உடலைவிட உளத்தைரியம் என்றும் பெண்களுக்கே அதிகம்!

மனித வாழ்வில் ஒவ்வொருவருக்கும் உளத்தைரியம் என்பது அத்தியா வசியமானது. உளத்தைரியம் இல்லாவிடின் வாழ்வில் குறித்த இலக்கை எட்ட முடியாது.
பொதுவாக ஆண், பெண் வேறுபாடு என்பது எல்லா துறையிலும் இன்னமும் இருந்து கொண்டே இருக்கின்றது. உடல் ரீதியான பலத்தை வைத்தே இதனை நிர்ணயிக்கின்றனர். ஆயினும் இன்றைய நிலையில் பெண்கள் ஒவ்வொரு துறையிலும் சாதிப்பதற்கு முக்கியமான காரணம் பெண்களிடம்; உள்ள உளத்தைரியமே ஆகும். ஆணைவிட பெண் பலவீனமானவள், மென்மையானவள் என்ற கருத்துக்களுக்கு அப்பாலும் ஆணுக்கு நிகர் பெண் அனைத்து துறையிலும் முன்னிற்பதற்கு இந்த உளத்தைரியமே முக்கிய காரணமாக அமைகிறது.
சமுதாயத்தின் அடிப்படை அலகான குடும்ப அமைப்பை எடுத்து நோக்கின், அதிலும் பெரும்பங்கு வகிப்பது பெண்ணாகவே இருப்பாள். ஏனெனில் குடும்பத்தில் பல்வேறுபட்ட பங்குகளை ஏற்று குடும்பம் ஒழுங்குமுறையில் இயங்க முக்கிய காரணம் பெண்ணே.
குறிப்பாக ஓர் தந்தையை இழந்த குடும்பத்தில் ஒரு தாயாக அப்பெண் பல்வேறுபட்ட சமூக பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருப்பினும், எல்லாவற்றையும் கடந்து பிள்ளைகளை வளர்த்து சீரான முறையில் கொண்டு செல்ல முடியும். ஆனால் தாயை இழந்த குடும்பத்தில், ஓர் ஆணால் எல்லாவற்றையும் கையாளுவது என்பது அனைத்து ஆண்களாலும் இயலுவதில்லை. அதாவது வேலைக்கும் சென்று, பிள்ளைகளுக்கான பராமரிப்பையும் சமாளிப்பது என்பது மிகுந்த சிரமத்திற்குரியதாகவே அமைகின்றது.
குடும்பங்களில் மன்னிப்பு என்பது பல சமயங்களில் பலமாக அமைகின்றது. அதாவது குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கு மன்னிப்பே காரணமாகின்றது. குறிப்பாக குடும்ப தலைவரின் மோசமான செயல்கள், உதாரணமாக மதுபோதைக்கு அடிமையாதல், வேறு பெண்களுடனான தவறான தொடர்பு போன்றவற்றையெல்லாம் தாங்கி மன்னிக்கும் பக்குவம் பெண்களுக்கே உள்ளது. இதனால் தான் பல குடும்பங்கள் இன்னமும் குடும்ப அமைப்பை குலைக்காமல் இருப்பதற்கு காரணமாகின்றது.
கீழைத்தேய நாடுகளைப் பொறுத்தவரையில் பெண்கள் பல்வேறுபட்ட சுரண்டல்களை எதிர்நோக்குகின்றனர். இவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து சாதாரண சமூகவாழ்வு வாழ்வதற்கு உளத்தைரியம்தான் ஏதுவாக அமைகின்றது. இதிலும், சுரண்டல்களுக்கு உள்ளான பெண்கள் சமூகத்தில் மீண்டும் வாழ்வதற்கான சக்தியும் அவர்களுக்குள் இருக்கும் தன்னம் பிக்கையே ஆகும்.
—
அனித்தா பூஷன்
2 thoughts on “உடலைவிட உளத்தைரியம் என்றும் பெண்களுக்கே அதிகம்!”