ஒரு பறவையைக் கொல்வது எப்படி?

முதலில் உங்களுக்குப் பிடித்தமான
பறவை ஒன்றைச் சந்திக்கும் வரை
காத்திருக்க வேண்டும்

அதனோடு மெல்ல மெல்ல
நட்பாகுதல் வேண்டும்

அது பறந்து திரியும் வெளிகளையும்
அதன் உயரங்களையும்
அதன் கனவுகளையும்
அறிந்து அதன் கனவுகளே உயர்ந்தவை
ஈடுஇணையற்றவை
என உறுதிப்படுத்திக்கொண்டே
இருக்க வேண்டும்

அதைத் தேடிச்சென்று
தாணியங்களை அப்பப்போ
அதன் வெளிகளில் வீசியபடியே
அதன் பறவைக் கூட்டத்தில் மெல்ல
நீங்களும் சேர்ந்துகொள்ள வேண்டும்

மிக நெருக்கமான பறவைகளை
இனம் கண்டு
அதன் பலம் பலவீனங்களால்
அவைகளை மெல்ல பிரித்தெடுப்பதில்தான்
உங்கள் ஆட்டம் தொடங்கப் போகிறது

இந்தப் புள்ளியில் இருந்து செயற்படுவது
மிக கவனத்திற்குரியது
பறவை கோபம் கொள்ளக்கூடும்
தனிமையடையக்கூடும்
அந்தக் கணங்களில் எல்லாம்
நீங்கள் அருகில் இருப்பதை
வழக்கமாக்கிவிட வேண்டும்
மிக அதிக அளவில் அக்கறை
கொள்ள வேண்டும்
கேட்காத உதவிகள்
தன்னார்வத் தொண்டுகளால் நிரப்ப வேண்டும்
பின்னொரு நாளில் பட்டியலிடுவதை
அவை இலகுவாக்கும்

சமயம் வாய்க்கும் போதெல்லாம்
அதன் சிறகுகளை
அதன் வர்ணங்களை
அதன் வீரியத்தை
அவை எட்டப்போகும் உயரங்களை
பூசிய ரசத்தோடு
நீங்களே ஒரு கண்ணாடியாகி
அதன் விம்பத்தைத் தரிசிக்கத் தர வேண்டும்

சிறகின் நரைகளை
அவ்வப்போது பிடுக்கிப்போட வேண்டும்
சில சமயங்களில்
ஒரங்களை கத்தரித்தால்
மேலும் அவை வளருமென
நம்பவைக்க வேண்டும்

பறவையின் வெளிகளை
அதன் புதிய வானத்தை
நீங்கள்தான் விரித்து விட்டதாக
பாசாங்கு காட்ட வேண்டும்
பறவை நம்ப மறுத்தாலும்
கொண்ட நட்பால்
அவைகளை பொருட்படுத்தாமல்
அது பறந்து கொண்டிருக்கும்

அறியாத பொழுதுகளில்
சில முக்கியமான இறகுகளை
ரகசியத்தில் பிடுங்கிப்போட வேண்டும்
முடிந்தால் இவைகளை மற்றவர்கள்
பிடுங்கி விட்டதாகக் காட்ட வேண்டும்

பறவையின் அருகே
பிற பறவைகள் வராதபடிக்கு பார்த்துக்கொள்ளல் மிக அவசியம்

பல அசௌகரியங்களை ஏற்படுத்தி
அசௌகரியங்களுக்கெல்லாம் பறவைதான்
காரணமென
அதையே சொல்லச்சொல்ல வேண்டும்
அதையும் சுற்றி இருப்பவர்களுக்கு
நிரூபித்துக் கொண்டே இருக்கவேண்டும்
பறவையால் நீங்களும்
இறக்கும் தருவாயில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டே
மாந்திரீக கயிறெனவும்
நேர்ந்துவிட்ட கயிறெனவும்
பறவையின் சிறகுகளில்
கூலாங்கற்களைக் கட்டி
தொங்க விடவேண்டும்

அடுத்தடுத்து
பெரும் பாறைகளையும்
அதனடியில் இரும்புக் கூண்டுகளையும்…

இரும்புக் கூண்டுதான் பறவைக்கு
பாதுகாப்பென
பறவை சிந்திக்கத் தொடங்கிவிடும் காலம்வரை
காத்திருங்கள்
இது உங்களுக்கான இரண்டாவது காத்திருப்பு

பாறைகளைத் தூக்கிக்கொண்டு
தன் வெளியை நோக்கிப் பறப்பதா
கூட்டினுள்ளே
பாதுகாத்துக் கொள்வதா என்ற
கேள்வியோடு அமர்ந்திருக்கும்
காலத்தில்

கூடுகளுக்குப் பழக்கப்பட்ட
குருவிகளை அனுப்பி
அக்கறையான புத்திமதிகள்
அறிவுறைகள், அனுபவங்கள்
கூண்ட்டுவழக்கம் அதன் சௌகரியம்
பற்றிச் சொல்ல அனுமதியளியுங்கள்

இப்போது நீங்கள்
மீண்டும் ஏதும் நடவாதது போலவே
நட்பையும் நலத்தையும்
வீசாரித்துக் கொண்டே
பறவை மெல்லக் கூடடைபட்டு
இறந்துகொண்டே போவதை
அன்போடு நிதானமாகப்
பார்த்துக் கொண்டிருங்கள்.

— கவிதா லட்சுமி- நோர்வே

1,185 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *