யேர்மனியில் சாதாரண மனிதர்கள் சொன்ன சரித்திரம்!
முன்பெல்லாம் எம்முடன் யேர்மனியில் வாழும் முதியவர்கள் ஒரு 35 வருடங்களுக்கு முன்பு நடந்த கதைகளைக் கதைத்தால் இவர்கள் என்ன எப்போ நடந்த பழம்கதையை இப்பவும் கதைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என எண்ணத்தோன்றியது.
ஆனால்….இன்று
தாய் நாட்டைவிட்டு யேர்மனிக்கு புலம்பெயர்ந்து 38 ஆண்டுகளை தொட்டுவிட்டோம். யுத்த ரணங்கள்; இன்னமும் நேற்று நடந்தவைபோலவே இருக்கின்றது. நிகழ்;காலத்தைவிட இறந்தகாலம் ஆழமாகப்பதிந்து கிடக்கிறது.
1980 களில் யேர்மனி வந்தபோது அங்கு ஒரு பாரிய யுத்தம் நடந்து 35 வருடங்களே கழிந்திருந்தன. எமக்கு 38 ஆண்டுகள் கழிந்துவிட்டன.
இன்று நமது மனநிலையில்தான் அன்று அவர்களும் இருந்திப்பார்கள் என இப்போ எண்ணத் தோன்றுகின்றது. உணரமுடிகிறது.
அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் எம்முடன் பரிமாறிக்கொண்ட வலிநிறைந்த கதைகளும்,வளமானகதைகளும்,சாதாரணமனிதர்களின் சரித்திரமாக உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
சரித்திரம் ஆட்சியில் உள்ளவர்களாலும்,வலியவர்களாலுமே அதிகம் எழுதப்படுகின்றது. சாதாரண மனிதனால் தனது சுயசரிதைதன்னும் முழுமையாக எழுத முடிவதில்லை.
இங்கு சொல்லப்படும் விடையங்களை தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு சரியானவற்றை எடுத்துக்கொள்ளுங்கள், எது சரி எது பிழை என ஆய்வு செய்யபட்ட கட்டுரை அல்ல. ஆனால் ஒரு குடையில் (நிறை வகை வகையாக பல பழங்கள்) பழங்கதைகளைச் சுமந்து வந்து தருகிறேன் தேவையானவற்றை சரியானவற்றை எடுங்கள் மீதியக இருந்தால் அதனை எறிhதீர்கள் அதுயாருடையதோ பசிக்கு உணவாகலாம்.
1980 களில் நாம் இளமையாக இருந்தபோதும் நமது பெரும்பகுதி முதியவர்களுடனேயே கழிந்தது. காரணம் எமக்கு யேர்மன் மொழி நன்கு பரீட்சயம் இல்லை. எம்முடன் இளயவர்களுக்கு பொறுமையாக உரையாட நேரம் கிடையாது. முதியவர்களே எமது மொழியாசிரியர்களாகவும் இருந்தனர்.
நாம் யேர்மனியில் லுட்விக்ஸ்ரட் என்னும் கிராமத்தில் 1981 இருந்த வேளை பல முதியவர்களுடன் தொடர்பு இருந்தது.
சுப்பலாண்ட் மம்மா
சுப்பலாண்ட் என்பது ஒரு கடையின் பெயர்.அந்தக்கடைக்கு மேல் அந்தக்கிழவியின் வீடு இருந்தபடியால் நாம் இட்டபெயர் சுப்பலாண்ட் மம்மா (யேர்மன்மொழியில் மம்மா என்றால் அம்மா) ஒரு கிழவி. இப்போ நமது வயதுடன் எண்ணிப்பார்த்தால் அவ அன்று கிழவி அல்ல குமரி. 60 வயதுதான் அவவிற்கு அப்போ இருந்திருக்கும்.
2வது உலகமாகா யுத்தத்தில் அவள் கணவன் காணாமல் போனவர். ஆனால் அவர் திரும்பவரலாம் என்று எண்ணி திருமணம் செய்யாமல் தன் ஒரு பெண்குழந்தையுடன் வாழ்ந்தவள். பின் பெண்பிள்ளையையும் நோயினால் இறக்க தனிமையில் வாழ்ந்தாள்.
பிள்ளை தன் கண்முன்னே இறந்தாள். ஆதனால் அவள் வாழ்வு அதுதான்.ஆனால் தன் கணவன் இறந்தாரா இருக்கிறாரா அவருக்கு என்ன நடந்தது எதுவும் அறியாமல் பித்துப்பிடித்தவளாக நடந்த அந்த சுப்பலாண்ட் மம்மாவின் இடத்தை நோக்கும்போது இன்று எத்தனை சுப்பலாண்ட் மம்மாக்கள் எமது நாட்டில் உள்ளார்கள் என எண்ணத்தோன்றுகிறது. அன்று புரிந்துகொள்ள முடியாத வலிஇப்போது தெரிகிறது. தனது ஓய்வூதியத்தில் ஒருபகுதி உணவிற்குப்போக மிகுதி எல்லாம் வறியநாடுகளில் உள்ள குழந்தைகளுக்கும் யேர்மனி இரண்டாக பிளவுபட்டு கிழக்குமேற்காகப் பிரிந்தபோது கிழக்கில் சிக்கிக்கொண்ட உறவினர்களுக்கும் பகிர்ந்து கொடுத்துவிடுவாள். தெருவில் கண்டால் எம்முடன் கதைத்துவிட்டு தன்கணவன் பற்றி தானாக ஒரு கதை வரவளைத்து கணவனை நினைவுபடுத்தி தன் பேச்சை முடிக்கும் அந்தக்கழவி இப்போ மூச்சை நிறுதி இருப்பாள்.அவர்கள் ஆத்மாக்கள் தன்னும் இணையாதா என எம்மனம் எண்ணுகின்றது.
கிழவன் கிழவி:
தினம் கடைதெருவிற்கு போனால் கோடைகாலம் என்றால் தெப்பியுடன் தெருவில் உள்ள வாங்கில் இருப்பார்கள். நம்மைக்கண்டதும் பொக்கற்றுக்குள் கைவிட்டு ஒரு ரொபி தருவார்கள். நாம் அவர்களுக்கு அவர்கள் குழந்தை மாதிரி.
பனிக்காலம் என்றால் வீட்டின் 3ம் மடியில் இருந்து கைகாட்டுவார்கள்,கைதட்டுவார்கள் வெளியே வரமாட்டார்கள். ஆனால் ரொபி கிடைக்கும்.
கோடைக் காலத்தில் எமக்கு கதைகதையாக சொல்வார்கள். யேர்மன் மொழி பெரிதாகப் புரியாது ஆனால் அவர்களுடன் கதைத்து கதைத்து அவர்களிடமே மொழியைக்கற்று அவர்கள் சொல்வதை புரியுமளவிற்கு நாம் வளர்ந்துவிட்டோம்.
கிட்லர் என்றால் சர்வாதிகாரி ஓரு கொடிய அரக்கன் என்றுதான் யாரும் சொல்வார்கள். ஆனால் அந்தக் கிழவன் கிழவி சொன்னபோது வியப்பாக இருந்து.
அவர்கள் கிட்லர் கட்சியில் இருக்கவில்லை. அவரை ஆதரிக்கவும் இல்லை. ஆனால் கிட்லர் மறைந்த பின்பு அவன் செய்த நல்லவைகளும் உண்டு என எமக்கு சொல்ல ஆரம்பித்தார்கள். .
1933 ஆண்டு லேலை இல்லாதோர் 60 இலட்சம், யுத்தகாலத்தைவிட பஞ்சம் நிறைந்த காலம் அது. கிட்லர் இந்தக்கால கட்டத்தில் அரசபதவி ஏற்றார். உழைப்பு! உழைப்பு! என உரக்கச்சத்தமிட்டார்.திட்டமிட்டார். வேலை செய்யாமல் எவரும் இருக்கக்கூடாது என எழுதாத சட்டத்தை உருவாக்கினார். காசு உள்ளவர்களும் வேலை செய்தே ஆகவேண்டும். 1936 வேலை இல்லாதேர் எவரும் இல்லை! இப்போ காசு உள்ளவர்கள் வேலை செய்வதில்லை. ஏன வீண் பொழுது போக்குபவர்களைக்காட்டிச் சிரிப்பார்கள்.
இன்று தமக்கு கிடைக்கும் பென்சன் கிட்லர் போட்ட திட்டம். முதியவர்களுக்கான பென்சன் திட்டத்தின் முன்னோடியும் அவர்தான்.
குழந்தைகள் மீது அபார அன்பு கொண்டவர். மிருகங்கள் மீதும் கருணை கொண்டவர். மாமிசம் உண்ணாத ஒரு மனிதன். குழந்தைகளுக்கு என யேர்மனியில் வழங்கப்படும் பணமும் அதற்கான திட்டமும்கூட அவருடையது என்றே சொல்லப்படுகின்றது.
சாமானியர்கள் எல்லாம் வாகனம் வைத்திருக்கும்படி சிக்கனமான விலை குறைந்த கார்கள உற்பத்தி செய்யவேண்டும் என அரசாணை பிறப்பித்தவர். 1 கலனுக்கு 40 மைல் போகக்கூடிய வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. நீர் ஊற்றாமல் குளிர்காலத்திலும் (-0) ஓடும்படியாக (Volkswagen) வோக்ஸ்வகன் கார் கண்டுபிடிக்கப்பட்டதும் அவர்காலத்தில்தான்.
இன்று உலகெங்கும் உள்ள பெரும் தெருக்களுக்கு வித்திட்டவரும் அவர்தான். முதலாவது (High way) பெருந்தெரு யேர்மனியிலேயே போடப்பட்டது. மற்றும் பாடசாலை வைத்தியசாலை முதியவர்கள் வாழும் இடம் என இவற்றை அண்மித்த இடமெல்லாம் தெருவில் ஒரு பிட்டி போட்டு வாகனம் மெதுவாகச் செல்க் கற்றுக்கொடுத்தவரும் அவர்தான்.( நாம் இலங்கையில் தெருவில் தண்ணீர்பந்தல் போடும்போது தெருவில் இருமருங்கிலும் மண்ணால் ஒரு பிட்டி அமைத்து வாகன வேகத்தைக் கட்டுப்படுத்துவோம். இதனையும் நாம் அவர்களுக்கு சொல்ல மறக்கவில்லை.
இவ்வளவு நல்ல குணம் இரக்கம் படைத்தவர் எப்படி 6 மில்லியன் யூதர்களை இளைவர் முதியவர் பெண்கள் எனப்பாரர்க்காது கொண்டு ஒழித்தார் எனக் கேட்டபோது. அதுதான் அவர் செய்த பெரும் தவறு. அவரது மனதில் யூதர்கள் மனிதவர்க்கம் என்ற நிலையில் இருந்து ஒருவித கொடிய கிருமி என்ற எண்ணம் வலுப்பெற்று இருந்து. அவர் படையில் உள்வர்கள் இரக்கம்கொண்டவர்களாக இருந்தாலும் கிட்லர் கடவுள் மாதிரி தாம் கொல்லாவிட்டால் அவர் எப்படியும் அதனை அறிந்து விடுவார். ஓவ்வொருவருக்குள்ளும் கிட்லர் இருப்பதுபோல் படையினரை மூளைச்சலவை செய்து வைத்திருந்தார்.
உண்மையில் நல்லதை மட்டும் தொடர்ந்திருந்தால்; கிட்லர் கடவுள்தான் என்பார்கள்.
ஜெர்மனியில் பல முக்கிய நதிகள் உள்ளன. இவற்றுள் மிக நீளமான ரைன் ஆறு (Rhine River) 1232 கி.மீ. நீளம் கொண்டது. எல்பா மற்றும் தன்யூப் ஆகியன ரைனிற்க்கு அடுத்த பெரிய நதிகளாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீர்வழி போக்குவரத்திற்கு இவ்வாறுகள் உதவுகின்றன.
இந்த நதிகள் எதுவும் மாசுபாடது இருக்க நதிளை சுத்தமாகப்பேணியவரும் அவர்தான். தொழிற்சாலைகளால் அவை மாசுபடக்கூடாது என திடமா இருந்தார்.
போர்கால ஆயதங்கள் தொழிநுட்பங்கள் இவற்றில் சிறந்த யேர்மனிய விஞ்hனிகளை போர் முடிந்தும் பங்கு போட்டுப் பிரித்தவர்கள் அமெரிக்காவும் இரசியாவும்;தான். இன்று நாசாவில் அவர்களது தலைமுறைதான் தலமைதாங்குகிறது.
நாம் இங்கு வந்தநேரம் காதல் கடிதங்களுடன்தான் வந்து சேர்ந்தோம். கைத்தொலை பேசியும் இல்லை வைபரும் இல்லை வட்சப்பும் இல்லை. கடிதம் மட்டுமே ஒரே வழி. அது பரிமாறும் சுகமும் தனிரகம்தான். நாம் இங்கு காதல் மிகுந்த குடும்பங்களாக இருப்பது கண்டு யேர்மனி மக்கள் குறிப்பாக முதியவர்கள் எம்மை மிகவும் மரியதைக்குரியவர்களாகப் பாரத்தார்கள்.
இப்படித்தான் அன்று நாமும் இருந்தோம்.அமெரிக்கா வந்துதான் எமது காலச்சாரம் பண்பாடு எல்லாம் மாறிப்போச்சு என்பார்கள்.
முன்பு எல்லாம் இப்படி தெரு தெருவாக நின்று முத்தம் கொடுக்க முடியாது! ஏன் பேசவே ஏலாது. காதல் என்ற அறிந்தால் போதும். பெற்றோர் தெருவில் நின்று கதைக்கவேண்டாம், வீட்டில் வந்து கதைக்கும்படி சொல்வார்கள். அது மட்டுமல்ல ஜீன்ஸ் போடுவது கிடையாது. உடலோடு ஒட்டிய உடைகளும் போடுவதில்லை. முளங்காலுக்கு கீழ் இருக்கும்படியான பாவடைதான் பெண்கள் அணிவார்கள்.
பாடசாலைகூட ஆண்கள் பெண்கள் என்ற தனித்தனியாகத்தான் இருந்தது. இன்றுகூட சேச்சுக்கு வரும் முதியவர்களைப் பார்த்தால் அந்த முளங்காலுக்கு கீழ் நிற்கும்படியான பாவடையுடன்தான் வருவார்கள்.
நாமும் அவர்களும் ஒரே நிலையில் இருந்தோம் என்பதனை அன்று அவர்கள் புரிந்திருந்தார்கள். இன்று நாமும் புரிகின்றோம். வாய்வழிக்கதை என்றாலும் நேரலையாக எம்மை அடைந்த கதைகள். இவை சரித்திரத்தைவிட பலமானவை உண்மையானவை. உறுதியானவை. இது சாதாரண மனிதரின் சரித்திரமாக இப்போது உணர்கின்றோம்.
— வெற்றிமணி மு.க.சு.சிவகுமாரன்.
917 total views, 3 views today
3 thoughts on “யேர்மனியில் சாதாரண மனிதர்கள் சொன்ன சரித்திரம்!”