ஏழுகால் பூச்சி

-மாதவி

நான் இது வரை எந்த உயிரையும் கொண்டுதீர்க்கவில்லை அனால் கொன்றதை திண்டுதீர்த்திருக்கேன். இப்ப திண்டுதீர்ப்பதையும் ஒரு பத்துவருடமாக நிறுத்தி உள்ளேன். அதனால் எனக்கு நானே ஒரு விருதும் கொடுத்து உள்ளேன். நான் ‘நல்லவன்’ என்பதே அந்த விருது. இப்ப நீங்களும் என்னை நல்லவன் என்று நம்பினால் என்கூட வாருங்கள்.வாசியுங்கள். இல்லை நான் கெட்டவன் என்று எண்ணம் தோன்றினால் எனக்கு தெரியும் என்னை அறிய நிச்சயம் என்னை தொடர்வீர்கள். எனவே இருவரும் வாருங்கள்.

இரவு 7 மணி இருக்கும் சோபாவில் முதுக்கும் காலுக்கும் நல்ல தலையணையை வைத்து, கைக்கு எட்டிய தூரத்தில் கச்சான் கடலையும். ரிவி றிமோட்டும் இருக்கும்படியாக வைத்துவிட்டு, ரிவி பார்க்கிறேன். நிச்சயமாக கொரோனா பற்றிய செய்திகள் அல்ல. அது எப்படி விபரித்தாலும் புரியாது எனக்கு. விமானத்தில் பாதுகாப்பு செய்முறையை பணிப்பெண்கள் செய்து காட்டும் போது அது எனக்கில்லை என்ற மன நிலையே, இப்போதும் எனக்கு. நேற்று புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் சரிதம்; ‘தலைவி” படம் பார்த்ததில் இருந்து, நினைவுகள் ஏதோ எம்.ஜி.ஆரைச் சுற்றியே உலாவுது.

அட என்னடா என்காலில் ஏதோ ஊருது…. தலைகணிக்கு மேல் இருந்த காலை பயத்துடன், பதட்டத்துடன் எடுத்தேன் ஒர் எட்டுக்கால் பூச்சி என்னை உசுப்பிவிட்டு ஓடியது.
சட்டென எழும்பி எல்லா லைட்டையும் போட்டு, கிரிமினலைப் பிடிக்கும் அதிரடி பொலிஸ்போல் களத்தில் இறங்கினேன். சோபாவுக்கு அடியில் இருந்து மெல்ல எட்டிப்பார்க்கிறார். நான் கண்டுவிட்டேன். மெல்ல துடைப்பம் எடுத்து நீட்டினேன். அது அதில் ஏறுவதாக தெரியவில்லை.

மெல்ல கிச்சினுக்குள் புட்டு குழைக்கும் தடியால், ஒரு பக்கம் விரட்டினேன். மனிசி ஐயோ தடியை வையுங்கோ! இனி அதாலை புட்டே குழைக்க மாட்டேன்!! எனக் கத்த, நான் பதட்டத்தில் ஆட, எட்டுக்கால் பூச்சியின் ஒரு கால் அவுட்.

ஒரு அடியில் அடிச்சுப்போட்டு, தூக்கி எறியலாம். ஆனால் நான் அப்படி செய்பவன் அல்ல. மீண்டும் அதனை அரவணைத்து துடைப்பத்தில் ஏற்றி யன்னலால் எறியவே முயல்கிறேன். ஆனால் அது ஓடி! ஓடி! ஒழிக்கிறது. அதற்கு நான் தன்னை காப்பாற்றி மெல்மாக வெளியேற்றுவேன் என்பதை எப்படி நம்பும். அதனை பொறுத்தவரை எலிபிடிக்கும் பூனையே நான்.

நேற்று மதியம் நல் நண்டுக்குழம்பும் அதன் காலையும் சூப்பி வெழுத்துவாங்கிய மனுசி, நான் படும் பாட்டைப்பார்த்து நக்கலாய் ஒரு சிரிப்பு.
இப்ப துடைப்பத்துக்கு கிட்ட வந்து ஏறுகிறார். என்மீது வந்த நம்பிக்கையாக இருக்கலாம்.

ஏறிவிட்டார் எட்டுக்கால் பூச்சி. இல்லை இல்லை இப்ப ஏழுகால் பூச்சி.
இருந்தாலும் பூச்சிக்கு வலி அதிகம், அசைய முடியாமல் கிடந்தது. ஆனால் உயிர் இருக்கு. யன்னலை திறந்து துடைப்பத்தை வெளியே விட்டு உதறிவிட்டு அப்பாடா என்றபடி துடைப்பத்தை உள் எடுத்தேன்.

பொத்தென்று என் காலடியில் விழுந்து ரிவி மேசைக்கு கீழ் ஓடியது.
எங்கிருந்து வந்தானோ வில்லன் செருப்புக்காலால் ஓங்கி ஒரு குத்து ஏழுகாலோடு பரலோகம்.

என்னை என்னால் நம்பமுடியவில்லை. என்னை ஏமாற்றியதால் வந்த கோபமோ? அல்லது எனது இயலாமை யால் வந்த கோபமோ?, என்னை இயமனாக்கியது.
மனிசி சிரித்துக்கொண்டே சொல்கிறா! உந்த சித்திரவதை எல்லாம் செய்யாமல், உதை அப்பவே செய்திருக்கலாம் என்றா. இப்பவும் சொல்கிறேன் அந்த கணநேரத்தில் நான் வில்லனாக இருந்திருக்கலாம், ஆனால் நான் நல்லவன்.

819 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *