நம் ஆயுளில் முக்கால்வாசி சமூக அந்தஸ்தினை அடையப் போராடுவதிலேயே கழிந்துவிடுகிறது!


-பிரியா.இராமநாதன்-இலங்கை
“Status” “Status” “Status”
எங்களுடைய பெரும்பாலான திருமணங்கள் எல்லாமுமே “Status” (அந்தஸ்து) என்ற ஒன்றினை அடிப்படையாக வைத்துதான் தீர்மானிக்கப்படுகின்றன. காதலுக்குக் கண்ணில்லை என்று காதல் திருமணங்களை நிராகரிக்கும் பெற்றோர், பெரியவர்களாகப் பார்த்து திருமணங்களை ஒழுங்கு செய்யும்போது அவர்களது அனுபவத்தின் அடிப்படையில் சாதகபாதகங்களையெல்லாம் சீர்தூக்கிப்பார்த்து, ஒரு நல்ல முடிவாகத்தான் எடுப்பார்கள் என்று பொதுவாக கூறப்பட்டாலும், அவர்கள் பார்க்கும் சாதகபாதகங்கள் எதுவென்றால் ஜாதி,மதம்,வரதட்தனை, குடும்பப்பின்னணி, உத்தியோகம், ஜாதகம், பொருளாதாரம்போன்ற அந்தஸ்தின் அடிப்படையில் அவர்கள் தங்கள் முடிவுகளை எடுக்கிறார்கள்.
திருமணவயதடைந்த ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவதை பெரியவர்கள் ஒரு கடமையாக, தங்களுக்கிருக்கும் ஓர் பொறுப்புணர்வாக சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், தனக்குப் பிடித்த ஒரு துணையினை தேர்ந்தெடுப்பதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் முழுமையான சுதந்திரத்தை இந்த சமூக – குடும்ப கட்டமைப்பு கொடுத்திருக்கின்றனவா? தங்களுடைய பிள்ளைகளின் திருமணங்களில் இன்றும்கூட முழுமையான சுதந்திரத்தினை அவர்கள் கொடுக்கத் தடையாக இருக்கும் காரணங்கள்தான் நான் ஏலவே குறிப்பிட்டுள்ள “அந்தஸ்து ” என்ற விடயம். இந்த அந்தஸ்துப் பட்டியலில் ஏதேனும் ஓன்று குறைந்தால்கூட மனதால் ஒன்றுபட்ட இருவர் வாழ்க்கையில் ஒன்றுசேர இயலாமல், கட்டாயத்தின் பெயரில் தத்தமது அந்தஸ்துக்கேற்ப வேறொருவரை திருமணம் செய்துகொள்கின்றனர்.

“சமூக அந்தஸ்து ” என்ற ஓன்று மிகவும் முக்கியமான தவிர்க்க முடியாத ஒன்றாக நம்முடைய வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து விட்டிருக்கிறதுபோலும். அந்தஸ்து குறைந்துவிட்டால் நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் நம்முடைய ஆழ்மனதில் பதிந்துபோய்விட்ட ஓன்று. மனிதனை ஓர் சமூக விலங்கு என்பார்கள், அதற்க்கிணங்க நம்மைச் சுற்றியுள்ளவர்களிடையே நாம்தான் முதன்மையானவராக முக்கியமானவராக தென்பட வேண்டுமென்ற ஆசை கொண்டபோதே இந்த “அந்தஸ்து” என்ற ஓன்று இயல்பாகவே உருவாகியிருக்ககூடும் என்கிறார்கள்.
இந்த அந்தஸ்தினை அடைவதற்க்காக நாம் ஒவ்வொருவரும் படும் பிரயத்தனம் சொல்லிமாளாதவை . அந்தவகையில் சமூக அந்தஸ்தினை மூன்று வகையாக பிரிக்கமுடியும். உழைப்பால் கிடைக்ககூடிய கல்வி, உத்தியோகம் போன்றவற்றால் கிட்டும் சமூகஅந்தஸ்து, இரண்டாவதுவகை தானாகக் கிடைக்ககூடிய சமூக அந்தஸ்தான தகப்பன் தாய் வழிவரும் சொத்து, சாதி போன்றவை. மூன்றாம் வகை சமூக அந்தஸ்துதான் திருமணம், ஆடம்பர பகட்டு போன்றவற்றால் வலிந்து தேடிக்கொள்ளும் வரட்டுக் கௌரவ சமூக அந்தஸ்து.

நம்முடைய ஆயுளில் பாதி ஏன் முக்கால்வாசி இந்த சமூக அந்தஸ்தினை பெற்றுக்கொள்வதில் போராடுவதிலேயே கழிந்துவிடுகிறது என்பதுதான் உண்மை. நட்பு, குடும்ப உறவு போன்றவற்றைவிட திருமணங்களில்தான் இந்த சமநிலை அந்தஸ்து என்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சம்பந்திகள் சமநிலை அந்தஸ்தில் இல்லாவிட்டால் அந்த திருமணங்கள் பெரும்பாலும் வெற்றியடைவதேயில்லை போலும்! ஏன், காதல் திருமணங்களின் தோல்விக்குக்கூட பிரதான காரணம் அந்தஸ்து வேறுபாடுதான் என்பதை எளிதில் மறுத்துவிட இயலாது. திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற முதுமொழி மாற்றப்பட்டு, திருமணங்கள் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற புதுமொழி உருவாக்கப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில், சாதி, அழகு, பொருளாதார பின்னணி,கல்வி, குடும்பப்பின்னணி போன்ற“அந்தஸ்து சல்லடைகளால்” மணமக்கள் சலித்தெடுக்கப்பட்டு,வட்டிக்காவது கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்து, திருமணங்களை நடாத்தி வைப்பதில்தான் தம்முடைய அந்தஸ்து இருப்பதாக காட்டிக்கொள்வோர்தான் இன்று அதிகம். இவர்களுக்கு பெரிய அளவில் திருமணங்களை நடாத்தி தம்முடைய அந்தஸ்து “கெத்தினைக்” வெளிப்படுத்திக்கொள்ளாவிட்டால் மிகப்பெரியதொரு கௌரவக் குறைச்சல். பத்திரிகை அடிப்பதில் ஆரம்பித்து, மண்டபங்களை குறைந்தது ஆறு மாதங்களுக்கு பதிவு, விதம்விதமான கல்யாணச்சமையலில் பணத்தை செலவிடுவது, மணவறை அமைப்பிலிருந்து, விடைபெறும்போது அதிதிகள் கையில் வரவுக்கு நன்றிகூறி கொடுத்தனுப்பபடும் குத்துவிளக்குவரை எல்லாமும் அந்தஸ்தின் அடையாளமாக! இப்படிப் பார்த்துபார்த்து செய்துவைக்கப்பட்ட அத்தனை திருமணங்களுமே வெற்றிகரமாக தொடர்கின்றனவா? (Covid 19 இதற்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது.)

இதில் இன்னுமோர் முக்கியமான விடயம்தனையும் குறிப்பிட்டேயாகவேண்டும், பொதுவாக மாப்பிள்ளையை தேர்ந் தெடுக்கும் பெண் வீட்டார் மாப்பிள்ளையை அளவிடும் அந்தஸ்த்துப் பட்டியலில் முதலிடத்தில் நோக்குவது அவரது உத்தியோகத்தை. அரச உத்தியோகம்தான் நிலையானது, பாதுகாப்பானது, சலுகைகள் நிறைந்தது, வருமானம் தரக்கூடியது போன்ற எண்ணங்களுடன் அரச உத்தியோக மணமகனை தேர்ந்தெடுக்கும் பலர், மாப்பிள்ளை வீட்டாரின் அதிகப்படியான எதிர்பார்ப்புகளையும்,கர்வத்தையும்கூட பொருட்படுத்தாது அந்தஸ்த்துக்காக டாக்டர்களையும், என்ஜீனியர்களையும் தேடும் கூட்டம் ஒருபுறம். வெளிநாட்டு மாப்பிள்ளைதான் தற்கால அந்தஸ்தின் அடையாளம் என்ற நோக்கில் தங்கள் வீட்டுப்பெண்களுக்கு அமெரிக்காவிலும்,லண்டனிலும்,அவுஸ்ரெலியாவிலும்,பிரான்சிலும் யேர்மனி யிலும், மணமகனுக்கான வேட்டையினைத் தொடரும் கூட்டம் இன்னொருபுறம். இதிலும் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தப் பெண் வீட்டார் இந்த முடிவுகளுக்கு தாங்களாக முன்வருவதில்லை, அடுத்தவர்களைப் பார்த்துதான் சிலவிடயங்களை தங்களுக்கான அந்தஸ்த்தாக வரையறை செய்துகொள்கிறார்கள்.

உண்மையில் ஒரு மனிதனை அறிந்துகொள்ள உத்தியோகமும், வருமானமும், பண்புகளும் மட்டும் போதாது. எந்த உத்தியோகமும் நிலையில்லாததுதான். பண்புகளும், குணங்களும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். ஆனால், ஒருவனிடம் எப்போதும் மாறாத ஓன்று உண்டு அதுதான் ஒவ்வொருவரினதும் “தனித் திறமை “! அந்த ஒன்றே போதும் ஒருவனை அவன் வாழ்வில் முன்னேற்ற. திறமை இருந்தால் வருமானம் எந்த வகையிலும் வரும். திறமை இருந்தால்தான் அவன் செய்யும் வேலையே நிலைக்கும். வாழ்வின் எந்தச் சூழலிலும் கைகொடுப்பது இந்த திறமைதான். அந்தஸ்தின் அடிப்படையில் மணமகன் என்ன உத்தியோகம் பார்க்கிறான், வருமானம் எவ்வளவு என்றெல்லாம் கணக்கிடும் பெரியவர்கள் எந்தக் கஷ்டம் வந்தாலும் தங்கள் மகளைக் காப்பாற்றும் திறமை உள்ளவனா,வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளக் கூடியவனா என்று யோசிப்பது வெகு குறைவென்றே கருதுகிறேன். கலாசாரம் என்ற பெயரிலும் பிறர் எம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற, அந்தஸ்து வெறியிலும் தங்கள் பிள்ளைகளின் வாழ்வினை சீரழிக்கும் எத்தனையோ பெற்றோர் எம்மத்தியில் உள்ளார்கள். பிள்ளைகளின் குடும்பவாழ்வு என்ற ஒன்றினை மனதிற்கொண்டு அவர்கள் சந்தோசமே பெரிதென்று ஒவ்வொருவரும் நினைக்கும் காலம்வரும்போதே உண்மையான பொருத்தமான துணைகளை ஒவ்வொருவரும் தம்முடைய வாழ்வில் பெற்றுக் கொள்ள இயலும். தம்முடைய கடைசிக்கால சேமிப்புவரை வீணாக்கி , கடன்வாங்கி எஞ்சியகாலம் முழுவதும் கஷ்டப்பட்டு போலியான அந்தஸ்தின் அடிப்படையிலான வாழ்வில் இணைந்திருப்போர் சற்று யோசித்துப்பார்க்கலாமே ?

1,155 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *