் மழையாக இறங்கி, பின்னர் மீண்டும் கடலில் பாய்கிறது.
நமது உலகின் சுமார் 70 சதவீதமான நிலப் பரப்பு கடல்கள் மற்றும் சமுத்திரங்களால் ஆனது. மற்றும் கடலின் சராசரி ஆழம் பல ஆயிரம் மீட்டர் ஆகும். பூமியில் உள்ள தண்ணீரில் 98 சதவீதம் சமுத்திரங்களில் உள்ளது; அதன் உப்புத் தன்மை காரணமாகவே அதைக் குடிநீராகப் பயன்படுத்த முடிவதில்லை. இரண்டு சதவீதத் தண்ணீர் மட்டும் தான் குடிநீராக உள்ளது, ஆனால் இந்த 2 சதவீதத்திலும் 1.6 சதவீதம், துருவக் கட்டிகள் மற்றும் பனிப்பாறையில் உறைந்து கிடக்கிறது. 0.36 சதவீதம் நீர்நிலைகள், கிணறுகள் மற்றும் நிலத்தடி நீராக இருக்கிறது. புவியில் இருக்கும் மொத்த நீரில், 0.036 சதவீதம் மட்டுமே ஏரிகள் மற்றும் ஆறுகளில் காணப்படுகிறது. மீதியுள்ள நீர், மேகங்கள் மற்றும் நீராவியாகக் காற்றில் மிதந்து கொண்டு இருப்பது மட்டுமல்லாமல், மேலும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடலில் கூட இருக்கிறது. ஏன் உங்கள் உடல் கூட சுமார் 65 சதவீதம் நீரால் தான் அமைக்கப்பட்டிருக்கிறது.
நீர் இல்லாமல் நமது புவியில் உயிரே தோன்றியிருக்காது என்பது மறுக்கமுடியாத ஒரு உண்மை ஆகும்!
சரி போதும், இது எல்லாமே ஒரு பக்கம் இருக்கட்டும். இனி நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு வருவோம். நமது பிரம்மாண்டமான இந்தப் பூமியில் எவ்வளவு நீர் உள்ளது? சொல்கிறேன் கேளுங்கள்! நமது பூமியில் சுமார் 1,3 கோடி கோடி கோடி லிட்டர் தண்ணீர் உள்ளது. என்ன தலையே சுற்றுகின்றதா?
எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக எனது முகநூல் பக்கத்தில் (www.facebook.com/scinirosh) அறியத் தாருங்கள்!
Dr.நிரோஷனின் அதிசய உலகம்
876 total views, 1 views today
2 thoughts on “ஒவ்வொரு வருடமும் எத்தனைப் பூச்சிகளை உண்கிறோம்?”