உயிர்த்த ஞாயிறு தினத்தில் உயிர் குடித்த தாக்குதல்கள்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற 8 குண்டுவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன. தாக்குதல் குறித்து ஏப்ரல் முதல் வாரத்திலேயே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், அதனையிட்டு ஏன் அக்கறை செலுத்தப்படவில்லை என்பது முக்கிய கேள்வியாக இப்போது எழுப்பப்பட்டிருக்கின்றது. இந்தத் தவறுக்குப் பொறுப்பேற்கப்போவது யார்?
 
கிறீஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறு பண்டிகையான கடந்த 21 ஆம் திகதி இலங்கையில் 3 முக்கிய தேவாலயங்கள், 3 பிரபல ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் பெரும் குண்டுவெடிப்புகள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவங்களில் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர். பலரின் உடல்கள் சம்பவம் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து சதைத்துண்டங்களாக மீட்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களில் சுமார் 40 பேர் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் என்பது கவனத்துக்குரியது. அத்துடன், இந் தக் கொடூர சம்பவங்களில் சிக்கி 500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இஸ்லாமிய தீவிரவாதிகள் இலங்கையைக் குறிவைத்து செயற்படத் தொடங்கியிருக்கின்றார்கள் என்பது பழைய செய்தி. இவர்களுக்காக கிழக்கில் காத்தான்குடி பகுதியில் பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. புலனாய்வுப் பிரிவுகள் இது குறித்த தகவல்களை அரசாங்கத்துக்குக் கொடுத்திருந்த போதிலும், அரசாங்கம் அதனைிட்டு தீவிரமாகச் செயற்படவில்லை. முஸ்லிம் அரசியல் தலைமைகளின் ஆதரவு தேவையாக இருந்தமையால், இவ்விடயத்தை அரசாங்கம் மென்மையாகக் கையாண்டதுதான் இந்த நிலைமைக்குக் காரணம் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவங்கள் இடம்பெற்ற மூன்று இடங்களிலிருந்து 3 ஆண்களின் தலைகளும் மீட்கப்பட்டுள்ளன. இவை தற்கொலைத் தாக்குதலுக்கான சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளன. அதனைவிட, தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைத் தாக்குதல்தாரிகளில் ஒருவரைத் தவிர மற்றையவர்கள் வெளிநாட்டவர்கள் எனச் சொல்லப்படுகின்றது. மிகவும் சிறப்பான பயிற்சியைப் பெற்றவர்களே களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றார்கள்.

தேவாலயங்களில் உயிர்ப்பு ஞாயிறு பண்டிகை கொண்டாடப்பட்டவேளையிலும், ஹோட்டல்களில் நேற்றுக் காலை ஈஸ்டர் காலை விருந்து நடைபெற்ற நேரத்திலும் நன்கு திட்டமிட்டு  இந்தக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கொழும்பில் காலை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், சங்கிரிலா ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல் ஆகியவற்றில் குண்டுகள் வெடித்துள்ளன. முதலாவது குண்டுவெடிப்பு காலை 8.45 மணியளவில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடந்துள்ளது. இதன் பின்னர் கொழும்பின் மூன்று பிரபல ஹோட்டல்களில் குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்தன.

இதன் தொடர்ச்சியாக காலை 9 மணியளவில் நீர்கொழும்பில் கட்டுவபிட்டி புனித செபஸ்ரியன் தேவாலயத்திலும், மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்திலும் குண்டுகள் வெடித்துள்ளன. காலை 8.45 இற்கும் 9.15 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் இந்த 6 குண்டு வெடிப்புச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இதன் பின்னர் பிற்கல் தெஹிவளையிலும், தெமட்டகொடையிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளன.

கொழும்பு சங்கிரிலா ஹோட்டலில் இருந்து முஸ்லிம் ஆண் ஒருவரின் தலை உடல் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு கட்டுவபிட்டி புனித செபஸ்ரியார் தேவாலயத்திலிருந்து ஆண் ஒருவரின் தலைப்பகுதி மட்டும் மீட்கப்பட்டுள்ளது. இவர் முஸ்லிம் எனக் கூறப்படுகின்றது. இரண்டு இடங்களில் மீட்கப்பட்ட தலைகள் குறித்து விசாரணை நடத்தும் பொலிஸார், அந்தத் தலைகள் தற்கொலைக் குண்டுதாரிகளான ஸஹ்ரான் ஹாசிம் மற்றும் அபு மொஹம்மத் ஆக இருக்கலாம் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் உடல் சிதைவடைந்த நிலையில் தலைப்பகுதியுடன் முஸ்லிம் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நடந்த தாக்குதல்களில் அனேகமானவை தற்கொலை குண்டுதாரிகளாலேயே நடத்தப்பட்டுள்ளன எனப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவும் உறுதிப்படுத்தியிருக்கின்றார். இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் ஒ ரு இஸ்லாமிய தீவிரவாதக் குழு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆறு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள் என்று புலன் விசாரணையாளர்கள் தரப்பிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்கள் சர்வதேச ரீதியில் தகுந்த தரப்பிடம் உயர் பயிற்சிபெற்றவர்கள் என்றும் தாக்குதலின் விளைவு உச்சமாக இருப்பதற்காக உடலின் முன், பின் பக்கங்கள் இரண்டிலுமோ வெடி மருந்துகளை அவர்கள் கட்டி இருந்தனர் என்றும் திர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு விடயங்கள் குறித்து விளக்கமளித்த பிரதமர் தெரிவித்தார்.

இத்தகைய தாக்குதல் ஒன்று நடைபெறும் என கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி இந்தியத் தரப்பு இலங்கைக்கு எச்சரித்திருந்தது என்றும் – அது குறித்து இலங்கையின் பாதுகாப்பு உயர் வட்டாரங்களுக்கு எச்சரிக்கப் பட்டது என்றும் – இந்த எச்சரிக்கை குறித்து அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவு தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவுறுத்திருந் தது என்றும் – இந்த எச்சரிக்கை அறிவுறுத்தலை தாங்களும் நன்கு அறிந்திருந்தனர் என அமைச்சர்கள் ஹக்கீமும் மனோ கணேசனும் தெரிவித்த போதிலும், தமக்கு அது பற்றி எதுவும் தெரியாது என பிரதமர் கூறியிருந்தார்.

இலங்கையின் பாதுகாப்பில் எந்தளவுக்கு ஓட்டைகள் இருந்துள்ளன என்பதை இது வெளிப்படுத்துகின்றது. எச்சரிக்கையை உடன் கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்தத் தாக்குதல்களைத் தவிர்த்திருக்க முடியும். இப்போது இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்? ஜனாதிபதியா? பிரதமரா?

கொழும்பிலிருந்து பாரதி –

1,134 total views, 1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *