ஆண்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள்

இதைச் சொன்னா ஆணாதிக்கவாதின்னு முறத்தால் புலி விரட்டிய பெண்கள் நம்மை நோக்கி கோபக் கணைகளை வீசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனாலும் என்ன, உண்மையைச் சொல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

ஆண்களுக்கான பிரச்சினை இன்று நேற்று நடந்ததல்ல. உதாரணமாக ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள். ஆதிகாலத்தில் திருமணம் எப்படி நடந்தது ? அலுங்காமல் குலுங்காமல் கையில் மாலையோடு வருகின்ற பெண், பிடித்தமானவனுக்கு மாலை போட்டு விட்டு கிளம்பி விடுவார். பாவம் நிராகரிக்கப்பட்ட ஆண்களின் நிலமையை நினைத்துப் பாருங்கள்.

சரி, அதாவது பரவாயில்லை. கல்லைத் தூக்கினா தான் பொண்ணைத் தருவேன், வில்லைத் தூக்கினா தான் பொண்ணைத் தருவேன் என்றெல்லாம் சொல்லி, பொது இடத்துல யாரோட பெண்டு நிமிர்க்கப்பட்டதுன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. பாவம் ஆண்கள்ன்னு நீங்களே ஒத்துப்பீங்க.

அப்படியே ஏதாச்சும் ஒரு பொண்ணை மனசுக்குப் புடிச்சு போயி, பொண்ணு கேக்கலாம்ன்னு பாத்தா கொல்லையில “ஓடற நாலு காளை மாட்டை அடக்கிட்டு வாரும்”, என படாத பாடு படவைத்து, கொம்புகளின் வம்புகளில் சிக்கி தெம்பு போய் கிடந்தது ஆணினம் தானே ! பாவம், ஒரு திருமணத்துக்கே இவ்வளவு பிரம்ம பிரயர்த்தனம் செய்ய வேண்டியிருந்தது.

களத்தில் குதிக்கவே இவ்வளவு கஷ்டம் என்றால், திருமணம் முடிந்தபின் வருகின்ற சிக்கல்களையும், சவால்களையும், பிரச்சினைகளையும் எல்லாம் “ஆண்களின் கடமைகள்” எனும் ஒற்றைச் சாவியில் பூட்டித் தானே நம்மிடம் தருகிறார்கள்.

ஏதோ குட்டிச்சாத்தானை அடைத்து வைத்த குடுவை நம்மிடம் இருப்பது போல ஆண்களுக்கு நேராக வீட்டில் விண்ணப்பங்கள் எறியப்பட்டுக் கொண்டே இருக்கும். ‘இன்னுமா அது முடியல’, ‘அதைக் கூட பண்ண முடியலையா’ என பாராட்டுகளை கேட்டுக் கேட்டு விஷயங்களை நிறைவேற்ற நாக்கு தள்ளும் போது மனசு சத்தமாய்க் கத்தும். “ஜல்லிக்கட்டெல்லாம் கஷ்டமே இல்லை மாப்ளே..!”

சாதாரணமா ஒரு மீசை வைக்க வேண்டுமென்றால் கூட எத்தனை அவமானங்களைக் கடந்து வர வேண்டியிருக்கிறது என யோசித்துப் பாருங்கள். ஒரு விஷயத்தை கொஞ்சம் தப்பாய் செய்து விட்டால், “உனக்கெல்லாம் மீசை எதுக்கு” என்றொரு விமர்சனம் வரும். அதற்காக மீசையை எடுத்து விட்டால், “லேய் மீசை கூட மொளைக்காத பய” என மற்றொரு விமர்சனம் வரும். இப்போ மீசையை வைக்கவா எடுக்கவா ? என பட்டிமன்றம் தான் வைக்கவேண்டி வரும்.

இதையெல்லாம் கூட தாங்கிக் கொள்ளலாம். மாலையில் வீடு நுழையும் போதே, அழுகையும் ஒப்பாரியுமாய் இருக்கின்ற சீரியலின் வரவேற்பறையைத் தாண்டுவதே பெரும்பாடு. எப்போதாவது நடக்கும் விளையாட்டைக் கூட மொபைலில் ஸ்கோர் பார்த்து அமைதியாய் இருந்தால் தான் சோறே கிடைக்கும்.சீரியல் முடிந்தபின் வீட்டுப் பெண்களே இயக்குனர்களாகவும், நீதிபதிகளாகவும் மாறிப் பேசுகின்ற அந்த நிமிடங்கள் திகில் நிறைந்தவை.

இந்த பெண்களுக்குத் தான் எப்படி ரிமோட் கன்ட்ரோல் போல கண்ணீர் வருமோ. ஆண்களுக்கு இந்த விஷயத்தில் கண்ணீர் வடிக்கக் கூட அனுமதியில்லை. “ஏம்பா பொம்பள மாதிரி அழுவுறே” என்பார்கள். அழாமல் இருந்தால், “கல்மனசுப்பா.. ஒரு சொட்டு கண்ணீரு வருதா பாரு” என்பார்கள். இருபக்கமும் இடிவாங்கும் மத்தளம் தான் ஆண்கள்.

குடும்பத்தோட பாதுகாப்பு, பொருளாதாரத் தேவை இவற்றையெல்லாம் தலையில் தூக்கிப் போட்டு அலைந்து அலைந்து மன அழுத்தத்தில் விழுவதும் ஆண்கள் தான். “இதெல்லாம் உங்க கடமை” என்று ஊரே சொல்லும். மௌனமாய் தலையாட்டுவதைத் தவிர வேறென்ன செய்ய இயலும் பாவப்பட்ட ஆண்கள் இனம்.

சரி, அதெல்லாம் போகட்டும் சின்ன விஷயங்கள். ஆண்கள் என்றதும் மக்களுடைய மனதில் என்ன ஒரு பிம்பம் வருகிறது ? ஆம்பளன்னா என்னப்பா, அவங்களுக்கு தேவை மூணே மூணு விஷயம் தான் . ஸ்போர்ட்ஸ், தண்ணி, பாலியல் சிந்தனை, ஈர்ப்பு. அதைத் தாண்டி ஒண்ணுமே இல்லை என்பார்கள். யோவ், இதைத் தாண்டிதான் எங்க உலகமே இருக்கு என்று கத்தினாலும் யாரும் காது கொடுத்துக் கேட்பதில்லை. ஆண்களின் குரலுக்கு எங்கேயுமே மரியாதை இல்லை.

இதை நம்பாதவர்களுக்கு ஒரு சின்ன சோதனை. நேரா போலீஸ்ல போய் “கணவன் ரொம்ப கொடுமைப்படுத்தறாரு” என ஒரு கம்ளெயின்ட் உங்க மனைவி கொடுத்துப் பார்க்கட்டும். நீங்கள் கரடியாய்க் கத்தினாலும் உங்களுடைய பேச்சை யாருமே பொருட்படுத்த மாட்டார்கள். “பொம்பள புள்ள பொய்யா சொல்லும்’ என நம்மைப் பார்த்தே கேள்வி கேட்பார்கள். வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் மாதிரி, மனைவியா இருக்கிறவங்க பொய் சொல்ல மாட்டாங்கன்னு அவங்களாகவே ஒரு முடிவு எடுத்து வெச்சிருக்காங்க.

சும்மா டிஜிடல் வெளியில சூமீடூ என்று யாராவது ஏதாவது சொன்னால் கூட ஆண்களை தான் சந்தேகப்படுவார்கள். ‘பாவம்பா பெண்கள்’ என்று ஊரே சொல்வதால் என்னதான் மூச்சைப் பிடித்துக் கத்தினாலும் ஆண்களின் குரல் அகல பாதாளத்தில் தான் கேட்கும். அப்படியே ஆண்கள் போராடி தங்களை நிரூபித்தாலும், அதற்குள் தாடி நரைத்து, நாடி இளைத்துப் போயிருக்கும். இதுக்கப்புறம் நிரூபிச்சா என்ன நிரூபிக்கலேன்னா என்ன ந்னு ஆயிடும்.

மோசமான ஆண்கள் இல்லேன்னு சொல்லல. ஆனாலும், காண்கிற ஆண்கள் எல்லாமே மோசமான ஆண்கள்ன்னு நினைக்கிறது தான் நமக்கு அலர்ஜியாயிடுது. அதுவும் அகால நேரத்துல ஏதாச்சும் பெண்களை எதிர்கொண்டால் ஆண்களை ஒரு காமுகனின் கார்ப்பரேட் போலத் தான் பார்ப்பார்கள். இப்படிப்பட்ட சூழலில் நம்பகத் தன்மையை நிரூபிக்க ஆண்கள் படும் பாடு சொல்லி மாளாது.

ஆண்களுக்கும் அன்பு, நட்பு, பாசம், சகோதர பாசம் எல்லாம் வரும் என்பது பெரும்பாலானவர்களுக்குப் புரியவும் செய்யாது. ஆண்கள் சிரித்தாலே, “ஏதோ தப்பா இருக்கு, கவனிச்சுக்கோ” என்று தான் பெண்களின் உள்மனசு கிறுக்கித் தள்ளுகிறது.

இதையெல்லாம் ஏதோ சும்மா குத்து மதிப்பாகச் சொல்லவில்லை. இங்கிலாந்தில் சுமார் 40 சதவீதம் ஆண்கள் பெண்களின் கொடுமைக்கு ஆளாவதாக ஒரு புள்ளி விவரம் சமீபத்தில் வந்தது. அமெரிக்காவில் இந்த சதவீதம் இன்னும் அதிகம்.

ஆண்கள் இப்படி பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருந்தாலும், சமூகம் எனும் அமைப்பைக் கட்டியெழுப்புவதில் அவர்களுடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பெண்களோடு இணைந்தும், முன்னின்றும் பல மாற்றங்களை அவர்கள் சுமந்து செல்ல வேண்டியிருக்கிறது.

தன்னை அளிப்பவனாக, பாதுகாப்பு அளிப்பவனாக, அன்பு பகிர்பவனாக, வழிகாட்டும் தோழனாக, நேர்மையாளனாக, மரியாதைக்குரியவனாக, பெண்மையை மதிப்பவனாக பல வெளிப்பாடுகள் ஆண்களுக்குத் தேவைப்படுகின்றன.

ஒரு குடும்பத்தைக் கட்டியெழுப்புவதில் அன்பின் தோழனாக வாழவேண்டும். ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் தார்மீகக் கடமை கொண்ட ஒரு மனிதனாக மாறவேண்டும். ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இன்னல் தாங்கும் ஒரு மனிதனாக உலவவேண்டும். குழந்தையைத் தோளிலும், பெண்மையை உயிரிலும், சமூகத்தைச் சிந்தையிலும் சுமக்கும் ஆண்களே பெண்களின் பிரியத்துக்குரியவர்கள்.

அத்தகைய ஒரு வாழ்க்கையை ஆண்கள் அமைத்துக் கொள்ளும்போது எதிர்படுகின்ற சிக்கல்களையெல்லாம் புன்னகையோடு புறந்தள்ளிப் பயணிக்க முடியும்.

சேவியர்

1,094 total views, 1 views today