மனநலம் பாதிக்கப்படவர்கள் என்ன, தீண்டத்தகாதவர்களா!

(அக்டோபர் 10 ….! உலக மனநல நாள்)
பிரியா.இராமநாதன் -இலங்கை.

எம்மில் பலர் சொல்ல விரும்பாத அல்லது சொல்லத் தயங்குகிற ஒன்றுதான் இந்த மனநலப் பிரச்சினை . இன்று “சைக்கோ ” என்ற சொல் மலிவானதாகவும், ஏளனமானதாகவும் பயன்படுத்தப்படும் ஓர் வகைச்சொல் ஆகி விட்டது . அன்றிலிருந்து இன்றுவரை மனநோயாளர்களை இந்த சமூகம் வேண்டத்தகாதவர்களாகவே பார்க்கிறது. அவர்கள்மீது கல்லெறிந்து விளையாடும் சமூகத்திலிருந்து வந்தவர்களாகவே நாமும் இருந்துவந்திருக்கிறோம். தாய் தந்தையரால் பராமரிக்கப்படாவிட்டால் பிச்சைக்காரர்களாக வாழ வேண்டியதுதான் எம்முடைய நாடுகளின் மனநோயாளர்களது நிலை ! அவ்வளவு ஏன், எம்முடைய சமூகத்தில் மனநோயாளர்களுக்கு மட்டுமல்ல மனநல மருத்துவர்களுக்குமே நல்ல பெயர் இருப்பதில்லை என்றால் அது மிகையில்லை. மேலும், சிவாஜி கணேசனின் “அன்பைத் தேடி” மற்றும் எங்கிருந்தோ வந்தாள் முதல் அண்மையில் வெளிவந்த “சைக்கோ” வரையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை முரட்டுத்தனமான துர்நடத்தை உள்ளவர்களாகவோ அல்லது கேலிக் குறியவர்களாவோதான் சித்தரித்து வந்திருக்கிறது எங்கள் சினிமாக்களும்கூட. பார்ப்பவர்களின் மனதில் இப்படியான நோயாளிகள்மீது அனுதாபதிற்க்குப் பதில் வெறுப்பினையே வளர்த்துவிட்டிருக்கிறது இந்த சினிமாக்கள் என்பது மறுப்பதற்கில்லை. காலங்காலமாக கட்டமைத்துவிடப்பட்ட இந்த தவறான பிம்பம், மனநோயாளிகள் என்றாலே மிகவும் ஆபத்தானவர்கள், சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்படவேண்டியவர்கள், தனிமையாக பூட்டிவைக்கப்பட வேண்டியவர்கள் என்ற கருத்தினை நம் ஒவ்வொருவரினதும் மனதிலும் ஆழமாக வேரூற்றச் செய்துள்ளது எனலாம்.

ஆசிய நாட்டவர்களைப் பொறுத்தவரையில் மனநலம் பற்றிய விடயங்கள் மிகவும் இரகசியமானதாகவே வைக்கப்படுகிறது. மேற்கத்தைய சமூகத்தைப்போல் பிரச்சினையை எதிர்கொள்வதற்கு மாறாக இப்படி மறைத்து வைக்க முயல்வதற்க்கான காரணம்தான் என்ன ? பொதுவாக தங்களுக்கு ஏற்ப்படுகின்ற உடல் சார்ந்த நோய்களை வெளிப்படையாக சொல்லிக்கொள்ளும் மக்கள், மனநலம் சார்ந்த சிக்கல்கள் என்றால் குடும்பத்துக்குள்ளேயே மறைத்துவிடுவர். தாம் உளரீதியான பிரச்சினைக்கு ஆளாகியுள்ளதை பிறர் தெரிந்துகொண்டால் சமூகத்தில் தமக்கான நிலை, தம்முடைய இருப்பு பாதிக்கப்பட்டுவிடும் என்பதே இதற்கான பிரதான காரணம். தம்மை பைத்தியக்காரன் என்றும் விசர் பிடித்தவன் என்றும் சமூகம் முத்திரை குத்திவிடும் என்ற அச்சத்தினாலேயே பலர் உரியமுறையில் சிகிச்சைகளைக்கூட பெற்றுக்கொள்ள முன்வருவதில்லை . குடும்ப கௌரவம் பாதிக்கப்பட்டுவிடும், குடும்பத்தில் உள்ள மற்றைய உறுப்பினர்களது தனிப்பட்ட வாழ்வு கேள்விக்குள்ளாக்கப்படும் என்ற எண்ணம் பல குடும்பங்கள் பாதிக்கப்படவர்களை வெளியே அனுமதிக்காது மறைத்துவிட முனைகிறது. மற்றைய நோயாளி களையும் நோய்களையும் சாதாரணமாக , கருணையுடன் எதிகொள்ளும் நாம் மனநலம் பாதிக்கப்படவர்களை மட்டும் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கிவைப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா ?

‘மனநலப் பிறழ்வு” என்பதை வரையறுப்பது கடினம் என்றே நான் கருதுகிறேன் . ஏனெனில் யார் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை அடையாளப்படுத்திக் கூறிவிட முடியும் , ஆனால் யார் மனநலம் பாதிக்கப்படாதவர் எம்மில் என்பதை எவ்வாறு அறுதியிட்டுக் கூறமுடியும் ? ஏனெனில் நாம் எல்லோருமே ஏதோவோர் அழுத்ததிற்கு உள்ளானவர்களாகத்தான் இருக்கிறோம் , ஆனால் அதை கட்டுக்குள் வைத்துக்கொள்ள எங்களால் முடிகிறது ,, இந்த கட்டுப்படுத்தல் என்பது என்று உடைகிறதோ அன்று நாங்களும் சராசரிகள் அல்ல என்ற நிலைமைக்குள் வந்துவிடக்கூடும் . எனெவே, மனநோய் என்பது யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் ..சில குறைபாடுகள் இருந்தாலும் அவர்களை நாம் தனித்துவிடக்கூடாது, அவர்களை முடிந்தவரையில் மனித நேயத்துடன் உட்சாகப்படுதவேண்டும். மருத்துவர்களின் ஆலோசனைப்படி முறையான சிகிச்சை அளிக்கப்பட்டாலும் ஒவ்வொரு நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களினது அன்பும் பராமரிப்பும், புரிந்துணர்வுடன்கூடிய அக்கறையும் அத்தியாவசியமாகிறது.

குடும்ப நிகழ்வுகளில் அவர்களது பங்களிப்பும் இருக்குமாறு முடிந்தவரையில் பார்த்துக்கொள்வது நல்லது. பைத்தியம், மெண்டல், லூசு, கிராக்கு போன்ற வார்த்தைகளை அவர்களைநோக்கிப் பிரயோகிப்பதை முற்றிலும் தவிர்த்துக்கொள்வது அவசியம். அவர்களை அவர்களது இயல்புடன் செயற்ப்பட அனுமதிப்பதுடன் , அவர்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு அழைத்துச் செல்வது , அவர்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபடச் செய்வது, அவர்களது கற்பனைத் திறன்களை வளர்க்கும் வகையில் செயட்ப்படுவது என்று நாமும் கொஞ்சம் முயற்சி செய்தால் அவர்களது பிரச்சினை விரைவில் குணமாக வழியுண்டு என்று மனோதத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். முக்கியமாக அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை முடிந்தவரை அவர்களுக்கு நினைவுபடுத்தாமல் இருப்பது அவசியமாம். அவர்களை தனிமைப்படுத்தி கட்டிலோடு பிணைத்து வைக்காது இந்த சமூகத்தோடு பிணைக்கும்போது அவர்கள் தங்கள் சிக்கல்களில் இருந்து மீளுவதற்க்கான வாய்ப்புக்கள் அதிகம்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு எவ்வகையிலும் தாழ்ந்தவர்கள் அல்லர், அவர்களுடைய நோய்த் தாக்கம் குறைந்தவுடன் எல்லோரையும்போல் தாமுடைய அன்றாட பணிகளை செய்யலாம் , எல்லோருடனும் சேர்ந்து வாழலாம் என்ற நிலை உருவாக வேண்டும் என்ற நோக்கத்தினை வலியுறுத்தும் முகமாகவே உலக மனநலநாள் ஒவ்வொருவருடமும் மனநலம் தொடர்பான ஒரு குறிப்பிட்ட விடயத்தினை மையமாகக்கொண்டு அனுசரிக்கப்படுகிறது

மாறிவரும் நாகரீகத்தால் மாண்டுபோய்க் கொண்டிருக்கும் மனித நேயம் மறைந்துபோகாமல் காப்பாற்றவேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமையல்லவா ?

810 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *