நான் வில்லனாக இருந்த கணப்பொழுது

-மாதவி
மேசையில் ஒரு தனி வாழைப்பழம்

பாடசாலைவகுப்பறையாக,அசம்பிளி மண்டபமாக, மதிய உணவு உண்ணும் மேசையாக, பாடசாலை விளையாட்டு மைதானமாக, சைக்கிள் நிற்பாட்டும் இடமாக, இவை எதுவாக இருந்தாலும், முதல் எப்படி எங்கு இருந்தோமோ, எங்கு இருந்து மைதானத்தில் விளையாட்டு பார்த்தோமோ, எந்த இடத்தில் சையிக்கிள் நிறுத்தினோமோ, அந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் அமரமாட்டோம்.நிற்க மாட்டோம் நிறுத்த மாட்டோம்.இது எழுதாத உறுதிப்பத்திரம்.அந்த இடத்தை யாரும் எடுத்துவிட்டால் போதும், உறுதிப்பத்திரம் உறுமும்.

பாடசாலை வருட தவணை முடிந்து அடுத்த வகுப்பிற்கு போனாலும், வேறு வகுப்பறையானாலும் அதே இடம் கிடைத்துவிடும். காரணம் நல்லதோ கெட்டதோ எல்லோரும் தமது முதல் ஆண்டில் வகுப்பறையில் இருந்த நிலைகளையே அவர்களும் விரும்பி எடுப்பார்கள். பாடசாலை இறுதி நாட்களில் அவற்றை விட்டு விலகும் போது அவை யாவும் பல கதை பேசும்.இவை பல ஆண்டுகள் கற்ற பாடசாலை கதைகள். அது சரி என்று விடுங்கள்.

பலர் ஒரு வாரம் பாவிக்கும் ஒரு இடமாக இருந்தாலும், முதல் இருந்த இடமே அவர்களது என்றாகிவிடும்.ஒரு வாரம் விடுமுறைக்கு ஸ்பெயின் நாட்டுக்கு சென்றோம்.யேர்மனியில், 05°பாகை, அங்கோ 26°நடந்து செல்லும் தூரத்தில் கடல்.காலை, மதியம், இரவு உணவுகள் யாவும் ஹோட்டலில்.மூன்று மணி நேரம் நாம் விரும்பிய இடத்தில் இருந்து விரும்பியதை உண்ணலாம். யாவருக்கும் போதுமான உணவு உண்டு.

முதல் நாள் உண்பதற்கு சென்றோம், வேண்டிய உணவை தட்டில் போட்டுவிட்டு, இருக்கைகள் யாவற்றையும் உற்று நோக்கினோம், ஒரு இடம் தெரிந்தது. அதில் சென்று அமர்ந்தோம் . சௌகரியமான இடமாக இருந்தது. ஒரு போட்டியும் இன்றி தெரிவாகும் அரசியல் தலைவர்களின் மகிழ்ச்சிக்கு ஈடாக அது இருந்தது. ஏதோ முற்பிறப்பில் நாம் ஒன்றாக இருந்து உண்ட இடம் போல் அந்த இடம் ஈர்த்தது. மனிதர்கள் மட்டுமல்ல சில காட்சிகளை முதல் முறை கண்டாலும், எமக்கு முன்பு நன்கு பரீட்சையமான இடம் போல் இருக்கும். அதே போன்று ஒரு இடம் இப்போ எமதானது.

நான்காம் நாள் உண்பதற்கு வர அந்த இடத்தில் இரு கிழட்டு சோடிகள். இருந்து உணவு உண்டார்கள். (அவர்களுக்கு எமைவிட ஒருவயது குறைவாக இருக்கலாம், எமக்கு கோபம் வரும்போது, யாராக இருந்தாலும் கிழடுகள் என்றுதானே சாடுவோம் ) என்ன செய்வது உறுதிப்பத்திரம் அந்த இடத்திற்கு இல்லை. ஊர் என்றாலும் காசைக்கொடுத்து கள்ள உறுதி முடிக்கலாம். சரி என்றுபோட்டு பக்கத்தில் இருந்த கதிரையில் இருந்து உண்டோம்.
அன்று உணவு வழமையைவிட தூக்கலாக இருந்தது. மனைவி நல்லசாப்பாடு, பப்பாபழமும் ருசியாக இருக்கு, உங்களுக்கு பிடித்த (chips) சிப்சும் இருக்கு எடுத்து வந்து சாப்பிடுங்கோ என்றா. எனக்கு ( chips) சிப்சும், தெரியலை, பப்பாபழமோ, வாழைப்பழமோ ஒன்றும் புரியலை. விழுங்கிக்கொண்டு இருந்தேன்.

இடம் போன மனவருத்தம், நாவின் சுவையையும் கெடுத்துவிட்டது. எப்படியும்,இரவு உணவுநேரம் சற்று நேரத்திற்கு முன்பாக வந்து, முதல் இடம் பிடிக்கவேண்டும்.என்று எண்ணிக்கொண்டேன். எனது இடத்தில் இருந்து உண்டவர்களுக்கு எங்கட மொழி தெரியாவிட்டாலும், ஏதோ தன் மனுசிக்கு சொல்லிக்கொண்டே கிழவன் எழும்பி போனார்.

நான் நினைக்கிறேன் அவரும் இரவு உணவுக்கு முன்னுக்கு வரவேண்டும் என்றுதான் சொல்லியிருப்பார்.

கடலில் நல்லாக்குளித்துவிட்டு அந்தக் கடல் காற்றோடு கரையில் அமர்ந்துவிட்டு அறைக்கு வந்தாலும், எதனையுமே மனம் இலயித்ததாக இருக்கவில்லை.சுழண்டு சுழண்டு அந்த கிழடுகள் நினைவுதான். எங்கு பிறந்து எங்கே வந்து இப்படி அவர்களை எனக்கு ஒரு வில்லன் போல் ஆக்கிவிட்டது. அவர்களுக்கும் நான் ஒரு பயங்கரவில்லனாக இருப்பேன். அதில் எனக்கு சந்தேகம் இல்லை.என் நிறமும், மொட்டைத் தலையில் நாலு மயிரும் போதாதா.தனிய ஒப்பனை ஏதும் தேவையா.

இரவு உணவு நேரம் வந்தது, அவசரம் அவசரமாக ஓட்டமும் நடையுமாக அங்கு சென்றேன். வழமையாக நான் அமரும், எனது மேசையில் ஒரு தனி வாழைப்பழம் இருந்தது. கோவம் பொத்திக்கொண்டு வந்தது, என்ர இடத்தை பிடிக்க நாம் ஊரில் ரெயிலில், பஸ்களில், கைலேஞ்சி போடுவது போல் இங்கு ஒரு வாழைப்பழம் இடத்தை அடையாளப்படுத்தி அடைகாக்கிறது.

ஒன்றும் செய்ய ஏலாது. உணவை எடுத்துக்கொண்டு நான் நேற்று கிழடுகள் இருந்த இடத்தில் அமரலாம் என்று அவர்கள் இடத்தை நோக்கி வர அந்த இடத்தில் கிழவி இருக்கிது. மனுசன் சாப்பாடு போட்டுக்கொண்டு வருகிறார். கிழவன் என்மேசையைப் பிடிக்க வாழைப்பழம். தன் மேசையைப் பிடிக்க கிழவி. வில்லங்கமான வில்லன்கள் இவர்கள் என எண்ணிக்கொண்டு, நான் அந்த மேசையில் இருக்கும் ஒற்றை வாழைப்பழத்தை பார்க்கிறேன்.

கிழவன் அந்த பழத்தை எடுத்துவிட்டு என்னை அமருங்கள் என்று கைகாட்டினார்.ஏதோ ஒரு மொழியில் உங்களுக்குதான் இடம் பிடித்து வைத்தேன் என்றார். எமக்கு தேவை என்றால் எல்லாமொழியும் விளங்கும் என்று சின்ன வயதில் அப்பா சொன்னது ஞாபகம் வந்தது.

மனைவி வந்தா. அப்பாடா இண்டைக்கு மனுஷன் எந்தச் சாப்பாடு என்றாலும் நல்லது என்றுசாப்பிடுவார். ஆமிபிடிச்ச காணியை மயிலிட்டியில் இப்ப திருப்பி கொடுக்க,(2023)அதனை மீண்டும் பெற்ற சந்தோஷம் போல் என்ர மனுஷனும், சந்தோஷமா பழைய இடத்தில் இருக்கிறார், என மனதுக்குள் எண்ணிக்கொண்டாள்.

எனக்கு இடம் பிடித்து தந்தவர் சாப்பிட்டு முடிந்து எழும்பி போகிறார். அந்த அழகிய மனுசர்கள் இப்ப கிழடாக எனக்கு தெரியவில்லை. நாம் வாழ்வில் எமக்கு வில்லன் என நினைப்பவர்கள் பலருக்கு, நாம்தான் வில்லனாக இருந்திருக்கிறோம் என்ற உண்மை விளங்க காலக் கோடுகள்தான் தீர்ப்பு,வழங்குகின்றன. இடம் பிடிக்கிற குணம் சிறுவயதில்; தொடங்கியது, இப்பதான் சிறிது சிறிதாக, மறைகிறது. தனி வாழைப்பழம் தந்த பாடமாவும் இருக்கலாம்.
விடுமுறை முடிந்து யேர்மனிக்கு, விமானத்தில் வருகின்றேன். எனக்கு முன்னால் ஒரு ஆசனமும் இல்லை.காலை நீட்டி நல்லா இருக்கலாம், எந்த நேரமும் எவரையும் எழுப்பாது எழும்பி நடக்கலாம், எவ்வளவு வசதி.

அடுத்த பயணத்திற்கும் இந்த இருக்கை எனக்கே உரியது என உறுதிமுடிக்க மனசு திட்டம் போடுகிறது.

708 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *