நட்பு
உறவுகளில் தலைசிறந்தது நட்பா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உயிர்த்தோழன் என்பதன் அர்த்தம்? நண்பர்கள் இல்லாமல் இவ்வுலகில் யார் இருக்க முடியும்?
நட்பு என்றாலே “ந” நன்மை, நம்பிக்கை, நன்றிக்கடன் மற்றும் “பு” என்றால் புன்னகை, புதுமை, புரிதல், புனிதம் ஆகும். நட்பு என்பது மொழி, இனம்,மதம், பாலினம் பார்த்து வருவதில்லை. எவர்மீது நம்பிக்கை வருகிறதோ அவர்மீது நட்பு கொள்கிறோம்.
நட்பானது ஒரே இனத்துப் பாலினரோடு வருவதில்லை. ஆணோ பெண்ணோ உண்மையான நட்பாக இருந்தால் போதுமல்லவா! ஆனால் சில சமயங்களில் ஒரு பெண் ஓர் ஆணுடன் நட்புக் கொண்டிருந்தால் நம் சமூகம் அவ்வுறவினை ஏற்றுக் கொள்வது கடினம். வேதனைக்குரிய விடயம். நட்பினைப் பிரிக்கும் அளவுக்குக் காணெ;டு வந்து விடுவர்.
நட்பில் முக்கியமானதாக நம்பிக்கை கருதப்படுகிறது. தாய் தந்தையினரிடம் கூட கூறமுடியாத இயலாத விடயங்களை நாம் அனைவரும் எமது நண்பர்களிடம் கூறுகின்றோம். அந்த வகையில் நண்பன் நம்பி கூறும் இரகசியத்தை நாம் வேறு ஒருவரிடம் சென்று கூறக்கூடாது. இவ்விடயம் நட்பினை இழிவு படுத்திவிடும். நம்பிக்கையும் உடைந்துவிடும். ஆகவே நட்பினை நாம் நம்பிக்கையுடனும் உண்மையுடனும் பேணிக் காக்கவேண்டும். உண்மை நட்பு ஒரு போதும் அழியாது.
நண்பர்கள் நாம் துன்பத்தில் இருக்கும் பொழுது எங்களுக்காக நேரம் ஒதுக்கி உதவும் பண்பு உடையவர்களாக இருப்பார்கள். ஒரு வயிற்றுப் பிள்ளைகளாக இருக்கா விட்டாலும் நண்பர்கள் நம் கவலைகளில் பங்கு கொள்வார்கள். துன்பத்திலிருந்து எம்மை மீட்கும் எண்ணத்திலே இருப்பார்கள். உதவிக்கரம் நீட்டும் நட்பானது, கடவுள் எமக்கு தந்த வரம்.
பொறாமை, நம்பிக்கைத்துரோகம், பொய், வெறுப்பு, கோபம் போன்றவை நட்பில் இருக்கக் கூடாதவை. இவை நட்பினை அழித்துவிடும். நண்பர்கள் பிழையான பாதையில் செல்லும்போது சரியான பாதைக்குக் கொண்டு செல்வது நண்பர்களின் கடமை.
திருவள்ளுவர் அழகாக கூறுகிறார்:
குறள் 784:
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
குறள் விளக்கம்:
நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பனிடம் தீய செய்கை கண்டபோது, முற்பட்டு சென்று கண்டித்து அறிவுரை சொல்லுதற்கேயாகும்.
குறள் 786:
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
குறள் விளக்கம்:
ஒருவருடன் முகம் மட்டும் மலரும் வகையில் நட்புக் கொள்வது நட்பன்று, அன்பால் மனமும் மலர நட்புக் கொள்வதே நட்பாகும்.
வேறு நாட்டவர்களுடன் நட்புக் கொள்ளல் இலகுவான விடயம் அல்ல. அவர்களின் கலாச்சாரம் எங்களுடையவையுடன் ஒப்பிடும் பொழுது வேறாக இருக்கும். சில சமயங்களில் இக்கலாச்சார வேறுபாடுகளால் பிரிவுகள் ஏற்படுகின்றன. ஆனால் இவை அனைத்தையும் தாண்டி நட்புக் கொண்டிருக்கின்றனர். யேர்மனிய நாட்டவர்களின் நட்பானது எமக்கு புலம்பெயர் நாட்டில் கிடைத்த ஒரு பாக்கியம். அகதிகளாக வந்த எமக்கு அவர்கள் செய்யும் உதவிக்கு அளவே இல்லை.
என் நண்பியை எனக்கு ஐந்தாம் வயதில் இருந்து தெரியும். வெளி நாட்டவர். ஆரம்பத்தில் சண்டை பிடித்த நாங்கள் தற்போது இணைபிரியாத நண்பர்களாக இருக்கின்றாமே;. மேல் படிப்பினை நாங்கள் வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து இருந்தாலும் நாங்கள் பிரியவில்லை. எனக்கு ஒரு பிரச்சினை என்று கூறும் பொழுது அவளின் கண்களில் கண்ணீர் வந்ததை என்னால் மறக்கமுடியாது.
நம் வாழ்வில் நட்பினைப் புனிதமாக்குவோம்.
–றஜினா தருமராஜா
1,445 total views, 1 views today
2 thoughts on “நட்பு”