சிறுகதை.. நீ பாதி நான் பாதி கண்ணே!
நான் ஒரு சங்கத்தில் பொருளாளராக இருந்தேன். எமது கலைவிழா நெருங்கிக் கொண்டிருந்தது. இந்தமுறை நுழைவுச்சீட்டு நிகழ்ச்சியாக வைத்திருந்தோம். நாடகம், குறும்திரைப்படம், கவிதை அரங்கு, நாட்டுக்கூத்து, தென்னிந்தியாவிலிருந்து திரைப்பட நடிகர்கள், பாடகர்கள் என ஒரு அமர்க்களமாக இருப்பதால் நுழைவுச்சீட்டுகளை தனிநபருக்கு 40 டொலர்கள் எனவும், குடும்பத்திற்கு 80 டொலர்கள் எனவும் போட்டிருந்தோம்.
ரிக்கெற் விற்பனை வேட்டையில் ஒரு மார்க்கமாகச் சுற்றித் திரிந்தேன். என்னைக் கண்டு ஆக்கள் கண்மண் தெரியாமல் ஓடத் தொடங்கினார்கள். என்னுடன் படித்த சக நண்பர்கள் சிலர் இங்கிருக்கின்றார்கள். அவர்களிடமிருந்து முதலில் ஆரம்பிப்போம் என்ற நினைப்பில் நண்பன் சிவபாலனைத் தேடி ‘வொடங்கா’ என்னுமிடம் நோக்கிச் சென்றேன். மெல்பேர்ணில் இருந்து மூன்றரை மணி நேரப் பயணம். ரிக்கெற் விற்க வருகின்றேன் என்று சொல்லாமல், ”ஒரு சந்திப்பு மச்சான்! கனநாள் காணேல்லைத்தானே… நீயும் தனிய இருக்கிறாய்…”
“தனிய வாறாயோ… குடும்பமா வாறாயோ…? ஏன் கேட்கிறன் எண்டால் என்ரை சமையல் சாப்பாடு அப்பிடி இப்பிடி…. அதுதான்” அவுக் என்று கேட்டான் சிவபாலன்.
“குடும்பமாத்தான் வாறன். உன்னட்டை வாறதெண்டால் ஒருநாள் பயணம். நான் சாப்பாடு செய்துகொண்டே வாறேனே! உனக்கும் சேர்த்து…”
கடந்த வருடம் சிவபாலன் எனக்கொரு அதிஸ்டலாபச் சீட்டு 25 டொலருக்கு வித்திருந்தான். அதிஸ்டம் விழுந்திருந்தால் இப்ப இந்தச்சங்கப் பொருளாளராக இருந்திருப்பேனா?
நண்பனைக் கண்டு, குசலம் விசாரித்து, உண்டு மகிழ்ந்தபின் “எப்பவடா கலியாணம் செய்யப் போறாய்?” என்றேன்.
”அது அதுக்குக் கொடுப்பினை வேண்டும். காசு சேர்க்க வேணும். பெம்பிளை ஸ்லிம்மா வடிவா இருக்க வேணும். வேலை செய்ய வேணும். சீதனம் எக்கச்சக்கமா தர வேணும்…” அடுக்கிக் கொண்டே போனான் சிவபாலன்.
நான் சங்கத்தில் இருப்பதும், கதை கட்டுரை கவிதை எழுதுவதும் அவனுக்குத் தெரியும். இருப்பினும் அவை பற்றி ஒரு மூச்சு… கதைக்க மாட்டான். அவை எல்லாம் ஏதோ தனக்குச் சம்பந்தம் இல்லாதவை என்பதுபோல இருந்துவிடுவான்.
ஒரு மாதிரி மகிழ்வாக இருக்கும் தருணத்தில் ரிக்கெற்றை எடுத்து நீட்டினேன். பாம்பு படமெடுத்துக் கொத்த வந்தது போல் பின் வாங்கினான். பலாத்காரமாக அவனது கைகளுக்குள் திணித்தேன். நுழைவுச் சீட்டைப் பார்த்தான். 40 டொலர்கள். பதறிப் போனான்.
“இதென்ன மச்சான். ரூ மச்!”
‘நான் 25 டொலருக்கு அதிஸ்டலாபச் சீட்டுத் தந்தேன். நீயும் 25 டொலருக்குத்தான் தரல் வேண்டும்’ என்பது போன்ற பார்வை அது. அப்படித்தான் அவன்.
“காசு தர வேண்டாம். வைச்சிரு. புறோகிறாமுக்கு வா” நான் சொன்னேன்.
“மச்சான்! இரண்டு நாளைக்கு முதல் எங்களோடை படிச்சான் குகதாசன், ரெலிபோன் எடுத்தவன். உவன் கரன் ரிக்கெற் வித்துக்கொண்டு திரிகிறானாம்… உன்னட்டை ஏதேனும் கேட்டவனோ எண்டு என்னைக் கேட்டான். நான் நினைச்சனான் நீ வரேக்கையே! சோழியன் குடும்பி சும்மா ஆடாதெண்டு…. பொறு அவனுக்கொரு கோல் போட்டுக் கதைச்சுப் போட்டு வாறன்”
வீட்டுக்குள்ளே போய் அவனுடன் குசுகுசுப்புச் செய்தான் சிவபாலன்.
“சரி மச்சான். இந்தா பிடி 40 டொலரையும். நீ ஒண்டும் எனக்கு ஃபிறீயாத் தர வேண்டாம். நானும் குகதாசனும் ஆளுக்குப் பாதி பாதி போட்டு ரிக்கெற் எடுக்கின்றோம். நான் அவனிட்டை அவன்ரை பங்கை வாங்கித் தொலைக்கிறன்” சொல்லிக் கொண்டே என் கைகளுக்குள் 40 டொலர்களையும் திணித்தான்.
“இதென்னடா ஒரே குழப்பமா இருக்கு. ஒரு ஆள் தானேடா ஒரு ரிக்கற்றுக்கு வரலாம்?”
சிவபாலன் கெக்கட்டம் போட்டுச் சிரிச்சான்.
“மச்சான்… நாங்கள் இரண்டு பேருமே புறோகிறாமுக்கு வரமாட்டோம்.” சொல்லிவிட்டு திரும்பவும் சிரித்தான். இந்தத் தடவை சிரிப்பு வேறு மாதிரி இருந்தது.
”இந்தா பிடி உன்ரை காசை. ரிக்கெற்றும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம். வந்தா வா… வராட்டிப் போ. ஒண்டு சொல்லுறன் கேள்… உவன் குகதாசனும் இன்னும் கலியாணம் செய்யேல்லைத்தானே! இரண்டு பேருமா ‘ஒரு வடிவான’ ஸ்லிம்மான சீதனம் கொண்டுவாற வேலை செய்யுற பெம்பிளையாப் பாத்து கலியாணத்தைக் கட்டுங்கோ. நீ பாதி…. அவன் பாதி…”
— சுருதி
733 total views, 1 views today
2 thoughts on “சிறுகதை.. நீ பாதி நான் பாதி கண்ணே!”