இலங்கை வானொலியின் இசைத்தட்டுக் களஞ்சியம் இல்லை என்றால் பொங்கும் பூம்புனல் எங்கே! நீங்கள் கேட்வை எங்கே!!

-விமல் சொக்கநாதன்-இங்கிலாந்து

இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பில் நான் அறிவிப்பாளராக கடமையாற்றிய 1975களில் காலை ஒலிபரப்பை நடத்த வேண்டிய அறிவிப்பாளரை இலங்கை வானொலியின் வண்டி காலை 4 ½இ 5 மணிக்கே வீட்டிலிருந்து அள்ளிப் போட்டுக்கொண்டு வந்து காலை 5½ மணிக்குள் நிலைய வாசலில் கொட்டி விடும். நேரடியாக கலையகத்துக்குப் போய் 6 மணி ஒலிபரப்பை ஆரம்பிக்க தயாராகி விட வேண்டும். நேரமிருந்தால் வானொலி நிலையத்தின் சொந்த சாயாக் கடைக்கு ஓடிப் போய் ஒரு தேநீர் அருந்தி விட்டு கலையகம் செல்வோம். கலையகத்தில் சக்கரங்கள் கொண்ட சிறு அலுமாரி ஒன்று எமக்காகக் காத்திருக்கும். நாங்கள் கொண்டு வந்த சாவியைப் போட்டதும் அந்த records cabinet திறந்து கொள்ளும். சுமார் ஏழு நாட்களுக்கு முன்னர் நான் தெரிவு செய்த இசைத்தட்டுக்களும் இன்ன நிகழ்ச்சிக்கு இன்ன இசைத்துட்டு என்று வரிசைப்படுத்திய நிகழ்ச்சிப்பட்டியலும் ஆங்கில தட்டச்சில் அழகாக பொறிக்கப்பட்டு இசைத்தட்டுக்களுடன் வைக்கப்பட்டிருக்கும். ஆங்கிலத்தில் அழகாக பொறிப்பவர் தமிழ் வர்த்தக சேவை அறிவிப்பாளர்களின் பேரபிமானத்திற்கும் பெரு மதிப்பிற்கும் உரிய விக்டோரியா நவம் ஜேசு என்பவர். இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பில் அறிவிப்பாளர்களாக பணியாற்றிய அனைவருக்கும் விக்டோரியாவைத் தெரியும்.

ஆனால் சகோதரி விக்டோரியாவோ தமிழ் வர்த்தக சேவை ஒலிபரப்பாளர்களை மட்டுமன்றி அத்தனை தமிழ் அறிவிப்பாளர்களின் பாடல் விருப்பங்களை இசைத்தெரிவுகளை மனனம் செய்தவர் போல் பணியாற்றும் ஒரு அசாதாரண சேவையாளர். காலை 6 AM முதல் 8 AM வரை ஹமீட் வரப்போகிறார், விமல் வரப்போகிறார் என்றால் அதற்கான இசைத்தட்டுக்களையும் ஏற்கனவே தெரிவு செய்து நிகழ்ச்சி நிரல் தயாரிப்புக்காக வைக்க வேண்டிய இடத்தில் வைத்து விடுவோம். விக்டோரியா அவர்கள் வேலையை ஆரம்பிக்க முன்னர் பக்திப்பாடல்கள், நினைவில் நிறைந்தவை, ஈழத்துப்பாடல்கள், பின் பொங்கும் பூம்புனல் இவற்றுக்கு எந்தெந்த அறிவிப்பாளர் எந்தெந்த இசைத்தட்டுக்களை, என்னென்ன பாடல்களை தெரிவு செய்திருக்கிறார்கள் என்று முதலில் தமது கைகளால் தட்டி கண்களால் ‘ஸ்கேன்’ செய்து விடுவார். அந்த ளுஉயn கள் அனைத்தும் அவரது தலையில் உள்ள Hard Disc இல் சேமிக்கப்பட்டு விடும்

Hard Disc இல் சேமிக்கப்படுவது அறிவிப்பாளர்களாகிய எமது பாடல் தெரிவுகள் மட்டுமல்ல தெரியப்பட்ட இசைத்தட்டுக்களின் இலக்கங்களும் தான். ஒரு பாடலை நீங்கள் குறிப்பிட்டால் அது COLUMBIA இசைத்தட்டா அல்லது HMV His Master’s Voice …? இசைத்தட்டா ..? நீல நிற லேபல் இலக்கம் என்ன..? HMV சிவப்பு நிற லேபல் இலக்கம் என்ன..? என்று உடனடியாக பதிலளிப்பார் சகோதரி விக்டோரியா. இன்று ஓய்வு பெற்று தமது கிராமமான நவாலியில் தமது இல்லத்தில் தமது ஓய்வு நாட்களை கழித்து வருகிறார்.

இணையற்ற புகழ் பெற்ற பாடகர் ரி.எம். சௌந்தரராஜன் ஒரு பேட்டியில் சொன்னது‘ நான் படங்களில் பாடும் போது அந்தப் பாட்டுக்கு வாயசைக்க போகும் நடிகர் யார் என்று கேட்டு அறிந்து கொள்வேன் அப்போது தான் சிவாஜிக்கு, எம். ஜி.ஆருக்கு ஜெமினிக்கு ஏற்றது போல் என் குரலை நான் ஓரளவு மாற்றிப்பாட முடியும்.’

‘M.G.R.ஒரு இளைஞனைப் போல் கையில் சவுக்குடன் படிகளில் பாய்ந்து பாய்ந்து ஆடிப்பாடும் பாடல் ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்’ பலரது நினைவில் பல வருடங்கள் நிலைத்து நிற்கும் பாடல் .
TMS தமது பேட்டியில் நேயர்களிடம் சொன்னார்.

‘நான் ஆணையிட்டால் பாடலை நீங்கள் கேட்கும் போது என் நினைவு உங்களுக்கு வரவே வராது. MGR துள்ளித் துள்ளி படிகளில் ஏறி ஓடும் காட்சி தான் உங்கள் நினைவுக்கு வுரும்.’ பாலும் பழமும் படத்தில் போனால் போகட்டும் போட என்றால் சிவாஜியின் அந்த நடையல்லவா நினைவு வரும்.

இலங்கை வானொலியில் அற்புதமான ஒரு நிகழ்ச்சியை நீங்கள் கேட்கின்றீர்கள் .நிகழ்ச்சி நிறைவடைந்ததும், நிகழ்ச்சியை தயாரித்த அறிவிப்பாளர் ‘ இன்றைய நிகழ்ச்சியை இத்துடன் நிறைவு செய்யும் நான் எனக்கு உதவிய ஒலிப்பதிவு உதவியாளர என்பதோடு நிகழ்ச்சியை முடித்துக் கொள்வார்.

இந்த ஒலிப்பதிவில், தயாரிப்பில் உதவிய முகம் தெரியாத மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். விக்டோரியா போன்ற வர்களின் பெயர்கள் ஒலி அலைகளில் கலக்காமல் மறைந்து விடுகின்றன. ஆங்கில சினிமாப் பாடங்களை பார்க்கும் போது கடைசிக் காட்சியில் டைட்டில் ஓடுவதை கவனித்திருக்கிறீர்களா..? (பலர் பார்ப்பதில்லை பஸ் பிடிப்பதற்காக எழுந்து பின் வரிசை பார்வையாளர்களுக்கு உபத்திரவமாக அதிலேயே நின்று பேசிக்கொண்டிருப் பார்கள்) வீட்டில் இருந்த DVD யில் படம் பார்க்கும் போதும் ஏன் எழுந்து ஓட வேண்டும் கோப்பி தயாரித்து குடும்பத்திற்கு பறிமாற வேண்டுமா..?

ஆங்கில பட CLOSING TITLES இல் GIRL IN RED DRESS> INDIAN MAN IN PUB> POLICE MAN 1> POLICE MAN_2 என்று மிகவும் விளக்கமாகவும் விரிவாகவும் அத்தனை பேரின் பெயர்களையும் படத்தில் சேர்த்திருப்பார்கள் தமிழ்த்திரைப்படங்களில் இந்தப் பழக்கம் கிடையாது. படம் முடியும் முன்னர் மக்கள் பஸ் பிடிக்க ஓடி விடுவார்கள் என்று தெரிந்த காரணத்தினால் தான் என்று நான் நினைக்கிறேன். படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் OPENING TITLES இல் தயாரிப்பாளர் காக்காய் பிடிக்க விரும்பும் வங்கி மனேஜர். பொலிஸ் அதிகாரி, இவர்களோடு படப்பிடிப்பின் போது உணவு வழங்கிய சமையல் நிபுணர்களையும் ‘மெஸ்’ என்று பெயரில் குறிப்பிட மறக்கமாட்டார்கள். எஞ்சிய பெயர்கள் எல்லாம் ஆபீஸ் நிர்வாகம் என்ற தலைப்பிற்குள் சங்கமமாகிவிடும்.

விக்டோரியா அவர்களை இசைத்தட்டு களஞ்சியத்தில் நான் சந்தித்த வேளையில்,இசைத்தட்டு களஞ்சிய பொறுப்பாளராக திருமதி வில்லியம்ஸ் பணியாற்றினார். விக்டோரியாவோடு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கும் பொறுப்பை ( நான் கூறுவது 1975 காலப்பகுதி) யோகேஸ்வரி கந்த நயினார், மற்றும் வேர்ஜில் பர்னாந்து ஆகியோர் பகிர்ந்து கொண்டார்கள்.

வேர்ஜில் அமரத்துவம் அடைந்து விட்டார். யோகேஸ் இலங்கை வானொலியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
இசைத்தட்டு களஞ்சியத்தில் என்னால் மறக்கமுடியாத ஒரு ஊழியர் AARON. சிங்கள இனத்தவர். காலையில் வந்ததும் கலையகத்தில் வைக்கப்பட்டுள்ள சக்கரங்கள் கொண்ட அலுமாரியை இழுத்துச் சென்று இசைத்தட்டு களஞ்சியத்தில் விட்டு ஒரு நூல் நியைத்தில் CHECK IN செய்வது போல் அந்த இசைத்தட்டுக்களை CHECK IN செய்வார். மாலையில் அவர் வேலை முடிந்து ஐந்து மணிக்கு புறப்பட முன்னர் மறுநாளைக்கு தேவையான இசைத்தட்டுக்களை.CHECK OUT செய்த பின்னர் அலுமாரியை சக்கரங்கள் மூலம் இழுத்துச் சென்று கலையகத்தில் வைத்து விடுவார். என்னுடன் மிக அன்பாகப் பழகிய ஒரு சிங்களத் தாத்தா, இனத்துவேஷம் என்றால் என்ன என்றே அவருக்கு தெரியாது.

1,137 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *