மனைவி இல்லாட்டி மாதங்கியா?
ஒரு சகோதரியின் 6 வயது மகளுடன் அவளுக்கு பேனா வாங்கச் சென்றேன். அங்கே „இன்றுமுதல் புதிது: பெண்சிறுமிகளுக்கான பேனா“ என ஒரு பேனாவை விளம்பரப்படுத்தினர். இத்தனை காலம், பெண்கள் ஆண்களுக்கான பேனாவால் சாதனை படைத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள்!
அடுத்ததாய் சிறியவளுக்கு Shampoo வாங்கச்சென்றோம். அங்கே பெண்சிறுமிகளுக்கான Shampoo ரோசா நிறத்திலும், ஆண்குழந்தை களுக்கான Shampoo நீல நிறத்திலும் இருந்தது. பெண்சிறுமிகளிற்கென விளம்பரப்படுத்தப்பட்ட அந்த Shampoo வையே நான் கூட்டிவந்த சிறுமி நாடினாள். அதில் ஒரு இளவரசியாக இருக்கக்கூடிய பெண், தாழ்வு மனப்பான்மையுடன் நீலக்கண்ணால் அகலத்திறந்த நாணப் பார்வையாய் ஒரு சித்திரம். அவளின் மிக நீண்ட கூந்தலில் இளவரசிகளுக்கான Shampoo என குறிப்பிடப்படிருந்தது.
அதில் „கண்ணீர் வராமலே கூந்தலைக் கழுவிக்கொள்ளலாம்“ எனவும் எழுதியிருந்தது. அதே நிறுவனம், ஆண்குழந்தைகளுக்கும் ஒரு Shampoo வை விளம்பரம் செய்தது. அதில் கடல்வீரனின் சித்திரம் இருந்தது. அவன் மிக கம்பீரமாய், கோபமாய் வாளைநீட்டி எம்மைக் காணாததுபோல் தன் இலக்கை நோக்கினான். அதே வடிவம் கொண்ட கொள்கலனில், கண்ணீரைப்பற்றிக் கதை இல்லை. முடிகழுவும் பாட்டிலேயே பெண்குழந்தைகள் „கற்றுகோள்ள வேண்டிய“ நாணமும், பவ்வியமும், ஆண்குழந்தைகள் கற்றுகோள்ளவேண்டிய வைராக்கியமும், துணிவும், கண்ணீர்சிந்தா „ஆண்மையும்“ முடிகழுவும் வழியில் மூழைச் சலவை செய்யப்படுகின்றன.
சென்றவருடத்திலிருந்து தான் ஜேர்மனியில் மகப்பேற்றின் எண்ணிக்கை ஒரு குறுகிய அளவு அதிகரித்துள்ளது. அப்படி இருந்தாலும், வீட்டிற்கு வீடு ஆசியநாடுகளைவிட சிறுவர்கள் குறைவாகவே உள்ளன. இது பொருளாதாரத்திற்கு சேதமாகாமல் இருக்க, Marketing வல்லுனர்கள், அதாவது விளம்பரவல்லுனர்கள் ஆண், பெண்ணென சிறுவயதிலிருந்தே தீவிரமாகப் பிரித்து, கூடிய இலாபத்தை பெற்றுக்கொள்கின்றனர். ஜெண்டர்மார்கேட்டிங் (GenderMarketing ) எனப் பெயர்பெறும் இது, ஒரே வீட்டில் வாழும் அக்காவுக்கும், தம்பிக்கும் ஒரே விளையாட்டுப்போருள் இரு நிறங்களில் வாங்கப்படுவதில் தெரியவருகிறது. இருவரும் ஒரே பொருளுடன் விளையாடமுடியாது, காரணம்: இது ஆணுக்கானது, அது பெண்ணுக்கானது. பொருளாதாரத்திற்கு வெற்றியாக இருக்ககூடிய இவற்றால், சிறுவர்களிடையே தவறான பாகுபாடுகளை நிலை நாடுகிறது.
இளவரசி நாணமாகப் பார்ப்பதும், கடல்வீரன் தன் இலக்கை நோக்கி வீரமாகப் பார்ப்பதும் சிறுமிகள் மனங்களிலே தாழ்வுமனப்பான்மையை கிருமிபோன்று உண்டாக்க்குகின்றன.
பெண்குழந்தைளிற்கான சூப் (Soup) „இளவரசி-சூப்பாக“ இருக்கும் போது, ஆண்குழந்தைகளின் சூப் „தீயணைப்புக்குளுசூப்பாக“ உள்ளது. (SWR 25.01.2019) ஆண்குழந்தைகளுக்கு தீயணைப்பாளி என்று உன்மையான, துணிகரமான தொழில்களை முன்வைத்து, பெண்குழந்தைகளின் சிந்தனை களை கற்பனைத்தொழில்களால் சிதைக்கின்றனர், சிறுவர்பாடசாலை களில் „நீ என்னவாக வரப்போகிராய்?“ என்று கேட்டால்: ஆண்குழந்தைகள் „போலிசார்“, „தீயணைப்புக்குளுவினர்“ என்று நிஜத்தொழில்களைக் கூற, பெண்
குழந்தைகள் „தேவதை“, „இளவரசி“ „வண்ணாத்திப்பூச்சி“ என்று கனவுலகில் வாழ்வது தெரியவருகிறது. ஆண் இளைஞர்கள் சிறுவயதிலேயே தம் தொழிற்போக்கை முடிவுசெய்ய, பெண்கள் பள்ளி முடிந்ததும் என்ன செய்வது எனத் தெரியாமால் திணறிப்போகின்றனர்.
சிறு வயதிலேயே Genderrolesia அதாவது பாலுலகின் கதாப்பாத்திரங்களை ஊட்டிவந்த வினை இது. இழவரசிகள் ஆண்கள் தம்மை காப்பாற்றும் வரை இக்கட்டான நிலைமைகளில் சிக்கி இருக்கவேண்டியதுதான் யதார்த்தம் என்பதை விளம்பரக்கனவுகள் நியமித்துக்காட்டும் வழியில், சிறுவர் உள்ளங்களில் இவை பதிகின்றன. (SWR 25.01.2019)
இதனால் விளையாட்டுத்திடலில் இடம்பெறும் ஆண் ஃ பெண் வீர வேறுபாடுகள் பாடசாலைகள் முதல் தொழிலிடங்கள் வரை நீடிக்கின்றன. ஆணழகன் தன் இழவரசியைக் காப்பாற்றும் எண்ணத்தில் பாலியல் தாக்குதல்கள் அலுவலகத்தில் தொடங்குகின்றன.
பெண்குழந்தைகளுக்குச் செய்யப்படும் ஆடைகள் வர வர செயல்முறைப் படுத்தக்கூடிய நிலைகளில் இல்லை. சிறுமிகளின் காற்சட்டைகள் அவர்களை ஏறிக்குதித்தோ, தாவி விளையாட அனுமதிக்கும் முறையில் தைக்கப் படுவதில்லை. சிறுவயதிலெயே கவர்ச்சியெனும் பாணியில், அவர்களை ஆண்குழந்தைகளுக்கு சமனாக விளையாடி, தம் எல்லைகளை அறிய விடுவதில்லை. உடற்பயிற்சிக்கான ஆடைகளை விளம்பரப்படுத்துகையில் ஆண்களின் ஆடைகளை உண்மையான வீரர்கள் விளையாடும் அட்டவணைகளைப் போட்டு விளம்பரப்படுத்தி, பெண்களின் ஆடைகளை விளையாடுவதுபோல் „போஸ்“ கொடுக்கும் பெண்களைவைத்து விளையாட்டு வீராங்கனைகளை காமப்படுத்தி கற்பனை செய்கின்றனர். ( Lean In Podcast 14.11.2018) விளம்பரத்தில் வரும் இளவரசியிலிருந்து , செய்திவாசிக்கும் பெண்கூட, அதிகூடிய கச்சிதத்துடன்தான் ஊடகங்களில் காட்டபடுகிறாள். இளம்பெண்கள் அதைக்கண்டு என்னிலையிலும் அழகாய், கச்சிதமாய் மாசு இலாது இருக்கவேண்டும் என்ற எண்னத்தை வளர்த்து, தம் கச்சிதத்தை கத்திமுனையில் பணையம் வைத்து எந்த வீரச்செயலுக்கும் இறங்கு வதில்லை. இதனால் புதிய தொழில்வாய்ப்புக்களையோ, புதிய வாழ்க்கைத்திருப்பங்களை நேர்கொள்ள சிறுவயதிலிருந்து பெண்மக்கள் தயங்குகின்றனர்.
இது வகுப்பறையில் படிப்பிப்போர் கேள்;வி ஒன்றை கேட்டதும், ஆண்மாணவர்கள் மிக வேகாமாக பதிலளிப்பதும், பெண்மாணவிகள் பதில்களை பலமுறை யோசித்தே சொல்வதற்கும் காரணமாக இருக்கலாம் என வளர்ப்புமுறை அறிஞர்கள் கூறுகின்றனர்.
„மனைவி இல்லேனா, மாதங்கி!“ என்று ஒரு பெண்ணின் உள்ளடக்கத்தை கறித்தூளுக்கு சமனாக்கி, அவளை பழையபடி சமையலடிக்கு அனுப்புகிறது மார்க்கேட்டிங் (
Marketing ) உலகம்.
இத்தகைய சிக்கல்களை ஒன்றாக முடிவுகட்ட „Pink stinks“ என்ற ஒரு பிரச்சாரத்தை Dr.Stevie Schmiedel எனும் கலாச்சாரவியலாளர் பல அறிஞர்களுடன் இணைந்து தொடங்கியுள்ளார். அகிலம்தழுவி, இதுவே
GenderMarketing இற்கு எதிரான முதற்பிரச்சாரம். விளம்பரங்களில் தவறான பால் சம்மந்தப்பட்ட பாரபட்சங்களை இவர்கள் கண்டித்து, அதற்கான மாற்றுநோக்கங்களை எடுத்துக்காட்டுகின்றனர். இருந்தும் தனது மகளின் பிறந்த நாள் அன்று „உண்மையிலே உனக்கு Barbie பொம்மை வேண்டாமா?“ என்று காலில் விழுந்து கெஞ்சியதாக முன்னணிப்பெண்ணுரிமையாளர் Dr.Stevie Schmiedel கூறுகிறார். காரணம் சமுதாயத்தின் கட்டுப்பாடு களிலிருந்து விலகுவது என்றும் கடினமாகவே உள்ளது, ஆகவே எம் பெண்குழந்தைகளுக்கு என்ன சொல்வது? என்னோடு வந்த சிறுமிக்கு பெண்குழந்தைகளுக்கோ, ஆண்குழந்தைகளுக்கோ அல்லாது, குழந்தை களுக்கான பொருட்களையே கொள்வனவு செய்தேன். ரோசா நிறமும் இளவரிசியும் தான் உன் அடையாளம் அல்ல, தீயை அணைக்க நீயும் எழலாம் என அவளிடம் சொல்லிக்கொண்டேன்.
-ராம் .பரமானந்தன்
731 total views, 2 views today