பெண்ணியம் பேசு பொருளல்ல, வாழ்வின் பொருள்.

உலகைப் படைத்து முடித்த கடவுள் பார்த்தார். இனி ஒரு மனுஷனைப் படைச்சுட்டா வேலை முடிஞ்சது. கடவுள் ஒரு கலைஞர். மனிதனே நீ உருவாகு என சொல்லவில்லை. அவர் ஒரு சிற்பி. மண்ணை எடுத்து ஒரு மனிதனை உருவாக்கினார். தன்னையே மாடலாகவும் வைத்துக் கொண்டார். அவனுக்கு உயிர் மூச்சை ஊத அவன் உயிர்பெற்று எழுந்தான். அப்பாடா, என ஓய்வாய் அமர்ந்த கடவுளுக்கு ஒரு குழப்பம். “ஏதோ ஒண்ணு இடிக்குதே.. அது என்ன ? ” என்று பார்த்தார்.

சட்டென அவருக்குப் புரிந்து விட்டது. பறவைகளெல்லாம் ஜோடி ஜோடியாய்ப் பறந்து திரிகின்றன. விலங்குகளெல்லாம் இணை இணையாய் நடந்து திரிகின்றன. ஆனால் இந்த மனிதன் மட்டும் மொரட்டு சிங்கிளாவே இருக்கானே ! இவனுக்கு ஒரு ஜோடியை உருவாக்குவோம் என நினைத்தார். ஆணுக்கு இணையாய் பெண் உருவானாள். இப்போது கடவுள் பெண்ணை மண்ணிலிருந்து படைக்கவில்லை, மனிதனின் விலா எலும்பை உருவி எடுத்து அதிலிருந்து படைக்கிறார். இருவரும் இணையாய், ஒருவருக்கொருவர் துணையாய் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள்.

படைப்பைப் பற்றி கிறிஸ்தவம் சொல்லும் கதை இது. இதிலுள்ள விஷயங்களில் நம்மை வசீகரிக்கும் அம்சங்கள் சில உண்டு. அவை பெண்ணியத்தின் பெருமையையும், பெண்களை நாம் வைக்க வேண்டிய இடத்தையும் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

கடவுள் பெண்ணைப் படைக்க நினைத்த போது, அவள் ஆணின் பாகமாய் இருக்க வேண்டும் என நினைத்தார். பெண் என்றவள் ஆணோடு இணைந்தவள், ஆணிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவள் எனும் பாடம் நமக்குப் புரிகிறது. அதன் பின் உயிர்கள் பெண்களின் உடலிலில் இருந்தே உலகுக்கு வருகின்றன. முதல் உயிர் மண்ணிலிருந்து வந்தது. இரண்டாவது உயிர் ஆணிலிருந்து வந்தது. அதன் பின் உயிர்கள் பெண்ணின் உடலிலிருந்து வருகின்றன. இந்த படைப்பின் பாணி, பெண்ணும் ஆணும் இணைந்தே இருக்க வேண்டியவர்கள் எனும் பாலபாடத்தை நமக்குச் சொல்லித் தந்து கொண்டே இருக்கிறது.

இன்னொரு விஷயம், கடவுள் பெண்ணை படைத்த போது அவளை ஆணின் காலிலிருந்து படைத்து அவளை அடிமையாக்கவில்லை, தலையிலிருந்து படைத்து அவளை கர்வக் கிரீடத்தில் அமர வைக்கவில்லை. மாறாக விலாவிலிருந்து படைத்து அவளை இணையாக்குகிறார், ஆணின் துணையாக்குகிறார். பெண்ணியத்தின் முதல் பாடம் படைப்பிலிருந்து துவங்குகிறது.

ஆனால் இன்றைக்கு அந்த பெண்மைக்குரிய மரியாதை சரியான அளவில் கொடுக்கப்படுகிறதா என்று கேட்டால், “கண்டிப்பா” என சட்டென சொல்ல முடியவில்லை. பேச்சளவிலோ, வெளிப்பார்வைக்கோ பெண்மையின் பெருமைகளைப் பட்டியலிடலாமே ஒழிய, வாழ்வில் அது எந்த அளவுக்கு பின்னிப் பிணைந்திருக்கிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான்.

பெண்ணியம் என்ற உடனே அது சில பெண்கள் பகட்டு ஆடை உடுத்தி, எங்கோ இடுகின்ற கோஷமல்ல. அப்படிப்பட்ட போராட்டங்களும், அறைகூவல்களும் பெண்மைக்குரிய மரியாதையை பெற்றுத் தர முடியாது என்பது தான் உண்மை. வல்லூறுகளின் கண்களுக்கு மண்புழுக்கள் தென்படுவதில்லை. அதைப் பார்க்க வேண்டுமெனில் தரையோடு தரையாகத் தவழ வேண்டும். அதே போல தான் பெண்களுக்கு மறுக்கப்படுபவை என்ன என்பதைப் பார்க்க நாமும் அவர்களுடைய தேசத்தில் தான் பயணிக்க வேண்டும்.

நமது வீடுகளிலிருந்து அந்தப் பயணம் துவங்கலாம். எத்தனை வீடுகளில் பெண்பிள்ளைகளும், ஆண் பிள்ளைகளும் சமமாக நடத்தப்படுகின்றனர் ? இன்னும் கிராமங்கள் பெண்களை செலவினமாகவும், ஆண்களை வரவினமாகவும் பார்க்கின்றனர். பெண்களின் உணர்வுகளை விட, அவர்களால் நேரிடப்போகும் பொருளாதாரச் செலவுகளே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆண்பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்துகளும், பெண் பிள்ளைகளுக்கு பழைய கஞ்சியும் கொடுத்து வளர்த்தும் கிராமங்கள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன.

“நாளைக்கு நமக்கு சோறு போடப் போறவன்” என்றோ, “நாளைக்கு கொள்ளி வைக்கப் போறவன்” என்றோ அடையாளப்படுத்தப்பட்டு சிறப்புக் கவனம் ஆண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் போது, பெண்ணியத்தின் மீதான முதல் ஆணி அறையப்படுகிறது. ஆண் உயர்ந்தவன் பெண் தாழ்ந்தவள் எனும் எண்ணம் குழந்தைகளின் மனதில் சொல்லாமலேயே குடியேறிவிடுகிறது. இது ஆண்களின் மனதில் கர்வமாகவும், பெண்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையாகவும் உறைந்து விடுகிறது.

குடும்பத்தில் நிகழ்கின்ற இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் அப்படியே சமூகத்திலும் பரவிவிடும். சமூகம் என்பது குடும்பங்களின் பிரதிநிதிகள் தானே. குடும்பம் எனும் வேர்களில் விழுகின்ற மதிப்பீடுகளின் அடிப்படையில் தான் சமூகம் எனும் வீதிகள் கனிகளைப் பெற்றுக் கொள்கின்றன. அந்த பெண்ணியத்தின் புனிதத் துவக்கத்தை குடும்பங்கள் அகல் விளக்கு ஏற்றி ஆரம்பித்து வைக்க வேண்டும்.

அப்படியே பெண்களுக்கான கல்வி வழங்குதலில் பாரபட்சமற்ற நிலையை நாம் பின்பற்றுகிறோமா என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரே மாதிரியான இலட்சியங்கள் கொண்ட ஆண்பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் இருந்தால், இருவருக்கும் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறோமா என்பதை நாம் மனப்பூர்வமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படி நாம் பாரபட்சம் காட்டுகின்ற தருணங்கள் எல்லாம் பெண்மையின் மாண்பினை இழிவு செய்கின்றன என்பதே பொருள். சிறுவயதில் அவர்கள் பெறுகின்ற ஊக்கமும், அரவணைப்பும், வாய்ப்புகளும் தான் அவர்களை எதிர்கால வீதிகளில் வீறு நடை போட உதவும் என்பதை மறந்து விடக் கூடாது.

வீடுகளில் பெண் குழந்தைகளுக்குச் சரியான ஊட்டச்சத்து கிடைக்காத போது அவர்களுடைய ஆரோக்கியம் பாதிப்படைகிறது, அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கிடைக்காத போது அவர்களின் தன்னம்பிக்கை உடைபடுகிறது, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சரியான அன்பு கிடைக்காதபோது அவர்களுடைய வாழ்க்கையே தள்ளாடுகிறது. பெண்ணியம் என்பது கோஷங்களில் கிடைப்பதல்ல அது நமது வீடுகளில் வினியோகிக்கப்படுவது. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களில் 80 சதவீதம், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மூலமாக நடப்பதாக வெளியாகியிருக்கும் ஆய்வு நம்மை விழிப்படையச் செய்ய வேண்டும்.

நம்மைச் சுற்றிய இடங்களில் நாம் பெண்களுக்கு எப்படிப்பட்ட மரியாதையை வழங்குகிறோம் என்பதே மிகவும் முக்கியம். குறிப்பாக அலுவலகங்களில் பெண்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்பதே கசப்பான உண்மை. தாய்மை நிலையிலிருக்கும் பெண்களை வேலைக்குச் சேர்க்காமல் தனியார் நிறுவனங்கள் உதறிவிடுகின்றன. அவர்களுடைய வேலை பாதிக்கப்படும் என்பது அவர்களுடைய கவலை. அதே போல, திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்களையும் அவர்கள் வேலையில் சேர்த்துக் கொள்ளத் தயங்குகிறார்கள். பிரசவ காலத்தில் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள், சம்பள உயர்வுகள் போன்றவையெல்லாம் பெரும்பாலும் மறுக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் நிறுவனங்கள் வெளிப்படையாகச் செய்வதில்லை. மறைமுகமாக வேறு ஏதோ ஒரு காரண முகமூடி அணிந்து கொண்டு நாசூக்காக செய்து முடிக்கின்றன. இத்தகைய ஏற்றத்தாழ்வுகளையும், பாலியல் ரீதியிலான அவர்களுடைய பிரச்சினைகளையும் கவனிக்கவும், சரி செய்யவும், பாதுகாப்பு வழங்கவும் “பாஷ் ( POSH – Prevention of Sexual Harassment) ” எனும் அமைப்பு இப்போது நிறுவனங்களோடு இணைந்திருக்கின்றன.

பழைய காலத்தோடு ஒப்பிடுகையில் பெண்ணிய சிந்தனைகள் இன்றைக்கு வலுவாகவே இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாக வெளி உலகிற்குத் தெரிய வருகின்றன. இன்றைய சமூக ஊடகங்களும், வாட்சப் போன்ற தகவல் பரிமாற்ற செயலிகளும் இத்தகைய அத்து மீறல்களை உலகெங்கும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

ஆண்களைப் போல பெண்களை நடத்துவதல்ல பெண்ணியத்தின் அடிப்படை. பெண்களைப் போல பெண்களை நடத்த வேண்டும்.
அவர்களை அவர்களுடைய மாண்புடன் நடத்தாமல் இருக்கும் போது தான் சிக்கல்கள் முளைக்கின்றன. ஆணும் பெண்ணும் சமமல்ல, அவர்கள் இருவருக்கும் உடல், உணர்வு, செயல்பாடு ரீதியாக ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு. அந்தந்த குணாதிசயங்களுக்கு ஏற்ப அந்தந்த பாலினத்தவரை ஏற்றுக் கொள்வதும், மரியாதை செலுத்துவதும், அன்பு செலுத்துவதுமே தேவையானது.

மானுக்கும் புலிக்கும் ஒரே மாதிரி மரியாதை கொடுக்க வேண்டுமென யாரும் சொல்லப் போவதில்லை. ஆனால் மானை மானாக நடத்தாமல் நாயாக நடத்தும் போது தான் சமநிலை பாதிப்படையும். பண்டைய தமிழின வரலாற்றில் கூட, ஆண்கள் போர்க்களம் கண்டு வீர மரணம் அடைந்தார்கள். பெண்கள் இதயத்தில் அந்த போர்க்குணத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் களம் புகவில்லை, ஆனால் தன் மகன் விழுப்புண் கண்டு வீர மரணம் அடைந்தானே என வீரக் குரலோடு பெருமிதம் அடைந்தார்கள்.

பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது மிகக் கடினம் என்பார்கள். ஆனால் உண்மையில் அது மிக எளிது. பெண்களின் பக்கத்தில் நின்று பார்த்தால் அதை எளிதில் புரிந்து கொள்ளலாம். மதில் சுவரின் மறுபக்கத்தில் நின்று கொண்டு எதிர்பக்கம் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது கடினம். பெண்களைப் புரிந்து கொள்ளவேண்டுமெனில் அவர்களைப் போல மாறி சிந்திக்க வேண்டும். ஆண்கள் எப்போதுமே அப்படிச் செய்வதில்லை. தெருவில் விளையாடும் கோலி விளையாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் தெருவில் தான் தவழ வேண்டும். பல்லக்கில் இருந்து கொண்டு பள்ளத்தாக்கில் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியாது. அதே போலத் தான் பெண்களின் உலகில் நுழையாமல் பெண்மையைப் புரிந்து கொள்ளவும் முடியாது.

பெண்மையை மதிப்பது என்பது, அவர்களை மரியாதையாய் நடத்துவது மட்டுமல்ல. அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனே சென்று உதவி செய்வதும் மரியாதை செலுத்துவதன் அடையாளமே. நமது குழந்தைக்கு அடிபட்டால் நாம் செல்ஃபி எடுத்துக் கொண்டு சென்று விடுவதில்லை. நமது பெண் பிள்ளைக்கு ஒரு பிரச்சினை என்றால் ஓரமாய் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பதில்லை. அந்த மனநிலையை நம்மைச் சுற்றியிருக்கும் ஒவ்வொரு பெண் பிள்ளைகளிடமும் காட்ட வேண்டும். அதுவே ஆண்மையின் அடையாளமாகும். கொடுமை கண்டு பொங்குவதே ஆண்மை, கொடுமை செய்யப் பொங்குவதல்ல.

நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு ? என பல ஆண்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அவர்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட். நீங்கள் சொல்கின்ற, சேட் செய்கின்ற, கிண்டல் செய்கின்ற ஒரு விஷயம் சரியா தவறா என கண்டுபிடிக்க ஒரு சின்ன வழி உண்டு. நம் மீது உயிராய் இருக்கும் தாயின் முன்னாலோ, சகோதரிகளின் முன்னாலோ வைத்து அவற்றைப் பேச முடியுமா என யோசியுங்கள். அப்படிப் பேச முடியாத எதுவுமே தவறானது எனக் கொள்க.

பெண்களின் மனதை வெல்ல வேண்டுமெனில் ஆண்களிடம் ஒரு சின்ன குணாதிசயம் இருந்தாலே போதுமானது. செவிமடுத்தல். பெண்களுக்கு தங்கள் உணர்வுகள் கேட்கப்பட வேண்டும், தங்களது பகிர்ந்தல்கள் கேட்கப்படவேண்டும் எனும் சிந்தனை ஆழமாக உண்டு. அதனால் தான் அமைதியாகச் செவி மடுக்கும் ஆண்களை பெண்கள் எளிதில் நண்பர்களாக்கிக் கொள்கிறார்கள்.

பெண்ணியம் என்பது பேசுபொருளல்ல. பெண்கள் வேற்றுக்கிரக வாசிகளும் அல்ல. அவர்கள் நமது மகிழ்வின் ஆளுமை. அவர்கள் நம் பயணத்தின் தோழமை. அவர்களை மதிப்பதும், நேசிப்பதும் நமது தேர்வல்ல, கடமை. பெண்ணியம் என்பது வாழ்வோடு இணைய வேண்டும். கண்ணியம் என்பது நமது உயிரோடு உலவ வேண்டும். பெண்மை தாயாய், தாரமாய், சகோதரியாய், மகளாய் உலவும் நமது இல்லங்களில் பெண்ணியம் பூக்கவில்லையேல், அது சமூகத்தில் கனிகொடுக்காது.

பழமையை மாற்றுவோம்
பெண்மையைப் போற்றுவோம்

சேவியர்

1,785 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *