ஆசையாக வடிக்கும் மணற் சிற்பங்கள் ஆசையை அறுக்கவும் கற்றுத்தரும்.

மாதவி.யேர்மனி

கடற்கரையில் சிறுவயதில் பட்டம் விடுபவர் ஒரு புறம், கடல் அலையோடு விளையாடுபவர்கள் ஒரு புறம். என்னதான் விளையாடினாலும் அந்த மணலில் வீடு கட்டி விளையாடாமல் எவரும் வீடுதிரும்புவதில்லை.
காலை மணலுக்குள் புதைத்து நிற்க மற்றவர் காலுக்கும் மேல் மண்ணை மூட, பின் காலை மெல்ல எடுக்க ஒரு குகை வீடு அங்கு அழகாக அமையும்,

மணல் சிற்பம் என்பது மணலைக் கொண்டு கலைத்து வடிவமாக உருவாக்கப்படும் வடிவங்களைக் குறிக்கும். மணற்கலை என்பது மணற்சிற்பங்களாகவோ, மணல் ஓவியங்களாகவோ காணப்படலாம். சிறிய அளவில் செய்யப்படும் மண் கோட்டைச் சிற்பங்களும் இதனுள் அடங்கும். மண்ணும் நீரும் மணற்சிற்பம் உருவாக்க அடிப்படையாகத் தேவைப்படும்.கடற்கரையில் இவையாவும், இலகுவாக, இலவசமாக கிடைக்கும்.

இங்கு மணல் வீடுகட்டியும், பொம்மை உருவங்கள் வடித்தும், மகிழ்வதும் உண்டு. சில சமயங்களில் நாம் செய்தது நமக்கே என்ன என்று தெரியாதபோதும், அம்மா அப்பா அட சரியா இது முயல் போலவே இருக்கென்று, எமது கலை ஆர்வம் வளர உற்சாகப்படுத்துவார்கள்.

உண்மையில் சிறுவயதில் நாம் சாதிக்கமுடியாத பல வற்றை இப்போது சிறுவர்களும்,பெரியவர்களும், இந்த மணல் சிற்பத்தில் பெரும் சாதனைகள் புரிகிறார்கள். இத்தோடு இப்போ மணற் சிற்ப போட்டிகள் பலவும் கடற்கரை ஓரங்களில் நடைபெறவே செய்கின்றன.

கடற்கன்னி, பாதி பெண், பாதி மீன் வால், என பலமணி நேரம் இரவு பகலாக செய்து முடிக்கின்றார்கள். கடவுளின், திருவுருவம், அரசன், அரசி, அன்னை தெரேசா, காந்திஅடிகள், இப்படி மனங்கவரும் மனிதரையும் மணற்சிற்பமாக வடிக்கின்றனர்.

பல மணி நேரத்தை விழுங்கிடும் இந்த மணற்சிற்பத்தின் ஆயுளோ மிகக்குறைவு. யோசித்து பாருங்கள் காந்தி அடிகளின் மணல் உருவச்சிற்பம், அல்லது ஓரு இளவரசியின் அலங்காரச் சிற்பம் எவ்வளவு நுணுக்கமாக இருக்கும்.

நீண்டகாலம் நிலைத்து இருக்கும் ஒன்றிற்கு, நாம் நேரத்தை அதிகம் செலவு செய்தல் அர்த்தம் உள்ளது. இதோ வெறும் மணிக்கணக்கில் இருப்பற்கு இவ்வளவு நுணுக்கம் எதற்கு, கலைஞர்களது திறமைகள் வீணடிக்கப்பட்டதாக அல்லவா எண்ணத் தோன்றுகின்றது.

உண்மையில் அப்படி என்றால் ஏன் இப்படி மணற்சிற்பம் செய்கிறார்கள்.

சிறுவயதில் நம் விளையாட்டாகவும், வளர்ந்தபின் போட்டியாகவும், நாம் செய்துகொண்டு தான் இருக்கிறோம். அப்படி என்றால், குறுகிய வாழ்வுகொண்ட, அந்த மணற்சிற்பங்கள் எமக்கு சொல்லும் பாடம்தான் என்ன.
எம்மை விடுங்கள், ஆசையத்துறக்க முயலும் நேபாளத்தில் இருக்கும் பௌத்த துறவிகளுக்கம், இந்த மணற் சிற்பங்களை செய்யவே, முதலில் பயிற்சி வழங்குவார்கள்.

துறவிகள் சிறப்பான, பிறர் மெச்சும்படியான சிற்பங்களை, வடிப்பார்கள். ஆனால் அவர்கள் வடித்த சிற்பம் அற்புதமாக வந்தாலும், அதனை பலர் பார்ப்பதற்கு முன்பே அழித்து விடுவார்களாம்.

இதனால் துறவிகளுக்கு இந்த அழகிய வாழ்வு நிலையற்றது, என்ற மெய்ஞான விளக்கம் அந்த மணற்சிற்பங்கள் மூலம் போதிக்கப்படுகிறதாம். அது மட்டுமன்றி, இழப்பின் வலியை தாங்கும் வலுவைப் பெறும் வழியையும் அறிந்து கொள்வார்களாம்.

ஒருவன் பிறந்து வளர்ந்து பல தடைகளைத்தாண்டி உயர்வான இடத்தை அடையும் போதும், அந்த மனிதனும் ஒரு மணற்சிற்பம்! எந்த நேரமும் அழியலாம், கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவன் என்ற காரணம் மட்டும் அவனை அழிவில் இருந்து காக்காது, என்ற பேருண்மையை மணற்சிற்பங்கள் விளக்குகின்றன.

துறவறத்தில் உள்ள துறவிகளுக்கு மட்டுமல்லாது, எவர்க்கும், இழப்பைத் தாங்கும் மனதை எப்படி உருவாக்குவது, என்பதனை சிறுவயதிலேயே ‘ஆசையாக வடிக்கும் மணற் சிற்பங்கள், ஆசையை அறுக்கவும், கற்றுத்தருகிறது.
ஒரு கலையானது எமக்கு, இரு செய்திகளைச் சொல்லும், ஒன்று அகம் சார்ந்தும்,மற்றது புறம்சார்ந்தும் இருக்கும் என்பதனை நாம் உணரவேண்டும்.

747 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *