நாட்டுக்கோழி (பாகம்-1)

“அண்ணை என்ன லண்டனோ?”

“இல்லை தம்பி, லண்டனிலையிருந்து இரண்டு மணித்தியால ஓட்டம்…காரிலை போனால்…”

“அப்ப உங்கடை இடம் இங்கிலாந்திலை தானோ இருக்கு, இல்லை…நான் லண்டனோ எண்டு கேட்டது இங்கிலாந்தை தான் அண்ணை…”

“என்னெண்டு நான் இங்கிலாந்தெண்டு கண்டுபிடிச்சனீர்?”

“நேற்றும் நீங்கள் என்னட்டைத் தான் கச்சான் வாங்கினனீங்கள், அப்ப உங்கடை மகனோடை கனக்க இங்கிலீசிலை ஏதோ கதைச்சனீங்கள்…”

“ஓ,அதை வைச்சே…அவனுக்கு தமிழ் கொஞ்சம் விளங்கும் ஆனா இங்கிலீசிலை சொன்னா இன்னும் வடிவாய் விளங்கும், அது தான்…”

“ஒவ்வொரு வருசமும் நல்லூர் திருவிழாக்கு வாறனீங்களே?”

” ஓ, எட்டு வருசமாய் வாறன், வந்தா எல்லா வெளிநாட்டுக் காரரையும், இஞ்சை இருக்கிற சொந்த பந்தங்களையும் ஒண்டாய்ச் சந்திக்கலாமில்லே …என்ன இருந்தாலும் சொந்த நாடு மாதிரி வருமே தம்பி…நல்லூர் முடிய ஒரு கோழியை,ஆட்டை அடிச்சு குழம்பு வைச்சு…கூடியிருந்து எல்லாருமாய் ஒரு பிடி பிடிச்சா…”

“ஓமண்ணை, இப்ப எட்டொம்பது வருசமாய் தான் கனபேருக்கு சொந்தங்களெல்லாம் கண்ணுக்குத் தெரியுது…நாட்டுக்கோழி நாவாட்டம் மட்டும் இன்னமும் விட்டுப் போகேல்லை…”

“தம்பியென்ன நக்கலடிக்கிறீரோ? இல்லை உண்மையிலேயே ஆதங்கமோ…?”

“இரண்டும் தான் அண்ணை…எங்கடை புலம் பெயர் உறவுகளை நினைச்சுப் பார்த்தன்…நல்லூரும் நாட்டுக்கோழியும் இல்லாட்டி…?”

” நாங்கள் எப்பிடியான இக்கட்டான நிலைமையிலை இஞ்சையிருந்து அப்ப வெளிநாடுகளுக்கு போனமெண்டு உமக்குத் தெரியாது தம்பி …நீர் அப்ப பிறந்திருக்க மாட்டீர்…உதெல்லாம் உமக்கு…”

“விளங்குதண்ணை, விளங்குது…ஆனா எல்லோரும் நாட்டைக் காக்கவே வெளிநாடு போனனியள், உங்களை மட்டும் பாதுகாக்கத் தானே…”

“தம்பி, நாங்கள் அந்தநேரம் போய் ஏதோ உழைச்ச்சு கொஞ்சக் காசைக் கீசை சேமிச்சு அனுப்பின படியாய்த்தான் இஞ்சை இருக்கிற சொந்த பந்தங்கள் ஓரளவாவது கஸ்டத்திலையிருந்து விடுபட்டது…”

“ஒத்துக்கொள்ளுறன், ஆனா இஞ்சை எல்லோரும் நிண்டிருந்தா அதுவும் ஒரு பெரும் பக்கபலம் தானே அண்ணை என்ன சொல்லுறியள்? …இப்படி எல்லோரும் சுயநலமாய் தனித் தனியாய் ஓடி தனி மனித சுதந்திரம் தேடினா…?”

“அது அவையவேன்றை அப்போதைய நிலைமையை பொறுத்தது தம்பி, உமக்கு எல்லாத்தையும் விளங்கப்படுத்த எனக்கு நேரம் போதாது…”

“சரியண்ணை, போனதுதான் போனீங்கள் அப்படியே அங்கை ஒரேயடியாய் கூடாரம் போட்டு…எத்தனை பேர் இப்பவாவது ஊருக்குத் திரும்பி வர…?”

“நீர் சொல்லுறமாதிரி அங்கை இவ்வளவு காலமும் இருந்து செட்டில் ஆகிட்டு இப்ப உடனை இஞ்சை வந்து திரும்ப வாழ்க்கையைத் தொடங்கேலாது…
எத்தனை தரம் தான் நாங்களும் மூட்டையைக் கட்டிக்கொண்டு…”

“நீங்கள் பிறந்து, தவழ்ந்து, எழுந்து, விழுந்து, உருண்டு, வளர்ந்த மண்ணுக்கு வர ஏனண்ணை வெறும் சாக்குப் போக்கெல்லாம்….பவுண்சிலை உழைச்சு ருப்பீசிலை செலவழிச்சு பழகிப் போச்செண்டு சொலுங்கோவன்…”

“நீர் நினைக்கிறமாதிரி அங்கையொண்டடும் காசு மரத்திலை காய்க்கேல்லை…கன பேருக்கு கையும் கணக்கும் சரியாத்தான் இருக்கு…நாங்கள் வாயை வயிற்றைக் கட்டி இஞ்சை காசை அனுப்பினா நீங்கள் வேறையெதோ… நக்கலும் நையாண்டியும் …”

“கோபப்படாதைங்கோ அண்ணை, நானென்ன ஆராச்சியே செய்யிறனான், கச்சானையும் என்றை மச்சாளையும் தவிர எனக்கென்ன வேறை…என்றை அறிவுக்கெட்டின மாதிரி…ஏதோ என்றை காதிலை விழுகிறதுகளை உங்களுக்குச் சொன்னன்…”

“இப்படியே போனா இது முடியாது தம்பி கதைச்சது சந்தோசம், சந்திப்பம்…”

“ஓமண்ணை, சந்தோசம்…மனதிலை எதையாவது வைச்சுக்கொண்டு என்னட்டை கச்சான் மட்டும் வாங்காமை விட்டுடாதைங்கோ…

அண்ணை, கொஞ்சம் நில்லுங்கோ, வாங்கேக்கை நல்ல நாட்டுக்கோழியாய் பார்த்து வாங்குங்கோ…சிலர் வெளிநாட்டு மாஸ் போட்டு கோழியைக் கொழுக்கப் பண்ணி வைச்சிருக்கிறாங்கள்…பார்த்தா இரண்டும் ஒரே மாதிரித் தான்…”

நன்றி

கனகசபேசன் அகிலன்

1,950 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *