ஒரு கோவிட் பயணம்- எனது சொந்த அனுபவம்

மரண இருளின்பள்ளத்தாக்கு ஒளி தந்த இருளின் காலம்

நிகழ்வுகளெல்லாம் இறைவனால் நமக்குத் தரப்படுகின்ற அனுபவப் பாடங்கள். சில அனுபவப் பாடங்கள் நம்மை விரக்தியில் எறியும். சில நம்மை குழப்பத்தில் உருட்டும். சில அனுபவங்கள் நம்மை புரியாமைக்குள் நடத்திச் செல்லும். ஆனால் ஒன்று மட்டும் யதார்த்தம், இறைவனின் கரம்பிடித்து நடப்பவர்களுக்கு எந்த ஒரு துயரத்தின் பயணமும், கடைசியில் வெற்றியின் பாடலாய் முடிவடையும். அது இவ்வுலகின் ஆயுளானாலும் சரி, விண்ணுலகின் இறைவனின் அருகாமையானாலும் சரி.

இறைமகனின் பார்வை பட்ட கதவுகளுக்குள் கிருமிகளின் காலடி நுழைவதில்லை எனும் நம்பிக்கைகள் பல வேளைகளில் உடைந்து போகின்றன. இறைவனே அதை அனுமதிக்கிறார். அதீத கவனத்தோடு இருந்த போதும் கோவிட் ரகசியமாய் வந்துக் கதவைத் தட்டியது. ஒரு சின்னக் கிருமிக்குப் பயந்து சோதனை செய்யாமலேயே வாரங்கள் கழிந்தன. அச்சம் வந்து தைரியத்தின் அத்தனை சன்னல்களையும் சாத்தியபின், கடைசியில் அந்த நாள் வந்தது. நோயின் தாக்கம் அதிகரிக்க, கோவிட் பாசிடிவ் எனும் முடிவு வர, சி.டி ஸ்கேன் ஏகமாய் மூச்சுத் திணறி கதறியது.

‘உடனடியாக அட்மிட் பண்ணுங்க, கொஞ்சம் கிரிட்டிக்கல்’ என்றார் கல்யாணி மருத்துவமனை டாக்டர்.

‘கிரிட்டிக்கலா ?” என்றேன் ? வெளிக்காட்டாத அதிர்ச்சியுடன்“

ஆமா… 90ம்சதவீதம் நுரையீரல் பாதிப்பில் விழுந்திருக்கிறது. எப்படி இன்னும் உங்களுக்கு மூச்சுப் பிரச்சினை வரவில்லை என்பது தெரியவில்லை. பரவாயில்லை, ரிக்கவர் ஆயிடலாம்ன்னு நினைக்கிறேன். கடவுளே நினையுங்கள், அட்மிட் ஆயிடுங்கள்” உங்களுக்கு வயசு கைகொடுக்கும்ன்னு நினைக்கிறேன் என்றார் அவர். வானவர் கைகொடுத்தால் தான் வாழ்க்கை, வயது கைகொடுக்கப் போவதில்லை எனும் குரல் மனதுக்குள் அப்போதே ஒலித்தது.

“ஓக்கே.. என்பதைத் தவிர எங்களிடம் வேறு பதில் இருக்கவில்லை”. தனிமையாக அந்த மருத்துவ மனைக்குள் நுழைந்த எங்களுக்கு அடுத்தடுத்த அரை மணி நேரத்தில் கிடைத்த அழைப்புகளும், உதவிகளும், செபங்களும், விசாரிப்புகளும் நிலைகுலைய வைத்தன. “நமக்கு யாருமே இல்லேன்னு நினைச்சேன்… எத்தனை பேரு உதவிக்கு வராங்க ! எனும் மனைவியின் பொலபொலத்த கண்ணீரின் ஈரத்தில் ஐ.சி.யூவுக்குள் நுழைந்தேன்”.

ஐ.சி,யூ என்பது தன்னம்பிக்கையின் கடைசி வேர்களைக் கூட கழற்றிக் கீழே போடும் இடம். ஒரு அழுக்கடைந்த கந்தையை படுக்கையில் புடட்டிப் போடும் தருணம் அது. உடலானது சுக்கு நூறாக உடைக்கப்பட்ட பயனற்றுக் கிடக்கும் பாண்டத்தைப் போல மாறுவது. “குயவனின் மட்கலம் சுக்குநூறாய் உடைந்து போவதுபோல் இருக்கும்; அடுப்பிலிருந்து நெருப்பு எடுப்பதற்கோ பள்ளத்திலிருந்து நீர் மொள்வதற்கோ உடைந்த துண்டுகளில் எதுவுமே உதவாது.” (ஏசாயா 30:14 ). அங்கே அடைபடுவதும், செங்கடலுக்குள் கால் வைப்பதும் ஒரே விஷயம் தான். நம்பிக்கையும், விசுவாசமும் மட்டுமே கரை சேர்க்கும்.

கூர்மையான ஊசிகளின் தொடர் குத்தல்களும், உடலெங்கும் இணைக்கப்பட்ட செயற்கை வயர்களும், கண்களுக்கு மேலே கண நேரமும் பீப் அடித்துக் கொண்டிருக்கு டிஜிடல் மானிடர்களும் எதுவுமே நமக்குச் சம்பந்தம் இல்லாதவை. பக்கத்து ரூமில் ஒருத்தரு போயிட்டாரு, ஐசியூல நேத்தைக்கு ரெண்டு காலி போன்ற செய்திகள் வராண்டாக்களின் படபடப்பை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தன.

போதாக்குறைக்கு வாழ்க்கையிலேயே மிக எளிதான ஒரு வேலையான ‘மூச்சு விடுதல்’ , மிகப்பெரிய பணியாக மாறிப்போன அவஸ்தையை அங்கே தான் கண்டு கொள்ள முடிந்தது. தரையில் கால் வைத்தாலே அரைமணி நேரம் மூச்சுத் திணறும் அவஸ்தையில் கடவுள் மூச்சை மட்டுமல்ல, நுரையீரலையும் நிலைப்படுத்தினார். நள்ளிரவு தாண்டிய மௌனத்தின் பொழுதுகளில் கருவிகள் இடுகின்ற புரியாத குழப்பச் சத்தங்களையும் இறைவனே ஸ்திரப்படுத்தினார்.

அந்த நேரத்தில் மனதுக்குள் நிழலாடிய, கூடாரமடித்துக் குடியிருந்த ஒரே ஒரு வசனம் “ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்; நீங்கள் அமைதியாயிருங்கள் ( விடுதலைப்பயணம் 14:14 ) கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் எனும் வசனம்.

சில வசனங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அதற்குரிய படுக்கையில் கிடக்க வேண்டும். இறைவனின் பேரன்பின் ஆழத்தை அறிந்து கொள்ள வேண்டுமெனில் நமது பலங்களின் மீதான கடைசி கட்ட ஈர நம்பிக்கையையும் கூட இறக்கி வைக்க வேண்டும். இவையெல்லாம் அந்த ஐ.சியூவின் மயான நள்ளிரவுத் தாண்டிய பொழுதுகள் உணர்த்திய கதைகள்.

சும்மா இருந்து செயிப்பது என்பது என்ன என்பதை அந்த காலம் புரிய வைத்தது. சும்மா இருப்பது என்பது விசுவாசத்தை அதிகரித்துக் கொள்வது. இறைவன் நிச்சயம் நமக்காய் போரிடுவார் எனும் நம்பிக்கையை ஆழப்படுத்துவது. நமது இதயத்தின் இயங்கு தசைகளெங்கும் இறைவனோடு உரையாடல் நடத்துவது. “நீ உன் விசுவாசத்தை ஆழப்படுத்து, நான் உன் பாதைகளை வலுப்படுத்துகிறேன்” என்றார் இறைவன். ஆழப்படுத்த முயன்றேன்.

எவ்வளவு பெரிய மனிதர்கள் தங்களுடைய முழு நேர ஊழியப் பணியைக் கூட ஒதுக்கி வைத்து விட்டு செபத்திலும், டாக்டர்களிடம் உரையாடுவதிலும் தங்களுடைய பொன்னான நேரத்தைத் தந்தார்கள் என்பதெல்லாம் கண்ணீரால் எழுதி முடிக்க முடியாத இன்னொரு கதை. மதங்களைக் கடந்த மனிதநேசத்தின் உச்சத்தை இத்தகைய தருணங்கள் சொல்லித் தருவதும் இறைவனின் பேரன்பின் பாடமே.

கடவுள் கரம்பிடித்து நடத்தினார். ஒரு வாரத்துக்குப் பிறகு ஐசியூ வின் கதவுகள் திறந்து கொண்டன. தனி வார்டுக்கு இடம் பெயர்ந்தேன். அசௌகரியங்கள் குறைந்திருந்தன, இறைவனின் மீதான அன்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கணத்தில் பேராபத்தின் பெருநதியிலிருந்து இறைவன் என்னை வெளியே கொண்டுவந்திருக்கிறார். மரண இருளின் பள்ளத்தாக்கில் அவரது வெளிச்சத்தின் பாதைகளில் தொடர்ந்து என்னை நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னும் ஒரு சில தினங்களில் வீடுவந்து சேரும் சூழலை இறைவன் உருவாக்கியிருக்கிறார்.

ஐ.சி.யூவுக்குள் நிராயுதபாணியாய் நுழைந்தபோது மனதுக்குள் எழுந்த ஒரு மிகப்பெரிய கேள்வி, “இன்று இரவே உன் வாழ்க்கை முடிந்து போனால் நீ வீணாய் செலவழித்த காலங்களுக்கு என்ன பதில் சொல்வாய் ?” எனும் கேள்வி. அந்த கேள்வி என்னைத் தூங்கவிடவில்லை.

கோவிட்டின் காலம் முடியும். செங்கடலைக் கடக்கும் காலம் நிகழும். எனில் இந்த பயண காலம் வெறும் வேடிக்கையின் காலமாய் தொடரக் கூடாது எனும் சிந்தனை மனதில் எழுகிறது. போராட்டம் என்பது நமது வலுவினால் நடப்பதல்ல, வலுவின்மையால் நடப்பது எனும் புரிதல் தெளிவாகிறது.

நமது வாழ்வின் அர்த்தமானது பிறருக்காக வாழ்வதில், பிறருடைய தேவைகளுக்காக வாழ்வதில், பிறருக்கு மீட்பின் நற்செய்தியை அறிவிப்பதற்காக வாழ்வதில், தன்னைப் புறந்தள்ளி இறைவனை அரவணைக்கும் வாழ்க்கை வாழ்வதில் அர்த்தப்படுகிறது.

இந்த கோவிட் காலம் ஒரு சில புரிதல்களைத் தந்திருக்கிறது.

  1. அச்சம் தவிர் ! கோவிட் வந்திருக்குமோ எனும் பயத்தாலும், நம்மை ஒதுக்கி விடுவார்களோ எனும் அச்சத்தாலும், சிகிச்சை நேர்மையாய் நடக்குமா எனும் சந்தேகத்தாலும் பலர் இந்த சோதனைக்குச் செல்வதில்லை. ஆனால், தொடக்கத்திலேயே இந்த நோயைக் கண்டறிந்தால் ஒரு சின்ன காய்ச்சலை விரட்டுவதைப் போல இதை விரட்ட முடியும்.
  2. துணிச்சல் கொள் ! நமது நுரையீரலில் எழுகின்ற பாதிப்பு தான் முக்கியமானது. உடலில் உயிர்வழியின் அளவு 93 எனும் அளவீட்டுக்கு குறைவாய் இருந்தால் சுதாரித்துக் கொள்ள வேண்டும். காரணம், உடலுக்குத் தேவையான உயிர்வழி கிடைக்கவில்லை என்பது அதன் அடையாளம். அப்படிப்பட்ட சூழலில் உடல் இயல்பாய் செயல்பட முடியாமல் போய்விடும். இந்த சூழலில் சரியான மருத்துவ உதவி அவசியம்.
  3. எதிர் கொள் ! நோய் காலத்திலும், அதற்குப் பின்பும் மருத்துவர் சொல்லும் ஆலோசனைகளைக் கடைபிடிப்போம். கோவிட்டுக்கு மருத்துவ உலகம் தரும் ஆலோசனைகளை விட பல இலட்சம் மடங்கு அதிகமாய் வாட்சப் வாத்தியார்கள் தருகிறார்கள், அவற்றை கொஞ்சம் கவனமாய் கையாள்வது நல்லது.
  4. தன்னம்பிக்கை கொள் ! கோவிட் என்பது சர்வ தேச அச்சுறுத்தல். ஆனால் உண்மையில் இதை விடக் கொடிய நோய்கள் நம்மைச் சுற்றி உலவுகின்றன, “அதிகம் பேருக்கு வருகிறது “: என்பது தான் இந்த நோயின் சிக்கலே தவிர, இதன் தீவிரம் பல வேளைகளில் கடினமாய் இருப்பதில்லை. எனவே தன்னம்பிக்கை கொள்வோம்.
  5. மனித நேயம் கொள் ! கோவிட் நோயாளிகளை பழங்கால தொழுநோயாளிகளைப் போல பாவிப்பதை நிறுத்திக் கொள்வோம். சரியான பாதுகாப்பு அம்சங்களுடன் அவர்களை எதிர்கொள்வோம். இந்த நோய் தாக்கி உதவிகள் தேவைப்படும் இலட்சக்கணக்கான மக்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ இதயத்தை உருவாக்குவோம்

1,956 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *