அம்மா சும்மா இருக்கப் பிறந்தவள் அல்ல
வாழ்க்கை என்பது ஒரு மரதன் ஓட்டம். ஒவ்வொருவரும் ஒருவர் விட்ட இடத்தில் இருந்து ஓடிக்கொண்டே இருக்கின்றோம். அந்த ஓட்டம் யாவருக்கும் சமமாக அமைந்து விடுவதுமில்லை, ஓட்டமும் முடிந்துவிடுவதும் இல்லை.
அன்று பாட்டி ஓடிமுடித்த இடத்தில் இருந்து அம்மா ஓடுகிறா. நாளை அம்மா விட்ட இடத்தில் இருந்து நான் ஓடுவேன். ஓவ்வொருவருக்கும் முன் ஓடியவர்களது கஸ்டம் மட்டும் தெளிவாகத் தெரியும், புரியும்.
அதனால் அம்மமாவுக்கு முன் பாட்டி (ஆச்சி) வாழ்ந்த வாழ்வும் சிரமமும் அம்மா நன்கு அறிந்திருப்பா. அன்றும் இன்றும் ஓர் ஒப்பீடாக பார்ப்போம்.
இன்று அம்மா செய்யும் ஒவ்வொரு வேலையும் அன்று இலகு அல்ல. நவீன முறையும் இன்று போல் இல்லை. எல்லா வேலைகளுமே தாமாகவே செய்துகொண்டார்கள். அவைகள் அனைத்தையும் நம்மால்செய்யமுடியுமா? உங்கள் அம்மாவை நினைத்துப் பாருங்கள்.
முதலில் சமையலை எடுத்துக் கொள்வோம். அன்று அம்மா மூன்று நேரமும் சமையல் தயார் செய்து கொள்வார். இன்றைய காலத்தில் முதலிலே மூன்று நேர சமையலைச் சமைத்து வைப்பார்கள். பின்னர் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து மறுநாளும் உண்ணுவார்கள். அப்பாNது இக்குளிர் சாதனப் பெட்டி வசதிகளில்லை. அன்று காலையில் பிட்டு அல்லது இடியப்பம் அவிப்பார் அம்மா. இன்று பாண். பிள்ளைகளும் இங்கு பாடசாலைக்கு பாண் கொண்டு செல்வார்கள். பெரிதாக காலையில் சமைக்கத்தேவையில்லை, ஆனால் இறைய அம்மா பாணையும் அன்பாNடு சுவையாக செய்து வைப்பார். அன்று இருந்த அம்மா வேலைக்குப் போகின்றவராக இருந்தால் முதலே உணவு செய்து பிள்ளைகளுக்குப் பாடசாலை போக சோறுகறி கட்டியும் கொடுப்பார். இங்கு அப்படியல்ல பாணே போதும்.
இரவு மழை பெய்தால் காலையில் நெருப்பு எரிக்க விறகு இல்லையென்று, நடு இரவில் மழைக்குள் வெளியில் இருக்கும் விறகு எடுத்து வருவா அம்மா. இப்போது இப்பிரச்சினையே இல்லை.
சரி சமையலை விடுவோம். மற்றைய வேலைகளைப் பார்ப்போம். அழுக்குத் துணிகளை ஆச்சி தன் கைகளாலே தோய்ப்பார். இன்றைய அம்மாவுக்கு வாஷின்மிஷின். கடினமேயில்லை. தானாகவே சுத்தம் செய்யும். வேலை குறைவல்லவா.
வீட்டில் உள்ளவர்களுக்கு வருத்தம் வந்தால் அம்மாவின் வீட்டு மருந்துதான் முதலில். புளிக்கஞ்சி, மல்லித்தண்ணி இப்படி பல. இம்மருந்துகளே போதுமே. ஆனால் இன்று உடனே வைத்தியரிடம் சென்று மருந்து வாங்குவார்கள். வீட்டு வைத்தியம் தெரியாதவர்களாக இருப்பார்கள். இளம் வயதிலுள்ள அம்மாக்களுக்கு: உங்கள் அம்மாவையோ அல்லது ஆச்சியைக் கேளுங்கள்.
அன்று போக்குவரத்துப் பிரச்சினையும் இருந்தது. இன்று போக்குவரத்தும் இலகு. கூடுதலானவர்களிடம் சிற்றூந்து இருக்கின்றது. அம்மாவும் ஓடுவார். நினைத்த இடங்களுக்கு நினைத்த நேரங்களில் செல்லலாம். ஆனால் அன்று… நடந்தே செல்வார்கள் அவ்வெய்யிலிலும்.
அடுத்ததாக அன்றைய காலத்தில் தொடர்பு ஊடகமும் இல்லை. பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த பின் என்ன செய்வார் அம்மா. அஞ்சல்கள் எழுதுவார்கள்…எழுதி அனுப்பிய பின் பிள்ளையின் அஞ்சல் வரும் வரை ஏங்கிக் கொண்டு இருப்பார். பார்க்க முடியாது பேசவும் முடியாது. இப்பொழுது என்னவென்றால் வட்சப். பார்த்தும் பேசலாம். உடனே பதிலும் வந்துவிடும்.
இன்றைய காலத்தில் தாயும் பிள்ளைகளும் நண்பர்கள் போன்று வட்சப்பில் உரையாடுகின்றனர். ஆனால் அன்று இது முடியுமா? வட்சப்பில் மட்டுமல்ல. எல்லா விடயங்களிலும் ஒரு நண்பி போல் இருக்கிறார் அம்மா. அதனால் பிள்ளை அம்மா உறவுகள் ஆரோக்கியமாக இருக்கின்றன.
பிள்ளைகளைப் புரிந்துகொள்வதற்கு நாம் அவர்களின் நண்பர்களாக மாறவேண்டும்!
அன்று பத்து பிள்ளைகளும் நிறைய வேலைகளும். தற்போது ஒன்றிலிருந்து மூன்று வரை பிள்ளைகள். ஆகையால் நேரங்களைப் பிள்ளைகளுக்காக ஒதுக்கமுடியும். அன்று கடினம்.
அம்மா என்பவர் அன்பு காட்டுபவர். அவர் செய்யும் வேலைகள் அன்று கடினமானவை. ஆனால் இன்று இலகுவானது வேலைகள். அது உண்மைதான். அதற்காக அம்மாவின் பொறுப்பு குறைந்துவிடவில்லை. அது மேலும் அதிகரித்துள்ளது. அன்று குறிப்பிட்ட சதவீத பெண்களே வேலைக்குச் சென்றார்கள். இன்று எண்பது சதவீதப் பெண்கள் வேலைக்குச் செல்கின்றார்கள். அத்துடன் வீட்டு வேலையும் பார்க்கிறார்கள். அம்மா சும்மா இருக்கப்பிறந்தவள் அல்ல. சுமைகளைச் சுகமாகச் சுமக்கப்பிறந்தவள். எம்மைக்கட்டி அணைத்து தூங்கும் அவள், அன்னையல்ல, அவள்தான் தெய்வம் என்றுணர்வோம்.
–றஜினா தருமராஜா
1,019 total views, 3 views today