கோபன்ஹேகனில் ஒரு குட்டிக் கடற்கன்னி !

ஐரோப்பாவில் ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு கிராமமும் தம்முள் பல கதைகளை ஒளித்துவைத்திருக்கின்றன, அதைத் தேடிப் போய் கேட்பதென்பது ஒரு அலாதியான விடயம் தான். கதைகள் கேட்க யாருக்குத்தான் பிடிக்காது ? அதுவும் தமிழ் மக்களாகிய நாம் கதைகள் கேட்டே வளர்ந்தோம், முன்பெல்லாம் வீட்டில் பாட்டிமார்கள் பேரக்குழந்தைகளை கூட்டி அமரவைத்து கதைகள் சொல்வார்கள், இன்றைக்கு அதெல்லாம் குறைந்துவிட்டது வாழ்க்கை இயந்திரமாகிப் போனது !

கோபன்ஹேகன் – வடகடலோரம் ஸ்கேண்டிநேவியா நிலப்பகுதியின் டென்மார்க்கின் தலைநகரம், கிழக்காசிய நாடுகளுக்கு வாணிபம் செய்யவந்த மேற்குலக நாடுகளுள் ஒன்று. கோட்டைகளும், கோபுரங்களும், கால்வாய்களும் நிறைந்திருக்கும் கோபன்ஹேகன் வரும் அத்துணை பேரும் ஓடிச்சென்று பார்ப்பது அவளைத்தான் !
யார் அவள் ?

காத்திருப்பும், ஏக்கமும் பெண்களுக்கே விதிக்கப்பட்டது போலே தனியே அந்தக் கடலோரம் காத்துக்கிடக்கிறாள் அந்தப் பெண் ! உலகமே அறிந்த கதை தான்…தி லிட்டில் மெர்மைட் என்று புகழ்பெற்ற கதையின் நாயகி !
இந்தக் கதை டேனிஷ் மொழியில் ஹான்ஸ் கிறிஸ்டின் ஆண்டர்சன் எழுதினார், அதன் பின்னர் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகெங்கும் புகழ்பெற்றது. ஒரு அழகிய கடல் சாம்ராஜ்யம் அதன் அரசனின் மகளே இந்த சிறிய கடற்கன்னி, அவளுக்கு ஐந்து சகோதரிகள், தாய் இல்லை அதனால் பாட்டியின் அரவணைப்போடு வளர்ந்தாள், ஒரு நாள் கடலின் மேற்புறம் நீந்தி வந்த அவள் இளவரசன் ஒருவனை கண்டு மையல் கொள்கிறாள், தானும் ஒரு மனிதப் பெண்ணாக மாறி அவனை மணக்க விரும்புகிறாள், அவளுக்கு வசீகரமான குரல், காதலுக்காக கடல் மந்திரவாதியிடம் தன்னுடைய குரலை கொடுத்து அதற்கு பதிலாக கால்களை பெற்றுக்கொள்கிறாள் ! கால்கள் பெற்ற கடற்கன்னி இளவரசனின் சுயம்வரத்தில் கலந்துகொண்டு அவனின் அன்பைப்பெற்று விடிவதற்குள் அவனை திருமணம் செய்துகொள்ளவேண்டும் இல்லையென்றால் அவள் இதயம் வெடித்து இறந்துவிடுவாள் என்பது மந்திரவாதியின் நிபந்தனை.

கால்களோடு நிலத்துக்கு வந்து அவனை அடைய போராடுவதே கதை !
அப்படி கதையில் வருவது போலே கடற்கன்னியாக இருந்து கால்கள் பெறும் அந்த காட்சியை சிலையாக வடித்து கோபன்ஹேகன் கடற்கரையில் 1913 ஆண்டு திறந்து வைக்கப்பட்டது, அது முதல் கோபன்ஹேகனின் முக்கிய சின்னமாக இந்த இடம் விளங்குகிறது.

குட்டிக் கடற்கன்னி என்னும் இச்சிலையை உருவாக்குவதற்கான செலவுகளை ஏற்று, கார்ல் யாக்கப்சன் (Carl Jacabsen) என்பவர் எட்வர்ட் எரிக்சன் (Edvard Ericksen) என்னும் சிற்பியிடம் வேலையை ஒப்படைத்தார். மிகுதியான செல்வம் படைத்த கார்ல் யாக்கப்சன் என்பவரின் தந்தை டென்மார்க்கில் பேர்போன பியர் உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளராக இருந்தார்.

கார்ல் யாக்கப்சன் ஒருநாள் கோப்பன்ஹேகன் அரசு நாடக மேடையில் நடித்துக்காட்டப்பட்ட “குட்டிக் கடற்கன்னி” நாடகத்தால் மிகவும் கவரப்பட்டார். குறிப்பாக, கடற்கன்னியாக நடித்து மிக அழகாக நடனமாடிய எல்லென் ப்ரைசு (Ellen Price) என்பவரின் நடிப்பு அவருக்குப் பிடித்துப்போனது. உடனே அவர், எல்லென் ப்ரைசை அணுகி, அவர் கடற்கன்னி சிலைக்கு முன்னுருவாக நிலைகொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அச்சிலை நிர்வாணமாக இருக்கப்போகிறது என்று அறிந்ததும் எல்லென் ப்ரைசு முன்னுருவாக நிலைகொடுக்க விரும்பவில்லை. எனவே அவருடைய முகச் சாயல் மட்டுமே கடற்கன்னி சிலையில் வடிக்கப்பட்டது. ஆனால் எட்வர்ட் எரிக்சனின் மனைவி எலீன் எரிக்சன் என்பவர், தம் உடலை முன்னுருவாகக் கொண்டு கடற்கன்னி சிலை வடிக்கப்படுவதற்கு முன்வந்தார். கடைசியில் சிலை 1913 நிறுவப்பட்டது.

2003, செப்டம்பர் 10ஆம் நாள் கடற்கன்னி சிலை எழுப்பப்பட்டிருந்த பாறையில் யாரோ வெடிமருந்து இட்டு வெடித்ததில் சிலை அடித்தளத்திலிருந்து பெயர்ந்துவிழுந்தது. பின்னர் துறைமுகத்தில் கடல்நீருக்குள் இருந்து சிலை மீட்கப்பட்டது. சிலையின் முழங்கால் பகுதியிலும் கைமூட்டுப் பகுதியிலும் துளைகள் தோன்றியிருந்தன. பல முறை சேதமடைந்த போதும் மீண்டும் மீண்டும் பழுது பார்க்கப்பட்டு சிலை அதே இடத்தில் வைக்கப்பட்டது.
குட்டிக் கடற்கன்னி சிலை டென்மார்க் நாட்டையும், குறிப்பாக கோப்பன்ஹேகன் நகரத்தையும் அடையாளம் காட்டுகின்ற சின்னமாக உள்ளது. எனவே, அது அஞ்சல் தலையாக வெளியிடப்பட்டுள்ளது. கண்டிப்பாக கோபன்ஹேகன் சென்றால் இந்த அழகிய குட்டிக்கடற்கன்னியையும் பார்த்து வாருங்கள்.

2,355 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *