எனது நாடக அனுபவப் பகிர்வு – 09

ஆனந்தராணி பாலேந்திரா.

கண்ணாடி வார்ப்புகள்


கடந்த இதழில் ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகக் கதைச் சுருக்கமும், அதன் முதல் மேடையேற்றம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் 09-06-1978 அன்று நிகழ்ந்தது பற்றியும் எழுதியிருந்தேன்.
‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகம் ஒரு மொழிபெயர்ப்பு நாடகமாக இருந்தபோதும்கூட எமது வாழ்வியலுக்குப் பொருத்தமான கதையாக இருந்தபடியால் அனைவரையும் கவர்ந்தது. பலர் நாடகப் பாத்திரங்களுடன் தம்மை இனங்கண்டதாகக் கூறினார்கள். பாலேந்திராவின் நெறியாள்கை பற்றியும் எல்லோரது நடிப்புப்பற்றியும் வெகுவாகப் பாராட்டினார்கள். நல்ல விமர்சனங்களும் பத்திரிகைகளில் வெளிவந்தன. முதல் மேடையேற்றத்திற்குப் பாவித்த அந்த நாடகப்பிரதியை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறோம்.
பாலேந்திரா நாடகத்திற்கான ஒளியமைப்பைச் செய்வதிலும் திறமைசாலி. உணர்வுச் சூழலுக்கு அமைந்த ஒளியமைப்பை இந்த நாடகத்திலும் செய்திருந்தார். இந்த நாடகத்தின் ஒளியமைப்பு பற்றியும் வெகுவாகப் பேசப்பட்டது. தாய் தன் பழைய நினைவுகளை மீட்கும் காட்சியில் முதன்முறையாக ஆசைசழச டீயடட அறிமுகப்படுத்தப்பட்டது. மேடையின் ஓரத்தில் அடுத்த காட்சியில் நடிப்பதற்காக நின்றிருந்த எனக்கு அந்த ஒளிக்காட்சி பிரமிப்பாக இருந்தது. ஒரு கனவுலகில் மிதப்பது போல் இருந்தது.

‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகம் இலங்கையில் ஜூன் 78இல் இருந்து ஏப்ரல் 81 வரை யாழ்ப்பாணம், கொழும்பு, பேராதனை ஆகிய இடங்களில் 13 தடவைகள் மேடையேற்றப்பட்டது. பாலேந்திராவின் ஊரான அரியாலையில் ஏப்ரல் 81ல் சுதேசிய திருநாள் விழாவில் திறந்தவெளி அரங்கில் இந்த நாடகம்; மேடையேற்றப்பட்டபோது இடைவேளையின் போது உடை மாற்றுவதற்காக அரங்கிற்கு அருகில் இருந்த ஒரு வீட்டிற்கு என்னையும் நிர்மலாவையும் காரில் அழைத்துச் சென்றது இப்போதும் ஞாபகமாக உள்ளது.
தொடர்ந்த நாடக மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப்படுத்தும் என்பதில் பாலேந்திராவிற்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. இதனால் 1978இல் ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடக மேடையேற்றத்தைத் தொடர்ந்து ஒரு ரசிகர் அவையை உருவாக்கி அடுத்தடுத்து நாடகங்களை மேடையேற்றும் நோக்கத்துடன் அவைக்காற்று கலைக் கழகத்தை ஆரம்பித்தார். இதன் ஸ்தாபக உறுப்பினர்களில் நானும் ஒருவர். பின்னர் 1982இல் நானும் பாலேந்திராவும் திருமணம் செய்து இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் லண்டனைத் தளமாகக் கொண்டு தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தை நாம் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வானொலி நாடகமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டு 23-09-1979ல் ஒலிபரப்பானது. இதனை அப்போது இலங்கை வானொலியில் நாடகத் தயாரிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும்; இருந்த பி.விக்னேஸ்வரன் தயாரித்தார். பாலேந்திரா வானொலிக்காக பிரதியை ஒரு மணித்தியாலமாகச் சுருக்கியிருந்தார். மேடையில் நடித்த நாம் நால்வருமே வானொலியிலும் நடித்தோம். நேயர்களின் வரவேற்பைப் பெற்ற நாடகமாக இது அமைந்தது. ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகம் இலங்கை வானொலியில் நான்கு தடவைகள் மீள் ஒலிபரப்பாகியது.
இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி 1982ஆம் ஆண்டு தனது ஒளிபரப்பை ஆரம்பித்தபோது ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகம் முதலாவது தமிழ் நாடகமாக 18-03-1982ல் ஒளிபரப்பாகி தொலைக்காட்சி வரலாற்றில் இடம் பிடித்துக்கொண்டது. மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகமாகப் புகழ் பெற்றது. இலங்கை வானொலிக்காக இந்த நாடகத்தைத் தயாரித்த பி. விக்னேஸ்வரனே தொலைக்காட்சிக்காகவும் இதனைத் தயாரித்தார். அப்போது அவர் ரூபவாகினியில்; நிiறுவேற்றுத் தயாரிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
1981ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடக ஒளிப்பதிவு ரூபவாகினி கலையகத்தில் நடைபெற்றது. முதல் முதலாக இங்கு ஒளிப்பதிவு செய்யப்பட்ட நாடகம் இதுவாகும். சிங்கள நாடகங்கள்கூட இதற்கு முன்னர் அங்கு ஒளிப்பதிவு செய்யப்படவில்லை. இந்தப் பெருமையையும் ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகம் பெற்றுக்கொண்டது. அங்கிருந்த அனைவருக்குமே இது புது அனுபவம். எல்லோருமே மிக பரபரப்பாக இயங்கினார்கள். நான் ஏற்கனவே ‘கோமாளிகள்’, ‘வாடைக்காற்று’ ஆகிய இலங்கைத் தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தொலைக்காட்சிப் படப்பிடிப்பு எனக்கும் புதிதாகத்தான் இருந்தது. நாம் மேடையில் எப்படி நடித்தோமோ அப்படியே நடித்தோம். மூன்று நான்கு கமராக்கள் வைத்து படப்பிடிப்பு நடந்தது. நள்ளிரவு தாண்டியும் படப்பிடிப்பு தொடர்ந்தது. மிக நீண்ட நேரம் குளிரூட்டப்பட்ட கலையகத்தில் இருந்ததால் எனக்கு மூக்கடைத்து தடிமன்போல் வந்ததும் இப்போது ஞாபகம் வருகிறது.

‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகம் ரூபவாகினி தொலைக்காட்சியில் 1982 மார்ச் மாதம் ஒளிபரப்பப்பட்டபோது நான் யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டையில் அமைந்திருக்கும் யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது அதிபராக இருந்த ராஜன் கதிர்காமர் அவர்கள் இந்த நாடகத்தை எல்லோரும் பார்ப்பதற்காக ஒரு பெரிய தொலைக்காட்சிப் பெட்டியை பாடசாலை மண்டபத்தில் ஏற்பாடு செய்தார். பெரும்பாலும் வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத காலம் அது. விடுதி மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை சுற்றுவட்டத்தில் வசித்த மாணவர்கள், பெற்றோர்கள் என மண்டபம் நிறைய வந்திருந்து பார்த்தார்கள். நானும் இவர்களுடன் சேர்ந்திருந்து நாடகம் பார்த்தது மறக்கமுடியாத ஒரு அனுபவம்.
நான் லண்டனுக்கு புலம்பெயர்ந்த பின்னர் ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தை பாலேந்திரா மீள் தயாரிப்பாக இங்கே தயாரித்தார். இலங்கையில் மகளாக நடித்த நான் லண்டன் தயாரிப்பின்போது தாய் பாத்திரத்தில் நடித்தேன். ஏற்கனவே இந்த நாடகம் எனக்கு நல்ல பரிச்சயமாக இருந்தபடியால் தாய் பாத்திரத்தில் நடிப்பது எனக்குக் கஷ்டமாக இருக்கவில்லை. லண்டன் தயாரிப்பில் என்னோடு மகளாக தர்ஷினி கணேசபிள்ளை (சிவசுதன்), மகனாக வாசுதேவன், விருந்தாளியாக சிவசுதன் ஆகியோர் நடித்தனர். என்னைத்தவிர மற்றவர்கள் இந்த நாடகத்திற்குப் புதியவர்கள் என்பதால் நீண்ட ஒத்திகைகள் நடந்தன.
மிகுதி அடுத்த இதழில்….

912 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *