தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்க புதிய யுக்திகள்

கடந்த 16 ஆம் திகதிதான் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரபரப்பை ஏறபடுத்திய அந்த நிகழ்வு இடம்பெற்றது.

அன்று பொசான் பௌர்ணமி தினம்!

தென்பகுதியிலிருந்து 3 பஸ்களில் அழைத்துவரப்பட்ட சிங்களவர்களும், பிக்குகளும் நீராவியடிப் பிள்ளையார் கோவில் முன்றலில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

கொழும்பு, அநுராதபுரம், வெலிஓயா பகுதியிலிருந்து மூன்று பஸ்களில் அழைத்துவரப்பட்ட சிங்களவர்களும், பிக்குகளுமே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படையினரின் ஆதரவுடன் பிக்குகளால் கொண்டு சென்று இறக்கப்பட்ட இவர்கள் ஆப்பாட்டத்தில் ஈடுபட்டது அந்தப் பகுதியில் மீண்டும் அச்ச நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ் மக்களுடைய நிலங்களை ஆக்கிரமிப்பதில் அவர்கள் உறுதியுடன் இருப்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்தியிருக்கின்றது.

நீராவியடிப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் புத்தர் சிலை கட்டப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், தமது உரிமைக் கோரிக்கைக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை பிக்குகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தப் பின்னணியல் வடக்கில் சிங்கள மயமாககல் இப்போது எப்படி நடைபெறுகின்றது என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

அரசாங்கம் மட்டுமன்றி, அரசாங்க நிர்வாக இயந்திரமும் கூட பௌத்த – சிங்கள மயமாக்கல் என்ற நிகழ்ச்சி நிரலுடன்தான் செயற்படுகின்றது. 1947 இலிருந்து நடைபெறும் சம்பவங்களே இதற்குச் சான்று. டி.எஸ்.சேனநாயக்கவினால் 48 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா குடியேற்றத் திட்டத்திலிருந்து தற்போது முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் பகுதியில் நடைபெறும் சம்பவங்கள் வரையில் அனைத்துமே ஒரே இலக்கைக் கொண்டவைதான். அதாவது, சிங்கள பௌத்த மயமாக்கல். தமிழ் மக்களுக்கான தாயகக் கோட்பாட்டை இல்லாதொழித்தல் என்பதுதான் இந்த இலக்குகள். அந்த இலக்குகளில் அவர்கள் முன்னோக்கிச் சென்றுகொண்டுதானிருக்கின்றார்கள்.

ஆரம்பத்தில் நீர்ப்பாசனத் திட்டங்கள் என்ற அடிப்படையில்தான் சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பது உங்களுக்குத் தெரியும். அதனால்தான் மகாவலியே எமக்கு வேண்டாம் என சொல்லும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். அரச இயந்திரத்துக்கு இதில் ஒரு பிரச்சினை இருந்தது. நீர்பாசனத் திட்டங்கள், அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெறாத பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுப்பதானால் என்ன செய்வது என்பதுதான் அந்தப் பிரச்சினை. அந்தப் பிரச்சினைக்கு அவர்கள் கண்டுள்ள தீர்வுதான் தொல்பொருள் பகுதியாக ஒரு பகுதியைப் பிரகடனம் செய்து அதனை சிங்கள மயமாக்குவது. தொல்பொருள் திணைக்களம் இதனைத்தான் இப்போது செம்மையாகச் செய்கின்றது.

தொல்பொருள் திணைக்களம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்று. இதன் நிர்வாக சபையில் 32 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருமே சிங்களவர்கள்தான். தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ஒரு இடம் கருதப்பட்டு அது குறித்த வர்த்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டால், அந்தப் பகுதியைப் பேணிப் பாதுகாப்பதற்கும், ஆய்வுகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் அந்தத் திணைக்களத்துக்கு வழங்கப்படும். சட்டத்தில் உள்ள ஏற்பாடு இது மட்டும்தான். வடக்கில் 337 இடங்கள் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, அங்கு பௌத்த சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் முறையான ஆய்வுகள் மூலமாகப் பெயப்பட்ட தகவல்களின் அடிப்படையிலோ அல்லது, முறையான நில அளவீட்டின் அடிப்படையிலோ வெளியிடப்பட்ட பிரகடனங்கள் அல்ல. எழுந்தாமனான பிரகடனங்கள்தான் அவை.

குறிப்பிட்ட 337 தொல்பொருள் இடங்களில் 167 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளவை. அதில் சுமார் 50 வரையிலானவை வெலிஓயா என பெயர் மாற்றப்பட்டுள்ள மணலாறு பகுதியிலுள்ளவை. இந்தப் பகுதிதான் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பகுதி. அதாவது, வடக்கு கிழக்கு இணைப்பை முழு அளவில் துண்டிப்பதை இலக்காகக்கொண்டுதான் தொல்பொருள் திணைக்களமும் செயற்படுகின்றதா என்ற கேள்வியை இது எழுப்புகின்றது.

இவ்வாறு இலக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு பகுதிதான் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நீராவியடி. இதுதான் இப்போது எரியும் பிரச்சினையாக உள்ளது. இதனை ஒரு உதாரணத்துக்காக மட்டும்தான் சொல்கிறேன். இங்கு நீண்டகாலமாக இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் கடந்த ஜனவரியில் புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டது. அதில் பிக்கு ஒருவரும் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் குடியேறினார். அவருக்கு இராணுவம் பாதுகாப்பளித்தது. நீதிமன்ற உத்தரவையும் மீறி அவர் கட்டுமானங்களை அமைப்பதை இராணுவமும், பொலிஸாரும் தடுப்பதில்லை. அந்தப் பகுதியில் பாரிய விகாரை ஒன்றை அமைத்து, மீனவர் குடியிருப்பு, விவசாயகக் குடியிருப்பு ஒன்றை அமைத்து சிங்களவர்களைக் கொண்டுவந்து குடியேற்றும் திட்டத்துடன் அவர் செயற்படுகின்றார்.

கடந்த வாரம் அமைச்சர் மனோ கனேசன் அங்கு சென்றிருந்த போது குறிப்பிட்ட பிக்கு, ஆவேசத்துடன் பேசியதை தொலைக்காட்சியில் பார்த்தோம்.

இது போல வடக்கில் 337 இடங்களிலும் அமைக்கப்பட்டால் நிலைமை என்ன? இது போன்ற குடியேற்றங்களின் பாதுகாப்புக்காகத்தான் வடக்கில் இந்தளவுக்கு பாரியளவில் இராணுவம் குவித்துவைக்கப்பட்டுள்ளது. நினைக்கிறோம் – சில பிக்குகளும் அரசியல்வாதிகளும்தான் படையினரின் ஆதரவுடன் இதனைச் செய்கின்றார்கள் என்று. நிச்சயமாக இல்லை. அவர்களுக்குப் பின்புலமாக அரச இயந்திரம் இக்கின்றது. பௌத்த மயமாக்கல் கொள்கை வகுப்பாளர்களாக புத்திஜீகள், பேராசிரியர்கள் என ஒரு குழு இவற்றை துல்லியமாகத் திட்டமிட்டுச் செயற்படுகின்றது. அரசியல், கட்சி வேறுபாடுகள் முரண்பாடுகளுக்கு அப்பால் அவர்கள் இணைந்து செயற்படுகின்றார்கள்.

நாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், கண்ணுக்குத் தெரியாமல் அதனை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்.

ஒரு புறம் தாயகம் இவ்வாறு அரித்துச் செல்லப்படுகின்றது. மறுபுறம் மக்கள் தொடர்ந்தும் வெளியேறிவருகின்றார்கள். தமிழகத்தில் மட்டும் 100 முகாம்கள் இன்னும் இருக்கின்றன. சுமார் ஒரு லட்சம் மக்கள் இன்னும் அங்கிருக்கின்றார்கள். அவர்களை மீண்டும் அழைத்துவருவதற்கான திட்டங்கள் எதுவும் இன்று வரை இல்லை. தாயகத்துக்கு வரலாம் என நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுக்க எமது தலைவர்களால் முடியவில்லை. இந்த நிலைமையில் வெறுமனே கோட்பாடுகளைப் பேசிக்கொண்டு எமக்கிடையே முரண்பட்டுக்கொண்டு நின்றால் தாயகமே காணாமல் போய்விடும்.

அரசாங்க இயந்திரம் சிங்கள புத்திஜீவிகளின் ஆலோசனைகளுடன் முன்னெடுக்கும் இந்த ஆக்கிரமிப்பு யுக்திகளை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தரப்பிடம் என்ன உபாயம் உள்ளது? இதனையிட்டு தமிழ்த் தரப்பினர் எப்போதாவது சந்தித்துப் பேசி இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை ஆராய்ந்திருக்கின்றார்களா? அரசாங்கம் கொடுக்கும் கம்பரெலியா, சமூர்த்தி, பனை அபிவிருத்தி நிதியம் என்பவற்றின் மூலமான அபிவிருத்திகளைக் காட்டி அடுத்த தேர்தலை எதிர்கொள்வது மட்டும்தான் கூட்டமைப்பின் அரசியல் என்ற நிலை இப்போது வந்துவிட்டது. நீண்டகாலப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபிவிருத்தியும் நிவாரணங்களும் அவசியம்தான். மறுக்கவில்லை. ஆனால், அந்த அபிவிருத்தி என்ற மாயைக்குள் மக்களை வைத்திருக்கும் நிலையில் தாயகம் பறிபோவது மறைக்கப்படுகின்றது. அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் கைவிடப்பட்டிருப்பதையிட்டு யாரும் பேசத் தயங்குகின்றார்கள். போர்க் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல் காணாமல் போய்விட்டது.

கடந்த 10 வருடத்தில் எமக்கு கிடைத்தது இதுதான். போர் முடிவுக்கு வந்தாலும் போருக்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன என்பதைவிட அது இன்னும் ஒரு படி மோசமாகிவிட்டது என்றும் சொல்லலாம். இப்போது நேரடியான போர் இல்லை என்றாலும், மறைமுகமான போர் ஒன்று தொடுக்கப்படுகின்றது. தமிழ்க் கட்சிகளும், புலம்பெயர்ந்த அமைப்புக்களும் இணைந்து இதனை எதிர்கொள்வதற்கான உபாயங்களை வகுத்துச் செயற்படாவிட்டால், தமிழர்களை கடவுளும் காப்பாற்ற முடியாத ஒரு நிலைதான் வரும்!

— கொழும்பிலிருந்து ஆர்.பாரதி-

1,857 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *