புன்னகை மன்னன் K Balachander
- புன்னகை மன்னன்
காதலனும் காதலிலும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார்கள். அந்தச் சூழலில் “என்ன சத்தம் இந்த நேரம்” எனும் பாடல் ஒலிக்கிறது. வைரமுத்துவின் வசீகர வரிகளில், இளையராஜாவின் மெல்லிய தாலாட்டில் பாடல் மனதைப் பிசைகிறது.
காதலர்கள் தற்கொலை செய்யப் போகும் காட்சியில் ஒரு பாடலை வைக்க வேண்டுமென்றால் அதற்கு அசாத்தியத் துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் பாலசந்தரிடம் இருந்தது என கவிப்பேரரசு வைரமுத்து பின்னர் குறிப்பிட்டார்.
1986ம் ஆண்டின் தீபாவளி வெளியீடாக வந்த இந்தப் படம் வெள்ளி விழா கண்டது. பல வசூல் சாதனைகளை நிகழ்த்தியது. படத்தின் வெற்றி விழாவில் பாலசந்தர் கமலஹாசனுக்கு ஒரு பட்டப் பெயர் சூட்டினார். அது “புரட்சி மன்னன்” !!
குடும்பத்தில் காதல் ஏற்றுக்கொள்ளப்படாததால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து மலை உச்சிக்கு வருகிறார்கள் காதலர்கள். குதிக்கிறார்கள். காதலி கீழே விழுந்து இறந்து விட, காதலன் மரக்கிளை ஒன்றில் சிக்கி உயிர் பிழைக்கிறான்.
தற்கொலை செய்யத் தூண்டிய குற்றத்துக்காக அவனை ஓராண்டு சிறையில் அடைக்கிறார்கள். சிறைவாசம் முடிந்து வரும் அவனை ஒரு பெண் துரத்தித் துரத்திக் காதலிக்கிறாள். அவனோ பழைய காதலின் நினைவிலேயே இருக்கிறான். கடைசியில் காதல் கைகூடும் போது நிகழ்கிறது பாலசந்தர் படங்களுக்கே உரிய கிளைமேக்ஸ்.
இளையராஜாவும், வைரமுத்துவும் இணைந்த இந்த சூப்பர் ஹிட் படத்துக்குப் பிறகு அவர்கள் இருவரும் இணையவில்லை என்பது தமிழ்த் திரையுலகிற்கு மாபெரும் இழப்பு என்பதில் சந்தேகமில்லை.
இந்தப் படத்தில் திலீப் என்னும் இளைஞன் இளையராஜாவிடம் கிட்டாரிஸ்ட் ஆக இணைந்திருந்தான். அந்தப் பையன் தான் பிற்காலத்தில் ஆஸ்கர் வாங்கி “எல்லா புகழும் இறைவனுக்கே” என தமிழில் முழங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்.
கமலஹாசன், ரேவதி,ஸ்ரீவித்யா, ரேகா, டெல்லி கணேஷ், சுந்தர் கிருஷ்ணா, சுதர்சன், ஜெயலக்ஷ்மி என ஒவ்வொரு காதாபாத்திரங்களையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருப்பார் பாலசந்தர். இந்தப் படத்தில் இடம்பெற்ற முத்தக் காட்சிக்காக படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது !
என்ன சத்தம் இந்த நேரம்,காலகாலமாக வாழும் காதலுக்கு, சிங்களத்துச் சின்னக் குயிலே, மாமாவுக்குக் குடுமா குடுமா, ஏதேதோ எண்ணம் வளர்த்தேன், வான் மேகம் பூப் பூவாய் தூவும், கவிதை கேளுங்கள் என இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
புன்னகை மன்னன் பின்னர் தெலுங்கில் “டேன்ஸ் மாஸ்டர்” எனும் பெயரில் டப் செய்யப்பட்டது. சாசாசார்லி எனும் பெயரில் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
அந்த ஆண்டு கே.பாலசந்தர் “சொல்லத்தான் நினைக்கிறேன்” திரைப்படத்தை கன்னடாவில் சுந்தர சொப்னங்களு எனும் பெயரில் எடுத்தார். ஸ்ரீதர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த அந்தப் படத்தில் அறிமுகமான நபர்கள் சிலர் உண்டு. அவர்களில் முக்கியமானவர் ரமேஷ் அரவிந்த் !
ரமேஷ் அரவிந்தின் திரை அறிமுகம் சுந்தர சொப்னங்களுடன் துவங்கி பின் பல பரிமாணங்களுக்கு வளர்ந்தது அறிந்த கதை !
- மனதில் உறுதி வேண்டும்
1987ம் ஆண்டில் கே.பாலசந்தரின் இயக்கத்தில் ஒரே ஒரு படம் தான் வெளியானது. அது “மனதில் உறுதி வேண்டும்”. எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுகாசினி, ரமேஷ் அரவிந்த், ஸ்ரீதர், விவேக், லலிதாகுமாரி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். ரஜினிகாந்த், சத்யராஜ் மற்றும் விஜயகாந்த் இந்தப் படத்தில் கௌரவ வேடமேற்றிருந்தார்கள்.
அக்மார்க் பாலசந்தர் படத்தின் களம். நடுத்தர வர்க்கக் கதாநாயகி. குடும்பத்தின் அத்தனை பொறுப்புகளையும் தனது சிறகுகளில் தாங்குகிறாள். அவளுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள், பிரச்சினைகள், சவால்கள் எழுகின்றன. விவாகரத்து, சகோதரனின் இழப்பு உட்பட பெரிய பெரிய சாவால்கள். அவளோ அனைத்தையும் தாங்குகிறாள். தனது உறுப்புகளைத் தானம் கொடுத்து கூட தன்னை வெறுத்தவர்களை நேசிக்கிறாள்.
இந்தப் படத்தில் இளையராஜாவின் இனிமையான பாடல்களுக்கு வரிகள் வழங்கியவர் வாலி. மனதில் உறுதி வேண்டும், கண்ணா வருவாயா, கண்ணின் மணியே, சங்கத்தமிழ்க் கவியே என பாடல்கள் பிரபலமாயின.
அடுத்த ஆண்டு தெலுங்கில் ஒரு சூப்பர் டூப்பர் படத்தை பாலசந்தர் இயக்கினார். அந்தப் படம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த பாடகர் எனும் பிரிவுகளில் விருது கிடைத்தது. சிறந்த நடிகருக்கான ஆந்திர அரசின் நந்தி விருது கதாநாயகனுக்குக் கிடைத்தது. கதாநாயகன் ஆந்திர மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி !
அந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றி கே.பாலசந்தரை தமிழில் இயக்க வைத்தது. தமிழில் இயக்கினார். வேறு யார், கமலஹாசன் தான் ஹீரோ ! அந்தப் படம் தான் “உன்னால் முடியும் தம்பி”.
2,222 total views, 3 views today