ஏற்றுமதி

ஏற்றுமதி

“சேர் அடுத்த patientஐ வரச்சொல்லவோ எண்டு கேட்டிட்டு, 13 நம்பர் வாங்கோ ” எண்டு கிளினிக்கில நிக்கிற பிள்ளை கூப்பிட ரெண்டு பேர் வந்திச்சினம்.

என்ன பிரச்சினை ?
“ நாரி நோகுது “

எத்தினை நாளா?
“ கொஞ்ச நாளா”

நாரி மட்டும் தானா இல்லாட்டி வேற எங்கேயும் நோகுதா?
“ இல்லை சில நேரம் கழுத்தும் நோகும், போன கிழமை முழங்காலும் நொந்தது” .

கால் விறைக்குதா?
ஓம் அதோட தலையும் விறைக்குது.

சோதிச்சுப்பாத்து ஒண்டும் இல்லை எண்டு சொல்லீட்டு,பதினெட்டு வயசு தானே படிக்கிறீங்களா எண்டு கேக்க,
“ இல்லை “

வேலை செய்யிறீங்களா?
“ இல்லை “

அப்ப என்ன செய்யிறீங்க
“ சும்மா தான் இருக்கிறன் “
………..
அப்ப குறிக்கிட்டது ஒரு நாப்பது வயது … “ இல்லை அவ வெளீல போகப்போறா, கலியாணம் முற்றாகீட்டுது, அதுதான் போக முதல் எல்லாம் ஒருக்காப் பாத்தால் நல்லம் எண்டு வந்தனாங்கள், ஒருக்கா எல்லா scan உம் பண்ணிப் பாக்கலாமா” எண்டு கேட்டா , vehicle full service போட்டுத்தாறீங்களா எண்ட மாதிரி.

அப்ப மகளுக்கு நோ எல்லாம் இல்லையா ?

“ இல்லை எனக்குத் தான் இடைக்கிடை நாரி நோகிறது. இவ இப்ப வெளீல போனாப் பிறகு தேவை எண்டு இப்ப மேக்கப், கேக் ஐசிங், தையல் எல்லாம் படிக்கிறா , ஒரு நாள் நாரி நோகுது எண்டு சொன்னவள் அது தான் போக முதல் எல்லாத்தையும் காட்டீட்டால் நல்லம் எண்டு வந்தனாங்கள். அவையும் சொன்னவை வரமுதல் உங்கயே எல்லாத்தையும் காட்டீட்டு வரச்சொல்லி, ஒரு பிரச்சினையும் இல்லைத் தானே …..” எண்டு அம்மா சொன்னதுக்கு நான் தலையை ஆட்ட மேக்கப்பை தனக்கும், அம்மாக்கும் போட்டுப் பழகிக் கொண்டிருந்த மகள் சந்தோசமா வெளிக்கிட்டுப் போனா.

எல்லா patient உம் பாத்து முடிய , “சேர் எனக்கு கலியாணம்” எண்டு கிளினிக்கில வேலை செய்யிற பிள்ளை வந்து சொல்லிச்சுது.

எப்ப ?
வாற மாசம்

எங்க ?
இந்தியாவில

ஏன் அங்க?
அவருக்கு இங்க வரேலாதாம்

போய் எவ்வளவு காலம்?
கொஞ்சக் காலம்

எந்த இடம்?
….

விசாரிச்சதோ ?

“தூரத்துச் சொந்தக்காருக்குப் பக்கத்துவீட்டுக் காரருக்க தெரிஞ்ச ஆக்களாம், அவரோட நேர கதைச்சதாம் , வயசு கூடத்தான் ஆனாலும் எப்பிடியும் எனக்கு வெளீல போனாக்காணும், நான் இண்டையோட வேலையால நிக்கப் போறன்” எண்டு சொன்ன பிள்ளைக்கு வாழ்த்துச் சொல்லி எனக்கு வரேலாது இந்தாரும் என்டை gift எண்டு குடுத்த envelopeஐ வாங்கிக் கொண்டு சந்தோசமா வெளிக்கிட்டிச்சிது அந்தப் பிள்ளை.

அதுகள் போனாப்பிறகும் இடைக்கிடை இப்பிடிக் கன வாகனங்கள் service க்கு வந்து போய்க்கொண்டிருந்திச்சுது ஒவ்வொரு மாசமும்.

ரெண்டு மாசம் கழிச்சு இந்தியாவுக்கு கலியாணத்துக்குப் போன பிள்ளை திருப்பியும் வேலைக்கு வந்திச்சுது.

“ஆ எப்பிடி இருக்கிறீர், கலியாணம் எப்பிடி, அவர் எங்க “? எண்டு ஆக்களுக்கு முன்னால கேட்ட கேள்விக்கு விடை உடன வரேல்லை, ஆனாலும் பிறகு வந்து , “ Sir இதுதான் Photo எல்லாம் வடிவா நடந்தது. போய் sponsorக்கு அலுவல் பாக்கிறராராம் அநேமா மூண்டு மாசத்தில கூப்பிடுவன் எண்டவர் “ எண்டு நம்பிக்கையோட சொலலீட்டுப் போச்சுது.

நாலு மாசம் கழிச்சு
“என்ன மாதிரி போற அலுவல் எண்டு கேக்க” , “ அவருக்கு இப்ப தான் பாஸ்போட் வந்ததாம் இனித்தான் கூப்பிடுவாராம் “ . அப்ப இந்தியாவுக்கு கள்ளப் பாஸ்போட்டிலயோ வந்தவர் எண்ட கேள்விக்கு அந்தப் பிள்ளைக்கு விடை தெரியேல்லை.

ஆறு மாசம் கழிச்சு; “ Sir ஏதும் நல்ல வேலை இருந்தாச் சொல்லுங்கோ சம்பளம் இங்க காணாது , கலியாண வீட்டுக் கடனையே கட்டேலாமல் நிக்கிறம் அதோட போறதும் இன்னும் சரிவரேல்லை ” எண்டிச்சுது அந்தப் பிள்ளை. அதுக்கு மேல ஒண்டும் கேக்கேல்லை.

ஒரு வருசத்தால்
“ Sir அது சரிவரேல்லை இது அக்கான்டை மாமான்டை சம்மந்த பகுதிக்காரர் கொண்டந்தவராம் அடுத்த மாசம் இந்தியாவுக்குப் போய் அப்பிடியே போயிடுவன்” எண்டு இந்த முறை நம்பிக்கையா good bye எண்டு அதே பிள்ளை சொல்லீட்டுப் போச்சுது, பதியப்படாமல் நடந்த முதல் கலியாணம் முறிக்காமலே முறிஞ்சது ஒருத்தருக்கும் தெரியாத மட்டும் நல்லம் எண்டு நெச்சபடி நான் வீட்டை வெளிக்கிட்டன்.

இந்த முறை கலியாணத்துக்குப் போனது ஒரு மாசத்திலயே திரும்பியும் வேலைக்கு வந்திட்டுது. நான் ஒண்டும் கேக்கேல்லை. ரெண்டு பேருமே பேசாம வேலையைப் பாத்தம்.

போன மாசம்;
ரெண்டு தரம் கலியாணம் rehearsalபாத்த பிள்ளை வந்து, “ Sir நான் கனடா போப்போறன். பாங்கில கொஞ்சம் காசு காட்டினா கனடா போகலாமாம். ஏற்கனவே கொஞ்சம் கட்டீட்டன் , மற்ற எல்லாம் ரெடி , ஒரு கோடி காசு ஒரு மாசம் Bank இல இருந்தாச் சரியாம், வீட்டை அடகு வைக்க அம்மா பாக்கிறா போறது நல்லது தானே எண்டு சொன்னதுக்கு என்ன பதில் சொல்லலாம் எண்டு யோசிக்கத் தொடங்கினன். யோசிச்சு முடிக்க முதல் ஏற்றுமதிக்காய் வளத்த இன்னொரு நாட்டுக்கோழி நொண்டாத காலில நோவெண்டு சொல்லிக் கொண்டு வந்து என்னை யோசிக்க விடாமக் காப்பாத்திச்சுது. இருக்கிற முழங்காலில இல்லாத நோவுக்கு வைத்தியம் பாத்திட்டு வெளிக்கிட்
“ வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதிக்கு இருந்த தடை நீக்கம் “ எண்டு அரசாங்கம் அறிவித்தது எண்டு லோசனின் செய்திகள் தயையங்கம் சொல்ல, இது எந்த ஏற்றுமதியை எண்டு யோசிச்சபடி நடந்தன்.

Dr.T. கோபிசங்கர்
யாழப்பாணம்.

633 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *