கனடா தமிழர் தகவல்| 28வது ஆண்டு விருது விழாவும் இளமுகிழ்ச் சுவடு| வெளியீடும்
கனடாவின் மூத்த தமிழ் இதழான தமிழர் தகவலின் 28வது ஆண்டு மலர் ‘இளமுகிழ்ச் சுவடு| வெளியீடும், 28வது ஆண்டு ‘தமிழர் தகவல்| விருது விழாவும் ரொறன்ரோ நகரசபை அங்கத்தவர் சபா பீடத்தில் நடைபெற்றது. இலங்கையின் அதிமூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரும் ஐம்பதாண்டு களுக்கு மேலாக ஊடகப்பணியாற்றி வருபவருமான திரு எஸ். திருச்செல்வம் இதன் முதன்மை ஆசிரியர். கலைஞரும் ஒலிபரப்பாளருமான திரு. கந்தசாமி கங்காதரன் விழாவைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.
செல்வி. ஐஸ்வரியா சந்துருவின் தமிழ் வாழ்த்தையடுத்து சிவசிறி குருக்கள் ஆசியுரை வழங்கினார். தமிழர் தகவலின் உதவி ஆசிரியர்களில் ஒருவரான திரு. குயின்ரஸ் துரைசிங்கம் தலைமையில் இளமுகிழ்ச் சுவடு வெளியீடு இடம்பெற்றது. ஒன்ராறியோ சட்டசபை உறுப்பினர்கள் லோகன் கணபதி, விஜே தணிகாசலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மூத்த ஒலிபரப்பாளர் பி. விக்னேஸ்வரன் வெளியீட்டுரை நிகழ்த்தினார். உலகிலேயே தமிழில் வெளிவரும் ஒரேயொரு தகவல் இதழ் தமிழர் தகவல் என்றும் இதன் ஆண்டு மலர்கள் வரலாற்று ஆவணங்களாகத் திகழ்கின்றன என்றும் திரு. விக்னேஸ்வரன் தமது உரையில் தெரிவித்தார்.
ஆண்டு மலரின் முதற் பிரதிகள் வயதில் மிக இளையவர்களான கட்டுரை யாளர்கள் மார்க் கெவின் தெய்வேந்திரம், அக்சயன் ஜெயபாலசிங்கம் ஆகி யோருக்கு தகவலின் உதவி ஆசிரியர் சசி பத்மநாதனால் வழங்கப்பட்டது. திரு. நீதன் சண் தலைமையில் விருது விழா இடம்பெற்றது. ஒன்ராறியோ சட்டசபை உறுப்பினர் சூஸ் மொரிசன் பிரதம விருந்தினராகப் பங்குபற்றி உரையாற்றினார். பின்வரும் எட்டுச் சாதனையாளர்கள் விழாவில் ‘தமிழர் தகவல்| விருதுடன் தங்கப்பதக்கம் சூட்டி மதிப்பளிக்கப்பட்டனர். பேராசிரியர் கலாநிதி சு. பசுபதி (வாழ்நாள் சாதனையாளர் விருது), சட்டத்தரணி நாதன் சிறீதரன் (பன்முகப் பணிக்கான சிறப்பு விருது), திரு. எஸ். பி. கனகசபாபதி (முன்னணிச் சமூகப் பணியாளர் விருது), கவிஞர் அ, புகாரி
(இலக்கிய விருது), திரு. குமார் புனிதவேல் (சமூக நல்வாழ்வு மேம்பாட்டாளர் விருது), திருமதி. லசந்தி ராஜ்குமார் (நுண்கலை வித்தகர் விருது), திரு. சி. சிறீமுருகன் (கனடிய தமிழ் திரைக்கலை முன்னோடி விருது), செல்வி. ஸ்ருதி பாலமுரளி (இளம் சாதனையாளர் விருது). பேராசிரியர் சந்திரகாந்தன், சட்டத்தரணி யசோ சின்னத்துரை, செல்வி அனோஜினி குமாரதாசன், சங்கீத் குயின்ரஸ், வதனன் ஜெகதீசன், வினிசா அருளானந்தம் ஆகியோர் விருதாளர்களை அறிமுகம் செய்து உரையாற்றினர்.
விருது பெற்றவர்கள் சார்பில் பேராசிரியர் திரு. பசுபதியும், திரு. எஸ். பி. கனகசபாபதியும் முறையே ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்றியுரை நிகழ்த் தினர். செல்வி ஸ்ருதி பாலமுரளி புல்லாங்குழல் இசை வழியாக கனடிய தேசிய கீதம் இசைத்தார்.
தமிழர் சமூகத்தில் முதன்முறையாக (1992) விருது வழங்குவதை ஆரம்பித்து வைத்த பெருமை தமிழர் தகவலுக்குரியது. கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, ஆஸ்திரேலியா, பப்புவா நியுகினியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 263 சாதனையாளர்கள் இதுவரை தமிழர் தகவல் விருதுகளைப் பெற்றது குறிப்பிடப்பட வேண்டியது.
யேர்மனியில் 1999 ம் ஆண்டு இற்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் இந்தச் சிறப்பான தமிழர்தகவல் விருதினைப் பெற்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
687 total views, 2 views today