உதவிக்கு மட்டுமே உறவா

காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ஒப்பிட்டுப் பார்க்கும் முறையானது எம்முடைய தவறுகளையும் சிந்தனைப் போக்கையும் சீர் செய்ய உதவுகின்றது.

அல்ஸ்கைமர் என்னும் நோயாளிக்கு அளிக்கும் பயிற்சியில் ஒன்று அல்பம் பார்த்தலும் விளக்கம் அளித்தலும் ஆகும். அன்று ஒரு நோயாளியின் 50 ஆவது ஆண்டுத் திருமணவிழா அல்பத்தைப் பார்த்த போது ஆச்சரியமாகவும் ஆசையாகவும் இருந்தது. காரணம் இரத்த உறவினர்கள் அனைவரும் மொத்தமாக இணைந்திருந்து ஒரு புகைப்படம் எடுத்திருந்தார்கள். கைக்குழந்தைகள் உட்பட 103 பேர் நின்று எடுத்த புகைப்படமே எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. எம்முடைய குடும்ப அல்பத்தில் இவ்வாறு ஒற்றுமையுடன் அனைவரும் இணைந்திருந்தால் எத்தனை பேர் இணைந்து இருப்பார்கள் என்று ஒவ்வொருவரும் நினைத்துப் பாருங்கள்.
வருடத்தில் ஒரு நாளாவது ஒன்றாக இணையும் முறை ஜேர்மனியருக்கு உள்ள பழக்கவழக்கங்களில் ஒன்று ஆகும். நத்தார் விழாவில் எங்கே இருந்தாலும் பெற்றோரைத் தேடி வந்து அவர்களுடன் இணைந்தே நத்தார் விழாவைக் கொண்டாடுவார்கள். ஞாயிற்றுக் கிழமை குடும்பநாள் என்று முடிவு கொண்டு அன்றைய தினம் எந்த நியமனங்களையும் அவர்கள் வைத்துக் கொள்வதில்லை. இவ்வாறு கிட்டே என்றும் இருந்து தொல்லை கொடுக்காது. தள்ளி இருந்து உறவை வளர்ப்பதே அவர்கள் பண்பாகப்படுகின்றது.
ஜேர்மனியர்கள் மத்தியில் அவர்கள் குடும்பப் பெயரானது தொடர்ந்து பிறக்கின்ற பிள்ளைகள் எல்லோருக்கும் கூடவே தொடர்ந்து வரும். தமிழர்கள் மத்தியில் ஒரு பெண் ஒருவரைத் திருமணம் செய்கின்ற போது அந்தப்பெண்ணின் பெயர் திருமதி என்று மாறி கணவன் பெயருடன் ஒட்டிவிடுகின்றது. இங்கே தந்தை பெயர் இடம் தெரியாமல் ஓடி மறைந்து விடுகின்றது. எம்முடைய பாட்டன் பூட்டன் பெயர் எத்தனை பேருக்குத் தெரியும். ஆனால், ஜேர்மனியரை பார்க்கின்ற போது தொடர்ந்து வரும் பெயர் அவர்கள் பரம்பரைப் பெயராகவே இருக்கும். அனைவரும் பாட்டன் பூட்டன் பெயர்களை ஞாபகத்தில் வைத்திருக்கின்றார்கள்.
எமது உறவினர்கள் கூடுகின்ற குடும்ப விழாவை எடுத்துப் பார்த்தால் அனைவரும் கலந்து சிறப்பிப்பது அருமையாக இருக்கின்றது. உறவினர்கள் பணம் தரவில்லை என்று சிலரும், காணி விற்ற பணத்தில் ஒரு பகுதி தமக்குப் பகிரவில்லை என்ற கோபத்தில் சிலரும், தம்மைவிட உயர்ந்து நிற்கின்றார்களே என்ற பொறாமையில் சிலரும், தம்முடைய விருப்பத்தை மீறித் திருமணம் செய்து வாழுகின்றார்கள் என்று சிலரும், உள்வீட்டுப் பூசலைத் தூண்டிவிட்டு அழகு பார்த்துப் பிரிந்து நிற்கும் சிலரும், என சின்னச்சின்னக் காரணங்களைப் பெரிதாக நினைத்து ஒன்றிணைய விரும்புவதில்லை. இரத்த உறவினர்கள் இணைந்து எடுத்த புகைப்படத்தில் இருப்பவர்கள் தொகை தாயகத்தில் கூடக் குறைவாகவே இருக்கும்ஃ
எமது இனம் தாம் ஆதரவு தேடி வெவ்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த போது கைகள் மட்டுமே துணை என்று துணிந்து புகுந்தார்கள். பெரும் கடினத்தின் மத்தியில் தம்மால் முடியாத வேலைகளைக் கூட வாழ வேண்டும் என்ற காரணத்தினால் துணிந்து செய்தார்கள். அந்த வேளையில் கையில் கிடைக்கும் பணத்தில் ஒரு தொலைபேசி அட்டையை காசு கொடுத்து வாங்கி தாயகத்திலுள்ள உறவினர்களுடன் பேசி உறவாடி மகிழ்ந்தார்கள். தொலைபேசிக் கட்டணத்திற்காக பணத்தை யன்னலைத் திறந்து எறிகின்றீர்களே என்று ஒரு ஜேர்மனிய நண்பன் கூறியதை இன்றும் நினைத்துப் பார்க்கின்றேன். இவ்வாறு ஒருநாள் தொலைபேசி அழைப்பு வரவில்லை என்றால், ஏன் தொலைபேசி எடுக்கவில்லை என்று கலங்கிவிடுவார்களே என்று பணத்தைவிட உறவுதான் உத்தமம் என்று நினைத்தவர்கள் அதிகம். ஆனால், இன்றோ உலகநாடுகளிலுள்ள உறவினர்களுடன் நினைத்தவுடன் பேச கையில் Viber, whatsapp, massenger, skype போன்ற எத்தனையோ வசதிகள் இருந்தும் தொடர்புகள் இல்லை. தாயகத்து உறவுகளுக்கு புலம்பெயர் உறவுகளின் அவசியம் குறைந்துவிட்டது. தாயகத்தில் பணவீக்கம் கட்டுக்கடங்காது அதிகரித்துவிட்டது. அதனால், புலம்பெயர்ந்N தாரைத் தேட வேண்டிய அவசியம் உறவினர்களுக்குக் கிடையாது.
ஆனால், இன்று உதவி தேவைப்படுவோருக்கு மாத்திரமே massenger தேவைப்படுகின்றது. அப்படியென்றால், உதவிக்கு மட்டுமே உறவா என்ற கேள்வி தலைநிமிர்ந்து நிற்கின்றது.

உறவினர்கள் என்பவர் யார்? என்று புலம்பெயர் மனித மனங்களில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணத்தை அகல விரித்துச் சிந்தித்துப் பார்த்தால், இன்று அருகே இருப்பவர் உலகநாடுகளில் எந்த எல்லையில் பிறந்தாரோ! அந்த மனிதரே இன்று ஆபத்துக்குப் பக்கபலமாகின்றார். கையிலே பனம் பழத்தை வைத்துக் கொண்டு நெய்யுக்கு ஏன் அலைய வேண்டும். தூரத்துத் தண்ணி ஆபத்துக்குதவாது. ஓடி வந்து ஏற்றிச் செல்ல அம்புலன்ஸ் வண்டியைக் கொடுப்பவர் இந்த நாட்டவரே. கைபிடித்துக் கூட்டிச்செல்ல உதவிக்கு வருபவர் எந்த போலந்து அல்லது துருக்கி நாட்டவரோ அவரே. உற்றார் உறவினர்கள் அல்ல. இனமத பேதமற்ற அன்பே அவசியமாகின்றது.
இதனையே மூதுரையிலே ஒளவையார் கூறினார்.

உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி – உடன்பிறவா
மாமலையிலுள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.

இப்பாடலிலே நோய் எங்கள் உடலுக்குள்ளேயே இருந்து எங்களைக் கொல்லுகின்றது. அதேபோல உடன் பிறந்தவர்கள் சுற்றம் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியதில்லை. மலையிலுள்ள மூலிகைகள் தானே நோயைத் தீர்க்கின்றன. எங்கோ இருந்துதானே எமது நோய்க்கு மருந்து கிடைக்கின்றது. என்று அனுபவித்துத்தானோ எழுதினார்.
இப்பாடலைக் கேட்கும் போது
தலையிடி காய்ச்சல் வந்தால் தயவுடன் மருந்தைக் கேளாய்
மலையிலுள்ள கல்லைத் தூக்கித் தலையில் போட்டால்
தலையிடி நின்றிவிடும்.

என்று மட்டக்களப்பு மண்ணிலே நகைச்சுவையாகப் பாடப்படும் ஒரு நாட்டுப் பாடல் என் எண்ணத்தில் வந்து விழுகின்றது.
எனவே அருகே யார் இருக்கின்றார்களோ, அவர்களுடன் ஒட்டி உறவாடி உறவினர்களாகக் கைகோர்த்துப் பழகுவோம். கிடைக்காத உறவை நினைத்து ஏங்குவதை விட்டு கிடைக்கின்ற உறவைப் பலப்படுத்திக் கொள்ளுவோம்.

— கௌசி

987 total views, 2 views today

1 thought on “உதவிக்கு மட்டுமே உறவா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *