ராஜபக்சக்களின் எதிர்காலமும்,காலிமுகத்திடல் போராட்டமும்!

இலங்கையிலிருந்து ஆர்.பாரதி

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை இலங்கைத் தூதுக்குழு அமெரிக்காவில் ஆரம்பித்துள்ள நிலையில் இந்தியாவும் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது. இலங்கைக்கு தேவையான நிதி உதவிகளை நாணய நிதியம் வழங்கவேண்டும் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்திருக்கின்றார். இலங்கை எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கும் என்றாலும், நாட்டில் உருவாகியுள்ள நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அது மட்டும் போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி இப்போது எழுகின்றது.

அதாவது ராஜபக்சக்களின் எதிர்காலத்தை இந்த கடனுதவி மட்டும் உறுதிப்படுத்துமா என்பது முக்கியமான கேள்வியாகவுள்ளது.

இலங்கை தற்போது எதிர்கொள்ளும் அந்நியச் செலாவணிப் பிரச்சினைக்குத் தீர்வைக்காண்பதற்கு சர்வதேச நாயண நிதியம் உதவப்போகின்றது என்றாலும் கூட அதற்காக முன்வைக்கப்படும் நிபந்தனைகள் இலங்கையில் தற்போது காணப்படும் கொந்தளிப்பு தொடர்வதற்குக் காரணமாக இருக்கலாம்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து மக்கள் வீதிகளில் இறங்குவதற்கு முன்னதாகவே – சர்வதேச நாயண நிதியத்திடம் செல்லுங்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தர்து. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமன்றி – பொருளாதார நிபுணர்கள் பலரும் கூட, இதனைத் தொடர்ந்து வலியுறுத்திவந்தார்கள்.

இருந்த போதிலும் ஜனாதிபதி அதனை ஏற்காமைக்கு அரசியல் ரீதியான காரணங்களே அடிப்படையாக இருந்தன. நாணய நிதியம் முன்வைக்கும் நிபந்தனைகள் அரசுக்கு சங்கடமான நிலையை ஏற்படுத்தும் என்பதுதான் அதற்குக் காரணம்.

வரிகளை அதிகரிப்பது மற்றும் மானியங்களை நிறுத்துவதன் மூலம் அரசாங்கம் தனது வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்பது நாணய நிதியம் முன்வைக்கும் முதலாவது நிபந்தனையாக இருக்கும். கடந்த திங்கட்கிழமை இரவு அதிரடியாக எரிபொருட்களினதும், கோதுமை மாவினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டது நாணய நிதியத்தை திருப்திப்படுத்தத்தான் என்பதை பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

செவ்வாய்கிழமை நாணய நிதிய அதிகாரிகளுடன் வாசிங்டனில் பேச்சுக்கள் ஆரமடபமாகவிருந்த பின்னணியிலேயே இவ்வாறு விலைகள் அதிகரிக்கப்பட்டன. எரிபொருட்கள் கோதுமை மா போன்றன உலக சந்தை விலையில்தான் இலங்கையில் விற்கப்பட வேண்டும். அவற்றுக்கு குறைந்த விலையில் அவற்றை விற்பதன்மூலம் வரக்கூடிய நட்டத்தை மாநியம் என்ற பெயரில் அரசு பொறுப்பேற்கக்கூடாது என்பது நாணய நிதியம் வலியுறுத்தும் விடயமாக இருந்துவருகின்றது. இந்தப் பின்னணியில்தான் இந்த இரண்டினதும் விலைகள் அதிரடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த இரண்டினதும் விலைகள் அதிகரிக்கப்படுவதன் பிரதிபலிப்பாக உணவுப் பொருட்களின் விலைகள், போக்குவரத்து கட்டணம் என்பனவும் உயர்ந்தது. ஏற்கனவே தாங்க முடியாத விலைவாசி உயர்வை எதிர்கொள்ளும் மக்கள் நள்ளிரவு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து செவ்வாய் அதிகாலை 1.00 மணிக்கே வீதிகளில் இறங்கினார்கள். எரிபொருள் விலை அதிகரிப்பது ஒருபுறம், அதனைப் பெறுவதற்கு மணிக்கணக்கில் வரிசையில் காத்திருப்பது என்பது மறுபுறம் மக்களை சீற்றமடையச் செய்ய அவர்கள் தாமாகவே நள்ளிரவைத் தாண்டி வீதிகளில் இறங்கினார்கள்.

ரம்புக்கனையில் மட்டுமன்றி – நாட்டின் 15 க்கும் அதிகமான நகரங்களில் இவ்வாறு நள்ளிரவிலேயே வீதியில் இறங்கிய மக்கள் போராடத் தொடங்கினார்கள். ரம்புக்கனையில் வீதிப்போக்குவரத்து மட்டுமன்றி – ரயில் போக்குவரத்தும் தடுக்கப்பட்டது. கட்டுப்பாட்டை ஏற்படுத்த கண்ணீர்ப்புகை, தடியடி, நீர்த்தாரை என்பனவற்றை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியபோதிலும், சீற்றமடைந்த மக்களை கலைக்க முடியாமல் போகவே இறுதியில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்த வேண்டியிருந்தது.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்ததை நடத்தும் போது – பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக முன்வைக்கப்படும் நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்வது தவிர்க்க முடியாததாக இருக்கும். இதற்காகத்தான் கடன் மீளளிப்பை இடைநிறுத்துவது என்ற அறிவிப்பை இரு வாரங்களுக்கு முன்னர் அரசாங்கம் வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பு – இலங்கையின் மீதான நற்பெயரை – நம்பகத் தன்மையை பாதிப்பதாக இருக்கும் என்றாலும் கூட, இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு நடவடிக்கையாகவே கருதப்படுகின்றது. நாணய நிதியத்திடம் செல்வதற்கான ஒரு முன்னோடி நடவடிக்கையாகவே இந்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது.

எரிபொருட்கள், கோதுமை மா, சமையல் எரிவாயு, மால்மா போன்றவற்றின் விலைகள் அடுத்த மாதங்களில் மேலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். அந்நியச்செலாவணி நெருக்கடியைத் தீர்ப்பதற்காக நாணய நிதியம் முன்வைக்கும் நிபந்தனைகளால் இதனைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்படும். நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, மானியங்களை நிறுத்துவது மற்றும் வெளிநாட்டு நாணயங்களை மிதக்கவிடுவது என்பன முக்கிய நிபந்தனைகளாக இருக்கும் என்பதால், அடுத்த மாதங்களில் மேலும் விலை உயர்வுகளையும் அதற்கு எதிரான போராட்டங்களையும் எதிர்பார்க்கலாம்.

அதேவேளையில் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக பெருந்தொயாக நாணயத்தாளை அச்சடித்து வெளியிடும் செயற்பாட்டை இலங்கை மத்திய வங்கி முன்னெடுக்கின்றது. இதுவும் கூட பணவீக்கம் தீவிரமாக அதிகரிப்பதற்கு காரணமாகலாம்.

இதனைவிட ரஸ்ய – உக்ரைன் போர் கூட எரிபொருட்கள், கோதுமை என்பவற்றுக்கான விலை உயர்வுக்கு காரணமாக அமையப்போகின்றது. ஆக, மே, ஜூன் மாதங்கள் இலங்கைக்கு கடினமானதாகவே இருக்கப்போகின்றது.

புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு வாசிங்டனில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள அதேவேளையில் – இந்தியாவும் இலங்கையின் கோரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கின்றது. இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கையின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தை வலியுறுத்தியிருக்கின்றார். இது இலங்கைக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக இருக்கும்.

இந்தியாவின் இந்த அணுகுமுறைக்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

முதலாவது – இலங்கையின் நிலையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள புதுடில்லி முற்படுகின்றது. இதன்மூலம் இலங்கையில் தமது செல்வாக்கை அதிகரிக்கலாம் என இந்தியா கருதலாம். அருகேயுள்ள நட்பு நாடு என்ற முறையில், இலங்கையின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதன்மூலமாக புதுடில்லியும் தனது பங்களிப்பை வழங்குகின்றது.

இரண்டாவதாக – சீனாவை நம்பித்தான் சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை தொடர்ச்சியாக புறக்கணித்துவந்தது. ஆனால், சீனாவிடமிருந்து எதிர்பார்த்த கடனுதவி கிடைக்காத நிலையில்தான் நாணய நிதியத்திடம் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் இலங்கைக்கு ஏற்பட்டது. இலங்கை மீண்டும் சீனாவிடம் செல்வதைத் தடுக்க வேண்டுமானால், நணய நிதியத்தின் பிடிக்குள் இலங்கையைக் கொண்டுவந்துவிட வேண்டும என்ற இந்தியாவின் உபாயமும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

இப்போது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது – அந்நியச் செலாவணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாணய நிதியம் உதவும். ஆனால், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வர ஐந்து – ஆறு மாதங்கள் தேவைப்படும். அதற்குள் எரிபொருட்கள் ஓரளவுக்கு கிடைத்தாலும் அவற்றின் விலைகள் பெருமளவுக்கு அதிகரிக்கும். மக்களுக்கு இதனை தாங்கிக்கொள்வதற்கான வழிகள் இருக்கப்போவதில்லை. எரிபொருட்கள் தாராளமாக வந்துவிட்டால் மக்கள் அமைதியாகிவிடுவார்கள் என அரசாங்கம் எதிர்பார்க்கலாம்.

ஆனால், இந்தப் பொருளாதாரப் பிரச்சினை இப்போது ஒரு அரசியல் பிரச்சினையாகிவிட்டது. ராஜபக்சக்கள் அகற்றப்பட வேண்டும் என்ற கோசம் பலமாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது. ராஜபக்களின் அரசியல் அவர்கள் செய்தாகச் சொல்லப்படும் ஊழல்கள் இப்போது மக்கள் பேசப்படும் விடயங்களாகிவிட்டன. போர் வெற்றியின் வீரர்களாக ராஜபக்சக்களைத் தூக்கிவைத்த சிங்கள மக்கள் இன்று குப்பைக்கூடைகளில் ராஜபக்சக்களின் படங்களை ஒட்டுகின்றார்கள். சவப்பெட்டிகளில் அவர்களுடைய படங்களைக் கொண்டு சென்று எரிக்கின்றார்கள்.

இந்த நிலையில் எரிபொருட்கள் தாராளமாகக் கிடைப்பதன்மூலமாக மட்டும் அவர்கள் அமைதியாவிடுவார்கள் என்பது எதிர்பார்க்கக்கூடியதாக இல்லை.

1,047 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *