அவள் வீடு மாறுகிறாள்

ஒருமுறை ஏதும் இன்னும் வீட்டுக்குள் இருக்கா என்று பார்த்துவிட்டு வரும்படி அவர் காருக்குள் அமர்ந்துகொண்டு என்னை அனுப்புகிறார். வீட்டுக் கதவைத்திறக்கின்றேன். நினைவுகளும் அகலத்திறக்கிறது.

‘இந்தப் பெரிய வீடு இருக்கு, குளிக்க சுடுதண்ணி, வெட்கை என்றால் குளிர் காற்று. குளிர்; என்றால் வெட்பக் காற்று, வேலிப் பொட்டுக்குப் பதிலாய் இங்கு போன் வட்சப்; இன்னும் மேலால் கூர்மையாகப்பார்க்க சூம் (ணுழழஅ). இதற்கு மேலேயும்; எப்ப பார்த்தாலும் வீட்டை விட்டுவிட்டு வந்திட்டேன்! வீட்டை விட்டிட்டு வந்திட்டேன் என்ற ஒப்பாரிவேறு. எணே அம்மா! கொஞ்சம் காலத்தோடு அனுசரித்து போங்கோவேன். வீடு என்ன உயர் திணையா? அது அஃதிணைதானே ஏதோ அது உயிர்; போல இங்குவந்து ஏழுவருடமாய் அதே நினைப்பில் கட்டி அழுகிறியள்;.

இங்கு கிடைக்காத எந்த சுகத்தை அங்கே பெரிசா அனுபவித்துப் போட்டியள். எங்குபோவது என்றாலும் காலுக்கை காரும், பஸ்சும், நாரிக்குள் நோகுது என்று திரும்புவதற்கு முன்னே டாக்குத்தர் முன்னுக்கு நிற்பர். இப்படி என்னதான் குறை. வயசு இது எங்கு இருந்தாலும் போகும்தானே!.’ இவ்வளவும் மகள் கவிதா தன் தாய் மரகதத்திற்கு மனதை மாற்ற அடிக்கடி ஏற்றிய தடுப்பூசிகள்.
இப்போதோ…
தன் தாயோடு பட்டிமன்றம் நடாத்திய அந்த பெரிய அறை அப்படியே அமைதியாக இருக்கிறது. குளிப்பாட்டிய அந்த குளியல் அறை வற்றிய தடாகம்போல் காட்சியளிக்கிறது. சிறிய சமையலுக்கும் ஏதோ தான் இல்லாவிட்டால் ஒன்றுமே இவளால் முடிக்க இயலாது என்று பக்கத்தில் இருமிக்கொண்டும் ஒரு நாள் முழுக்க இருந்து மூன்று வேங்காயம் நறுக்கும் அந்தச் சின்னக் கத்தியும் மழுங்கிப்போய்க் கிடக்கிறது.

ஒவ்வொருநாளும் திட்டமிட்டு ஒவ்வொரு பொருட்களாக கட்டிக்கட்டி ஒரு பெரிய பெட்டிக்குள் அடுக்கி புதுவீட்டுக்கு அனுப்பியாச்சு. எனக்கு அம்மாவின் நினைப்பை எந்தப்பெட்டிக்குள் கட்டுவது என்று தெரியவில்லை. அது என் நெஞ்சுக்குள் ஈரமாய்க் கசிந்துகொண்டிருந்தது. வேலையால் வந்ததும் வேலைக்கடுப்பில் எனக்கு எரிஞ்சு விழுவதற்கு முகம் கொடுத்து, அமைதிகாத்து, என்ன பிள்ளை, தேத்தண்ணி ஊத்தித்தரட்டோ! என்று கேட்கும் அந்த விழிகளை அந்தக் மூக்குக் கண்ணாடிக்குள்ளேயும் பிரகாசமாய் காட்டுவாயே! அந்த விழிகள்.அவை எங்கே!அவை எல்லாம் இங்கேதானே!

ஏன் காலை எழும்பி, முகம் கழுவி கும்பிட்டு திருநீற்றுப் பூச்சோடு வந்து பெரியசோபாவில் அமர்ந்திருக்கும் நீ, என் பாரத்தையும் மறந்து இரணை மடியில் என்று என்னை இன்னும் குழந்தையாக்கிச் சுமந்து தாலாட்டும் அந்த நலிந்த கால்கள் உலா வந்த இந்த வீட்டின் அறைகளை எப்படி நான் விட்டுச்செல்வது. அது மட்டுமா அவரை முதல் முதல் இந்த வீட்டில் அல்லவா சந்தித்தேன். அந்தச்சந்திப்பு தித்திப்பாகி பூத்துக் கனிந்து இன்று நான்கு கனிகளுடன் தோப்பாக நான் மாறிய இல்லம் அல்லவா இந்த இல்லம். இதனை எப்படி நான் விட்டுச்செல்வேன்.
அம்மா! நீ எப்படி உன் வீட்டைவிட்டுவிட்டு இருபது வருடங்கள் இருந்தாய் என்பதை இப்போது உணர்கிறேன். அன்புக்குரியவரின் பாசல் வந்த கடுதாசிகளையும், என் பிள்ளைகள் விளையாடிய அந்தப் பொம்மைகளையும், தன் நண்பர்களுடன் ஜீப்பில் சுத்தப்போட்டான் விவேக். அவனுக்கு அப்ப வாங்கிக்கொடுத்து அடுத்த நிமிடமே நாலு சில்லையும் இழந்த அவனது விளையாட்டு ஜிப்பையும் நான் பொறுக்கிப் பொறுக்கி கட்டிஅனுப்பிவிட்டேன்.

அப்படி என்றால் அப்போ அங்கு வீட்டில் பின் வளவிற்குள் ஆட்டுக்கு குழை ஒடித்துக்கொண்டு இருந்த நீ, எப்படி அம்மா எல்லாவற்றையும் விட்டுவிட்டு அந்தச் செல்மழைக்குள்ளால் ஓடிவந்த நீ. அப்பாவின் படத்தைக் கூட உன்னால் எடுக்க முடியவில்லை என்று எத்தனை நாள் இங்கும் அழுதிருப்பாய். மூன்று மாதமாகத் திட்டமிட்டு ஒவ்வொரு பொருளாக நான் தேடித்தேடி எடுக்கும் போதே நினைவுகளும், அம்மாவோடு வாழ்ந்த உறவுகளும் நெஞ்சை இறுக்குமென்றால். தாயகத்தில் எங்கள் முற்றத்தை விட்டு ஒரு நொடியில் வெறும் கையுடன்; ஓடிவரும்போது எவ்வளவு இறுக்கு இறுக்கியிருக்கும் உன் நெஞ்சு.
இந்த வீட்டுக்கு கதை பல இருக்கும் என்றால், அம்மா நீ இழந்த வீட்டுக்கு ஒரு சரித்திரம் அல்லவா இருக்கும். எங்கள் அப்பா. அவர் அப்பா அதுதான் என் தாத்தா. எங்கள் மூப்பாட்டன் வாழ்ந்த முற்றம் அல்லவா அது. வீட்டின் ஒவ்வொரு கல்லிலும் என்னுடைய மனுஷன் இருகிறார் என்று சொல்லும் போது புரியாத விளக்கம் இப்போது என் வீட்டைவிடடு வீடு மாறும் போது புரிகிறதே!
இறுதியாக சாமான்கள் எல்லாம் ஏற்றியாகிவிட்டது. வீட்டுத்திறப்பைக் கொடுப்பதற்கு முன் ஒருமுறை ஏதும் இருக்கா என்று பார்த்துவிட்டு வரும்படி அனுப்பியவர் என்னைக் காணாமல் கீழே நின்று மணியை அழுத்துகிறார்.

இப்போது தான் என் நினைவு திரும்ப நான் கதவைச் சாத்துகிறேன். வீடுமாறுகின்றேன். என் உயிர்;, இந்த உடல் என்னும் வீட்டைவிட்டுப் பிரிவது போன்ற ஒரு வலி. கதவு மீண்டும் திறக்கும் சத்தம்கேட்டு திரும்பிப் பார்க்கின்றேன். அது வெறும் பிரமை.
நான் வேலைக்கு செல்லும் போது நான் கதவைப் பூட்டினாலும், தான் மெல்லக் கதவைத் திறந்து நான் படிவரைக்கும் பாதுகாப்பாய் போகிறேனா என்று எட்டிப் பார்க்கும் அந்த விழிகள், அந்தக்கதவுக்குள் இல்லை. இந்த உலகுக்குள்ளும் இல்லை. என் உடலைத் நானே தடவிக் கொள்கின்றேன். என் உயிர்; வாழ உடல் என்னும் வீட்டைக் கட்டித்தந்த என் அன்னை நினைவாக.

வீடு என்பது கல்லாலும் மணலாலும் சேர்த்துக்கட்டிய கலவை அல்ல. அன்பு, பாசம், நல்லறம், என்னும் நற்பண்புகளால் கட்டப்பட்ட உயிர்க்கூடே உண்மை இல்லம். வீட்டுக்கு யன்னல்போன்று அறிவொளியை அனுபவத்தால் தருபவர்கள் முதியவர்கள், மலரைப் போன்று மணம் வீசுபவர்கள் மழலைகள். தூணைப்போன்று தாங்கி நிற்பவர்கள் தலைவனும் தலைவியும்.. எனவே வீட்டில் சடப்பொருளைத் தேடினாலும் கிடைக்காது. எனவே வீடு என்பது உயர்திணையாக அல்லவா இருக்க வேண்டும்.!

-மாதவி

1,176 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *