தோற்ற காதல் என்றும் இளமையானது காதல் தோற்பதில்லை !

‘அப்புறம் ஏண்டா இப்படி ஒரு தலைப்பு ? ” என நீங்கள் யோசிக்கலாம். ஒரு நிமிடம் பொறுங்கள். காதல் தோற்பதில்லை. காதல் நிராகரிக்கப்படலாம் அல்லது அங்கீகரிக்கப்படலாம். காதல் கொண்டாடப்படலாம் அல்லது கைவிடப்படலாம். ஒரு பூ தோற்றுப் போச்சு என நாம் சொல்வதில்லை. காரணம் பூப்பது தான் பூவின் வெற்றி, பறிப்பதல்ல. அப்படியே தான் காதலும். அது தோற்பதில்லை, தோன்றுவது தான் அதன் வெற்றி. நான் தோற்ற காதல் என சொல்வது, நிராகரிக்கப்பட்ட காதலை.

காதல் ஒரு பச்சைக்கிளியைப் போல, இளமையின் கதவுகளில் தனது அலகுகளால் கொத்திக் கொத்தி அழைப்பு விடுக்கிறது. சில கதவுகள் சிவப்புக் கம்பளத்தோடு கதவை அகலமாய்த் திறக்கின்றன. சில கதவுகள் அரைகுறையாய் திறக்கின்றன. சில கதவுகள் புரிந்தும் புரியாமலும் தாழ்ப்பாள் விலக்குகின்றன. இன்னும் சில கதவுகள் அடைக்கப்படுவதற்காகவே திறக்கின்றன. காதலோ கொத்துவதை நிறுத்துவதில்லை. பாதங்களில் சிவப்புக் கம்பளம் கிடைத்தாலும் சரி, அலகுகளில் குருதிக் கோடுகள் குதித்தாலும் சரி. அவை நிறுத்துவதில்லை.

பால்யகாலத்தின் சுவர்களில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் காலம் தனது இளமையைத் தொலைக்காமல் காத்திருக்கிறது. நாம் சந்தித்த புளியமரப் பாட்டிக்கு இன்னும் அதே புன்னகை இருப்பதாய் மனம் கற்பித்துக் கொள்கிறது. நமது கரங்களில் குச்சி ஐஸ் தந்த தாத்தாவுக்கு, இன்னும் சைக்கள் ஓட்டும் வலு இருப்பதாகவே மனம் கற்பனை செய்கிறது. அவர்கள் வியாபாரத்தை முடித்தல்ல, வாழ்க்கையை முடித்தும் சென்றிருக்கக் கூடும். எனினும் மனமோ, தான் கழற்றி வைத்த மரத்தின் மூட்டிலிருந்தே தனது காலத்தை உதறி எடுத்து உடுத்திக் கொள்கிறது.

நமது நினைவுகளின் சாலைகள் இன்னும் தார் பூசப்படாமல் இருக்கின்றன. நாம் நடந்து திரிந்த குளக்கரைப் பாதைகள் இன்னும் ஒற்றையடிப்பாதைகளாகவே கிடக்கின்றன. நாம் நீந்தித் திரிந்த குளத்தின் மேனியில் இன்னும் கலங்கிய தண்ணீர் மிச்சமிருக்கிறது. நாம் சந்தித்து நடந்த நண்பர்கள் இன்னும அரை டிராயருடன் தான் அலைந்து திரிகின்றனர். இவையெல்லாம் நமது நினைவுகளில் மட்டும். நிஜமோ யானை மிதித்த சோளக்காடாய் அடையாளங்களை முழுமையாய் அழித்து விட்டிருக்கிறது. நமது நினைவுகளின் புல்வெளிகளில் மட்டும் இன்னும் பழைய ஈரமே மிச்சமிருக்கிறது.

காதலும் அப்படியே !

பால்யத்தின் படிக்கட்டுகளிலோ, விடலைப் பருவத்தின் வாய்க்கால்களிலோ நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிளாய் அதே சுவாசத்துடன் காத்திருக்கிறது. அதில் அமர்ந்து மிதிக்கும் போது கால்களுக்குக் கீழே, கடந்து சென்ற காலங்கள் நகர்ந்து செல்கின்றன. காதல் ஒரு வசீகர வாசனையுடன் சைக்கிளின் சக்கடங்களுக்கிடையே கண்ணாமூச்சி ஆடியபடி தொடர்ந்து வருகிறது.

காதலின் பக்கங்களில் அரைத் தாவணியுடன் அசைந்து நடந்த அவளின் பாதங்கள் இன்னும் அதே கொலுசுச் சத்தத்தைத் தான் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றன. அதே மஞ்சள் திற தாவணி காற்றில் அசைகிறது. அவளது விரல்கள் லாவகமாய் விலக்கி விடும் அந்த கரு கரு தலைமுடி இன்னும் காற்றின் கன்னங்களில் முத்தமிட்டுச் செல்கிறது. ஓரக்கண்ணால் வெட்கம் விரிக்கும் அவளது பார்வையின் பசுத்தம் இன்னும் கறைபடியாமல் கிறங்கடிக்கிறது. அவள் கழுத்துகளில் கவிதை வாசிக்கும் அந்த கருமை நிற மாலை இன்னும் அவளது பெருவிரல் உரசலில் பெருமை கொண்டு அசைகிறது. சற்றே தலைகுனிந்து அவள் சிரிக்கும் புன்னகையை ஏறிட்டுப் பார்க்கும் சாலையோரப் பூக்கள் இன்னும் மூச்சுத் திணறித் தான் கிடக்கின்றன.

கடந்து வராத காதலுக்கு காலம் வயதைக் கூட்டுவதில்லை. அது பருவகாலத்தில் உறைந்து போன ஒரு பரிசுத்த மாணிக்கத்தைப் போல அங்கேயே தங்கி விடுகிறது.

இந்த ஹைடெக் காலத்தின் தாழ்வாரங்களில் கூட காதலன் தயங்கித் தயங்கி நீட்டிய கசங்கிய காகிதக் கடிதமே காதலியின் நடுங்கும் விரல்களில் இன்னும் ஸ்பரிசம் கூட்டும். அரும்பியும் அரும்பாமலும் இருந்த அந்த மீசையின் அடர்த்தியே காதலியின் கண்களின் ஓரங்களில் இன்னும் மிதந்து கொண்டிருக்கும். நிஜத்தில், அவன் நரைதலையுடனும், நாற்பதின் தொந்தியுடனும், பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கலாம். அல்லது வழுக்கை விழுந்த தலையைத் தடவியபடி மனைவிக்கு காய்கறி வாங்கப் போயிருக்கலாம். காதலுக்கு அதெல்லாம் அவசியமில்லாதவை. அவை நிறுத்தப்பட்ட புள்ளியிலிருந்தே நடக்கத் துவங்கும்.

வெற்றி பெற்றக் காதல் தொடர்ந்து நடக்கிறது. அதன் வருடங்கள் கூடிக் கொண்டே இருக்கின்றன. காதலர்களின் தோற்ற மாற்றத்தைக் காதலும் வாங்கிக் கொள்கிறது. காதலர்களின் ஓய்ந்து போன ஸ்பரிச நதியை காதலும் கவலையுடன் கவனித்து நகர்கிறது. ஏதோ ஒரு நிறுத்தத்தில் தண்டவாளம் மாறிப் பயணிக்கும் ரயிலைப் போல, காதலர்களின் பயணம் அவர்களை காதலின் பயணத்திலிருந்து விலக்கி வைக்கிறது. வெற்றி பெற்ற காதலுக்கு வயதாகிறது. அதன் இளமை தொலைந்து போகிறது. அதன் கவித்துவம் கரைந்து போகிறது.

தோற்ற காதல் தொலைவதில்லை !

தோற்ற காதல் என்பது காலத்தைப் பூட்டி வைக்கும் சாவி. தோற்ற காதல் என்பது சுழலும் பூமியை நிறுத்தி வைக்கும் உத்தி. தோற்ற காதல் என்பது காதலை சாகா இளமையுடன் பாதுகாக்கும் சங்கதி.

காதல் தோற்பது புனிதமானது,
அது, சூழ்நிலைச் சுனாமிகளால் சிதைக்கப்படுவதில்லை.
காதல் ஜெயிப்பது துயரமானது
அது, முதுமைச் சுருக்கங்களுக்குள் சிக்கிக் கொள்கிறது.

காதல் எந்தக் கணத்தில் முளை விட்டது என்பதைக் அறிய இன்னும் எந்த மென்பொருளும் கண்டுபிடிக்கப் படவில்லை. அது மண்ணில் விழுந்த பெருமழையின் முதல் துளியைப் போல ரகசியமாகவே இருக்கிறது. அது ஓயாமல் பேசும் பெருங்கடல் ஒன்று முதன் முதலாய் அனுப்பி வைத்த அலையைப் போல அறியப்படாமலேயே இருக்கிறது. அது பூமியின் இருட்டைத் துடைத்த கதிரவனின் முதல் வெளிச்சம் போல மறைந்தே இருக்கிறது. காதல் எப்போது முளைவிட்டது என்பது முக்கியமில்லை, முளை விட்டது என்பதே முக்கியம்.

காதல் எந்தக் கணத்தில் நிராகரிக்கப்பட்டது என்பது எளிது. அது ஒரு மெல்லிய மலரின் மீது மரச்சிலுவை விழுந்த தருணம். அது ஒரு அழுகின்ற குழந்தையின் வாயில் கள்ளிப் பால் கசந்த கணம். அது, பால்யத்தின் அதிகாலைக் கனவொன்றை பெருங்குரல் ஒன்று முடித்து வைத்த தினம். அது மறப்பதில்லை. அதே இடத்தில் காதலும், காலமும் காலொடிந்து கிடக்கின்றன. உறைந்த மௌனத்தின் உறங்காத சத்தமாய் அது இன்னும் இசை மீட்டிக் கொண்டிருக்கிறது.

காதல் ஒரு மெல்லிய மழை போல நமது நினைவுகளின் மீது பொழிந்து கொண்டே இருக்கிறது. வானத்தின் ஏக்கமெல்லாம் மண்ணை அடைவது மட்டுமே. மண்ணும் அதே போன்ற மழையை விண்ணுக்கு அனுப்பி வைக்கவேண்டுமென மேகம் எதிர்பார்ப்பதில்லை. ஒரு விதையின் தலையில் விதியாய் விழுவதையே அது ஏக்கத்துடன் எதிர்பார்க்கிறது. அந்த எதிர்பார்ப்பு பொய்க்கின்ற போது அது அக்கினி மழையை அனுப்புவதில்லை, இன்னும் அதிகமாய் கண்ணீர் வடிக்கிறது. உண்மைக் காதலும் அப்படியே. அது எதிர்பார்ப்புகளை எண்ணி, காதலை வினியோகிப்பதில்லை. நிராகரிக்கப்பட்டதற்காய் நரகத்தை நாடுவதும் இல்லை. காதலைப் பொழிந்து கொண்டே இருக்கிறது.

காதலால் நிரம்பி வழியும் குளத்திலிருந்து அள்ளுவதெல்லாம் காதலாகவே இருக்கும். காதலால் நிரம்பி வழியும் கோப்பையிலிருந்து சிந்துவதெல்லாம் காதலாகவே இருக்கும். காதலால் நிரம்பி வழியும் மேகத்திலிருந்து விழுவதெல்லாம் காதலாகவே இருக்கும். அது நிறம் மாறி நேசம் புதைப்பதில்லை.

காதல் வன்முறையின் போர்க்களத்தில் வெற்றி காண்பதில்லை. கோடரிகளைக் கொண்டு முல்லை மலரைக் கிள்ளி எடுக்க முடியாது. அது வலுக்கட்டாயத்தினால் சேர்த்துக் கொள்வதும் அல்ல. பெயின்ட் அடித்து விட்டால் ஆப்பிள் பழம், ஆரஞ்சுப் பழம் ஆவதில்லை. காதல் இயல்பாக மலர்வது. பரஸ்பரத் தீண்டல்களில் பரவசம் பற்றிக் கொண்டால் காதலாகிறது. பரஸ்பரத் தீண்டல்களில் பாஸ்பரஸ் பற்றிக் கொண்டால் அது நின்று விடுகிறது. இயல்பை ஏற்றுக் கொள்வதே மனிதத்தின் வெற்றி. அதுவே காதலுக்குச் செய்யும் அதிக பட்ச மரியாதை.

காதல் ஒரு யாத்ரீகனைப் போல. அது பயணத்தின் பாதையில் எப்போது வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளும். அதை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்ல முடியாது. காதல் ஒரு கானகக் குயில் போல அது எப்போது வேண்டுமானாலும் பாடத் துவங்கும். அதன் கழுத்தை நசுக்கி இசையை இழுத்தெடுக்க முடியாது. எதையும் ஏற்றுக் கொள்வதே காதலின் வெற்றி. அதுவே இளமையின் வெற்றி.

உண்மையில்
தோற்ற காதலே வெற்றி பெற்றிருக்கிறது !
காலத்தை !

தோற்ற காதலே ஊற்றி வைத்திருக்கிறது
இளமையை !

— சேவியர்

2,007 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *