வெற்றிமணி பத்திரிகையின் பங்குனி மாத இதழின் கௌர ஆசிரியராக கௌரவம் பெறும் பன்முகக்கலைஞர் கலாசாதனா நிறுவனர் – நோர்வே. கவிதா லட்சுமி அவர்களின் படைப்பாற்றல் ஒரு கண்னோட்டம்.


பேராசிரியர் அ.ராமசாமி

எப்போதும் பெண்களின் ஊஞ்சலாட்டம் இன்னொருவரின் உதவியோடு நடப்பதாகவே நமது மனம் பதிவுசெய்து வைத்திருக்கிறது. இன்னொருவரின் உதவியோடு ஊஞ்சலாடும்போதே தான் தலைகீழாக விழுந்துவிடும் சாத்தியங்கள் இருப்பதாக நினைத்துப் பதற்றமும் அச்சமும் கலந்த பெண் சித்திரமே பலருக்கும் மனக்கண்ணில் தோன்றும்.
ஆனால் கவிதாலட்சுமியின் கவிதைக்குள் படிமமாக்கப்படும் ஊஞ்சலில், ‘ஒரு பெண் அவளே அமர்ந்து, அவளே பெருவிரலால் உந்தி உந்தி ஆட்டிக்கொண்டு வேகம் ஊட்டுகிறாள். அந்த வேகம் சாதாரணமான ஊஞ்சலாட்டத்தின் வேகம் அல்ல. மரண பயம் தரும் வேகம். உடலின் ஆடையும் தலையின் கூந்தலும் அலைந்து திரியும் சித்திரமாக படிமம் விரிக்கப்பட்டிருக்கிறது. ஊஞ்சலாட்டத்தின் உச்ச நிலையில் ஒரு பெண்ணின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்? என்று நினைத்துப் பாருங்கள். தன்னை நேசிக்கும் அல்லது அரவணைத்துக் கொள்ளும் ஆணொருவன் வந்து ஊஞ்சலின் கயிறுகளை இழுத்துப் பிடித்து நிலைப்படுத்திக் காப்பாற்ற மாட்டானா? என்று ஏங்கும். அந்த ஏக்கம் எப்போதும் தன்னைத் தாங்கிக் கொள்ள ஆணைச் சார்ந்திருக்கும் பெண்ணின் ஏக்கம்.
ஆனால் இந்தக் கவிதைக்குள் இருக்கும் பெண் அப்படிச் சார்ந்திருக்கும் மனநிலையை முற்றிலும் நிராகரிப்பவள். ஊஞ்சலின் வேகமும் பறத்தலின் கிறக்கமும் மனத்திற்குள் உண்டாக்கும் அதிர்வுகளை ரசிப்பவள். அவளுடைய இலக்கு பாதுகாப்பாக இருப்பதல்ல் பறத்தலின் உச்சநிலையை அவாவி நிற்பது.

கவிஞர் மு.மேத்தா

கவிதாவின் கவிதைகளில் – சந்தங்களின் ஓசை நயம் கேட்பதில்லை. சொந்தங்களி;ன் உயிர் ஓலம் கேட்கிறது. கற்பனைகளின் அலங்காரம் காணப்படவில்லை. கவலைகளின் அஸ்திவாரம் காட்டப்படுகிறது. எழுதப்பட்ட கவிதைகள் அல்ல இவை இதயத்திலிருந்து எழுந்து வந்த கவிதைகள்.

கவிதாவின் கவிதைகள் ஒவ்வொரு மனதிலும் உட்புகுந்து கலகம் விளவிக்கும் கவிதைகளாகும். ஆற்றாமையும் இயலாமையும் தோற்றுவித்த அனுபவங்களின் வார்ப்படம் இது. சில சமயங்களில் கண்ணன் கைப் புல்லாங்குழலாகவும். பல சமயங்களில் களத்தில் நிற்கும் வீரனின் கைத் துப்பாக்கியாகவும் கவிதாவின் எழுதுகோல் அவதாரம் எடுத்திருக்கிறது. அரிதாரம் பூசாத அவதாரம் இது!
புலம் பெயர்ந்த ஒரு பெண்ணின் கவிதைகள் நிலம் பெயர்ந்து நம் நெஞ்சில் நுழைகின்றன. உள்ளத்தின் நாற்காலியில் உரிமையோடு அமர்கின்றன.

பேராசிரியர் மௌனகுரு

துணிந்து கனகியை நாயகியாக்கி மேடையிற் கொணர்ந்த கவிதா லக்சுமிமீது நமக்கு ஓர் மதிப்புண்டாயிற்று. நாட்டிய நாடகங்களின் கருப்பொருளும் அவர் அதனை நிகழ்த்திய விதமும் அவரை ஏனைய பரத நாட்டிய ஆசிரியர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியது.

முகநூலில், புதுமைபித்தனின் கதையை அடிப்படையாக வைத்து அவர் அண்மையில் தயாரித்த சிற்பியின் நரகம் பார்த்தேன். பிரமாதமான ஒளியமைப்பு.அருமையான நடன் அமைப்பு.

தாசி கனகியை மேடையிற் கொணர்ந்தவர். தாஸி பரவை நாச்சியைக் கொணர்கிறார். தமிழர் நடன மரபில் நடனம் வளர்த்த்வர்கள் இந்த தேவதாஸி மரபினர்தாம். இவர்களையும் இவர்கள் நடனத்தையும் விட்டு விட்டு தமிழர் நடன மரபினை எழுதிவிட முடியாது. இவர்களை மீண்டும் கொணர்கிறார் கவிதா லக்சுமி.

இதற்கு ஓர் புலமையும், துணிவும் வேண்டும். இவற்றைத் தொகுத்துப் பார்க்கையில் நம் மத்தியில் இருக்கும் நடன மணிகளுள் சற்று வித்தியாசமாகக் கவிதா லக்சுமி தெரிகிறார்.

எழுத்தாளர் ரூபன் சிவராஜா:

கூர்மை, செறிவு, அழகியல், பல்பரிமாணம் கொண்ட கவிதைகள் அவருடையவை. இன்னும் சொல்வதானால் தனிமனித மற்றும் சமூக வாழ்வியக்கத்தின் பல்வேறு அம்சங்களையும் உள்வாங்கிய வாழ்வனுபவப் பிரதிபலிப்புகளை அவருடைய கவிதைகளிற் தரிசிக்கலாம். நடனம் தெரிந்தவர்களுக்கு உடல் நெகிழ்வானதும் இலகுவாக வளையக்கூடியதும் என்பது ஆச்சரியமில்லை. ஆனால் மொழியும் அவர்களுக்கு மிக லாவகமாக வளைந்து கொடுக்கும் அல்லது மொழியை லாவகமாக வளைக்கின்ற பக்குவமும் கலைத்துவ ஆற்றலும் அவர்களுக்கு உண்டு.

காத்திரமாகவும் கூர்மையாகவும் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவுமென பேசுபொருளுக்கும் இலக்கிய வடிவத்தெரிவுக்குமேற்ற வகையில் மொழியைக் கையாள்வதிலும் கவிதாவின் ஆளுமையை அவரது எழுத்துகளில் தரிசிக்கலாம்.

கவிதாவின் கவிதைகள், கட்டுரைகள், நடன நாடகப் படைப்புகள் கருத்தியல் ரீதியாகப் பல கட்டுடைப்புகளைச் செய்துள்ளன. சமூகம் கட்டமைத்து வைத்திருக்கின்ற ஒழுங்குகளை மீறுவது, அவற்றின் மறுபக்கத்தைப் பார்ப்பது – அவற்றின் மீது கேள்விகளை எழுப்புவது – அதிகாரம் சார்ந்த ஒடுக்குமுறை சார்ந்த அதன் கூறுகளை, கேள்விக்குட்படுத்துவது – பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றை கட்டுடைப்பது என்பதாக இவரது படைப்புகளின் கருத்தியல் சார்ந்த விடயங்களை மதிப்பிடலாம்.

நோர்வேஜிய மற்றும் உலக இலக்கியங்கள் மீதான வாசிப்பும் மொழிபெயர்ப்பு அனுபவங்களும் இன்னுமொரு வகையாக அவரின் எழுத்துளுக்கு செழுமைக்கு சேர்க்கின்றன.

பேராசிரியர் சண்முகரட்ணம்:

அழகும் அர்த்தங்களும் ததும்பிய அசையும் கவிதைகளும் ஞானரதம் நடன நாடகமும்!
நான் முன்னர் விரும்பி வாசித்த புதுக்கவிதைகள் பாடல்களாக இசையமைக்கப்பட்டு பரதநாட்டியத்தினூடாக உயிர்ப்புடன் அசைவதைக் காண்பதும் கேட்பதும் எனக்கு ஒரு புதிய அனுபவமே. இந்தக் கவிதைகள் பல்வேறு உணர்வுகளையும் செய்திகளையும் தருவன. இவற்றின் உள்ளடக்கங்கள் இயற்கை, சமூக ஒடுக்குமுறை, சாதிய எதிர்ப்பு, விடுதலை, போராட்டம், பெண்ணுரிமை, காதல், மனித நேயம், துணிவு, தனிமை, எனப் பல அம்சங்களைக் கொண்டன. இத்தகைய கருப்பொருட்களைக் கொண்ட புதுக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்திருப்பது வரவேற்கப்படவேண்டியது. இவைதரும் செய்திகளை அழகியல்பூர்வமாக வடிவமைக்க பரதநாட்டிய அசைவுகளைப் பயன்படுத்த முடியுமமென்பதையும் செய்து காட்டியிருக்கின்றனர் கவிதா லட்சுமி.

‘ஞானரதம்’ நடன நாடகம், கனதியான பொறுப்புக்களைக் கொண்ட ஒரு திட்டத்தின் நிறைவேற்றம் எனக் கூறலாம். பாரதியின் ஞானரதத்தை நடன நாடகமாகப் பிரதியாக்குவதிலிருந்து அதற்குரிய இசையமைப்பு, நடனங்களின் தேர்வு, நடிகர்களின் பயிற்சி, மேடையமைப்பு எல்லாவற்றையுமே சிறப்பாக ஒருங்கிணைத்து அரங்கேற்றியிருப்பது ஒரு பெருமுயற்சியின் வெற்றி என்பது தெளிவு.

கலாநிதி. சர்வேந்திரா தர்மலிங்கம்:

பேராசிரியர் சிவத்தம்பி கூறுவார் «ஆசிரியர் என்பது வேறு. கலைஞர் என்பது வேறு. எம்மிடையே ஆசிரியர்கள் இருக்கும் அளவுக்கு கலைஞர்கள் இல்லை» என்று. கவிதா நல்லதொரு பரத நாட்டிய ஆசிரியராகவும் கலைஞராகவும் இருக்கிறார். எனது அவதானிப்பில் பரதம் பயின்றவர்களில் பரதக்கலையை சமூகத்துடன் இணைத்து ஆய்வுகளைச் செய்பவர்களும் குறைவு. கவிதா இதனைச் செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவர் என்பதனை எழுத்துகளும் சுட்டி நிற்கின்றன.

கவிஞர் இளவாலை விஜேந்திரன்

எமக்கெல்லாம் சூர்ப்பணகை என்றதும் மனதிற் தோன்றும் படிமம் எதிர்மறையானது. பல தமிழ்ப்படங்களில் வரும் ஹவில்லிஹகளைவிட மோசமானது என்றும் கூறலாம். அதேவேளை ராமன் புனிதனாகவும் ஏகபத்தினி விரதனாயும் உறைந்துவிட்ட எண்ணக் கோலங்கள் இவ்வரங்கில் முதன்முறையாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.
ஓர் அரங்கில், நாம் முன்னரே அறிந்த விடயங்களை அப்படியே படைப்பதுதான் நடன நிகழ்வுகளாய் நாம் பொதுவாகக் காண்பது. அதிலிருந்து விலகி, சொல்லப்பட்ட விடயங்களைக் கேள்விக்குள்ளாக்குவது எல்லோரும் செய்யும் ஒரு செயலல்ல. கவிதாவிடம் இருக்கும் இலக்கிய அறிவும் தேடலும் ஏற்கனவே உள்ளதை அப்படியே படைப்பது சரியல்ல எனச் சொல்கின்றன. பொதுவாகப் பரதநாட்டிய நிகழ்வுகள் சொல்லப்பட்ட விடயங்களை அப்படியே பிசிறின்றிச் சொல்வதுஃ செய்வது என்ற ஒரே தடத்திற் பயணிக்கையில் சிலராவது இப்படி மாற்றி யோசிப்பது ரசிகர்களுக்குப் பயன்தருவது.

291 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *