காதல் திருவிழா


Dr.T.கோபிசங்கர்
யாழப்பாணம்

சாதகம் பொருந்தீட்டுதாம் அடுத்தது என்ன மாதிரி எண்டு புரோக்கர் கேக்க , “ தம்பி ஒருக்கா பொம்பிளையை பாக்கோணுமாம்“ எண்டு மாப்பிளையின்டை அம்மா சொன்னா. கலியாணம் எண்டு பேசத் தொடங்கின உடனயே பேசிறதை குறைச்ச தம்பி , நான் எப்ப அம்மாவைக் கேட்டனான் எண்டு யோசிக்க, “ அதுக்கென்ன வெள்ளிக்கிழமை நல்லூரில காலமை பூசையில பாப்பம் ‘ எண்டு முடிவாகிச்சுது. ரெண்டு பெண்டாண்டிக் காரரா இருந்தாலும் நல்லூரான் நல்லது செய்வான் எண்டு பெண்பார்க்கும் படலம் பொதுவா இங்க தான் நடக்கும் .

அப்ப கொழும்பில Majestic City மாதிரி யாழ்ப்பாணத்தில எல்லாப் பெடியளுக்கும் லேசியா பெட்டைகளை பாக்கிறதெண்டால் நல்லூர் தான். கொடியேத்தத்தில பாத்து மஞ்சத்தோட கேட்டு திருக்கலியாணத்தில ஒப்பேத்தின கதைகள் சில இருக்கு. பாக்காமல் காதல் , பாத்தவுடன் காதல், படித்ததோட காதல், பழகிப் பாத்து காதல், எண்ட மாதிரி நல்லூரில பாத்து ஆனால் பேசாமலே ஒப்பேறிற காதல் தான் கனக்க.

காலமை கோயிலுக்கு வாற பிள்ளைகள் அநேமா அம்மாமாரோட தான் வருவினம். குறூப்பா வாறதுகள் பின்னேரம் தான். குறூப்பா வாறதில ஒண்டைப் பாக்க வெளிக்கிட்டால் அதோட கூட வாறது எங்களைப் பத்தி ஏதாவது அள்ளி வைச்சு கவித்துப் போடும். இவளவை எல்லாம் சாணக்கியச் சகுனிகள், “ ஏற்கனவே இருக்காம் , இவன் எல்லாரையும் பாக்கிறவன்,போன நல்லூரில இன்னொண்டுக்குப் பின்னால திரிஞ்சவன்” எண்டு சொல்லி முளைக்காமலே கிள்ளிப் போடுங்கள்.

ஆனால் பெடியள் எல்லாம் ஆம்பிளை அன்னங்கள். “ மச்சான் உன்டை ஆளைக் கண்டனான் இண்டைக்கு சிவப்பு சாறியோட , சாமிக்குப் பின்னால தான் வாறா , அம்மாவைக் காணேல்லை ஆரோ ஒரு அக்கவோட தான் கண்டனான் “ எண்டு GPS location accurate தருவாங்கள். இதை எல்லாம் சொல்லீட்டு வெளிக்கிட முதல் “ என்டை ஆளைக் கண்டனியே” எண்டு ஏக்கத்தோட கேக்கிறவனுக்கு இல்லை எண்டாம, “ மச்சான் எப்பிடியும் சங்கீதக் கச்சேரிக்கு வருவா கண்டு பிடிக்கலாம்” எண்டு நம்பிக்கையை குடுத்திட்டுப் போவான் மற்றவன்.

என்னைப் பொறுத்தவரை நல்லூர்க்கந்தன் காதல் கந்தன் . நீளமும் அகலமுமான வீதி, இடது பக்கம் ஆம்பிளைகள் வலது பக்கம் பொம்பிளைகள் எண்டு பாக்கிறதுக்கு சுகமான segregation, திரும்பிப் பாத்து யாரிட்டையும் மாட்டுப்படாம நேராவே பாக்க வசதியா சாமியைப் பாத்து நடக்கிற வழமை , அடிக்கடி சாமியை நிப்பாட்டி வைக்கிற மண்டபப்படி, சாமியே நிண்டு கேக்கிற பத்மநாதனின்டை நாதஸ்வரம் எண்டு கண்ணோடு கண்ணை நோக்க எல்லா வசதியும் முருகன் செய்து தருவான் .

நல்லூருக்க ஒரு பிள்ளையப் பாத்து ஒப்பேத்திறது எண்டால் அது கொஞ்சம் பெரிய வேலை. அவ்வளவு பெட்டைகளுக்குள்ளையும் ஆளைப் பாத்து select பண்ணிறதே கஸ்டம். இண்டைக்குப் பாத்து இதுதான் எண்டு முடிவெடுத்துட்டுப் போக அடுத்த நாள் என்னுமொண்டு நல்லதாத் தெரியும் இல்லாட்டி முதல் நாள் பாத்தது ஏற்கனவே book பண்ணீட்டாங்களாம் எண்டு ஏக்கங்கள் ஏமாற்றங்களாகும். இதை எல்லாம் தாண்டி சரியானதைக் கண்டுபிடிச்சு பிறகு எந்த barrierஆல உள்ள வாறது, எங்க சைக்கிள் விடிறது, எங்க செருப்பு விடிறது, எத்தினை மணிப்பூசைக்கு வாறது, ஆரோட வாறது , உள்வீதி மட்டும் சுத்துமா வெளிவீதியும் சுத்துமா திரும்பிப் போகேக்க எங்க கச்சான் வாங்கிறது , இசைக்கச்சேரி கேட்டிட்டுப் போகுமா கேக்காமப் போகுமா எண்டு நிறைய intelligence report எல்லாம் எடுத்திட்டுத் தான் வேலை தொடங்கிறது.

முதல்ல கொஞ்சம் கொஞ்சமா பின்னால போய், அதுகும் அவைக்குத் தெரியாமப் போய், அதுக்குப் பிறகு கொஞ்சம் தெரியிற மாதிரிப் போக வெளிக்கிட, பிள்ளைக்கு தெரியவர முதல் அம்மா கண்டுபிடிச்சு முறைச்சுப் பாக்க பல காதல் மொட்டுக்கள் கண்ணகி அம்மாக்களின் கண் பார்வையிலேயே கருகிப்போகும். அதோட நாங்கள் பாக்கிறதை கண்டுபிடிச்சு எங்களைத் திரும்பிப் பாக்காமல் அம்மாக்களிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு காணாமல் போன காதல்களும் உண்டு . இதையும் தாண்டி புனிதமாகிறது சில loveவுகள் தான். பின்னால வாறதைக் கண்டு பாத்தும் பாக்கமல் நிக்கிறது தான் முதலாவது சமிக்கை, இதுவே நம்பிக்கையை ஒளியைத் தரும் . அவளவை ஒரு நாளும் நிமிந்தோ திரும்பியோ பாக்கமாட்டினம் ஆனாலும் நாங்கள் பின்னால வாறது தெரிஞ்சு கச்சான் கடை, செருப்புக் கடையில கொஞ்சம் கூட நேரம் மினக்கிடிறது எங்களுக்காகவே இருக்கும், இது நம்பிக்கையை தும்பிக்கை ஆக்கும்.

முதல்ல அம்மாவோட வந்தவை அம்மாவை விட்டிட்டு பக்கத்து வீட்டு அக்காவோட வாறது நல்ல சமிக்கை. ஏற்கனவே எங்களைப்பத்தி சொல்லப்பட்டிருக்கும் அக்காவுக்கு. வாற அக்கா வடிவா ஏற இறங்க எங்களைப் பாத்து குடுக்கிற reportல தான் முடிவு தங்கி இருக்கும். கடைசீல அக்காவும் வெட்டப்பட்டு ஒரு கசநைனெ ஓட வருவினம் , இப்ப முக்கியம் அந்த friendக்கு நீங்கள் நல்லவராகத் தெரியிறது. அந்தப்பக்கம் அம்மா அக்காவாகி, அக்கா friendஆகேக்க நாங்களும் அந்த பரிணாம வளரச்சிக்கு ஏத்த மாதிரி பலவாகத் தொடங்கி , அக்காவோட வரேக்க ரெண்டாகி, friendஓட வரேக்க தனியா இருக்க வேண்டும் இல்லாட்டி சில “ நல்ல “ நண்பர்களினால் அவளவையின்டை friends reject பண்ணிப் போடுவினம் .

ஆயிரம் பேர் இருந்தாலும் பாத்தோண்ணயே இது தான் எனக்கு எண்டு பெடியள் முடிவெடுத்திடுவாங்கள் ஆனால், பெட்டைகள் அப்பிடி இல்லை.முக்கி முக்கி six pack வைச்சவனையும், பொக்கற்றுக்க ஆயிரம் ரூபா வைச்சிருந்தவனையும், வடக்கு வீதீல சாமி வரேக்க மடிச்ச சட்டைக்கையோட நான் medical student இல்லாட்டி கம்பஸ் காரன் எண்டு நிக்கிறவனையும் எல்லாம் பாக்காம, நல்லூர் பக்தனா வெறும் மேலோட வாற single packகாரனுக்கு எப்பிடி ஓம் எண்டு சொல்லுறாளவை எண்டிறது முருகனுக்குத் தான் வெளிச்சம்.

என்ன தான் தலைகீழா நிண்டாலும் பல காதல் பயணங்கள் சண்டேஸ்வரர் தேங்காயோட சிதறிப் போக, ஆனாலும் கந்தன் கைவிட மாட்டான் எண்டு அடுத்த முறையும் முருகனிட்டை வாறவை தான் கன பேர்.

இன்று ஆறாம் நாள் திருவிழா.

Dr.T. கோபிசங்கர்
யாழப்பாணம்

477 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *