தனிக்குடித்தனம்

கௌசி-யேர்மனி

திருமணமும் மணமுறிவுகளும்

மனிதனுடைய வாழ்க்கைப் படிமானங்களில் ஒரு கட்டம் குடும்ப வாழ்க்கை. இக்குடும்பவாழ்க்கை என்பது மனிதனுடைய வாழ்க்கையிலே மிகக் கடினமான வாழ்க்கைப்படியாக அமைகின்றது. ஆயினும் அவ்வாழ்க்கை மூலம் தனிமனித ஒழுக்கம், விட்டுக்கொடுப்புக்கள், தளர்ந்த பிடிவாதம், அன்பு, பாசம், ஒற்றுமை, எதிர்பார்ப்புக்கள் எனப் பல விடயங்கள் கற்றுக் கொள்ளுகின்றான். ஒரு பெண் ஆணையோ ஒரு ஆண் பெண்ணையோ தேவாலயத்திலோ இந்து ஆலயத்திலோ கைப்பிடிக்கும் போது ஒருத்தருக்கொருத்தர் இன்பதுன்பங்களில் பங்கெடுத்து வாழ்வோம் என்று கூறியே கையெழுத்திட்டு உறுதிமொழியளிக்கின்றார்கள். ஒரு தனிமனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கமாக வாழுகின்ற போது பல்வேறுபட்ட பிரச்சினைகளைச் சந்திப்பதைச் சமூகவியல் ஆய்விலே ஆய்வாளர்கள் கண்டு பிடிக்கின்றனர்.
இதற்கு பல்வேறுபட்ட குடும்பப் பழக்கவழக்கங்களிலும், பண்பாட்டு அம்சங்களிலும், கலாசார விழுமியங்களிலும் இருந்து வந்து இணைகின்ற மக்களிடையே ஏற்படுகின்ற புரிந்துணர்வுகள் காரணமாக அமைகின்றன. அத்துடன் வயது, பணம், அந்தஸ்து, சமூக செயற்பாடுகள் போன்றவையும் முரண்பாடுகளாக அமைகின்றன.

அக்காலத்தில் 12 வயதிலேயே திருமணம் செய்வதற்குரிய காலமாகக் கணித்திருந்தனர். முற்காலத் திலே பல திருமணங்கள் பெற்றோர் பார்த்துப் பேசிச் செய்த வைத்ததாகவும் அமைந்திருந்தன. தூரத்து உறவினர்கள், பெண்கேட்டு வருவதும் அவர்கள் பெண்ணின் தந்தைக்கு பெரும் பொருள் கொடுத்து திருமணத்தை உறுதி செய்வதும், இல்லையென்றால், உறவில்லாத ஒரு ஆண் பெற்றோரிடம் தன்னுடைய காதலைச் சொல்லி அவர்களுடன் பெண் கேட்டு அவளை மணம் முடிக்கின்ற முறையும் வழக்கமாக இருந்தது. இதனை குறுந்தொகை 351 அவது பாடலிலே

வளையோய் உவந்திசின் விரைவுறு கொடுந்தாள்
அளைவாழ் அலவன் கூருகிர் வரித்த
ஈர்மணல் மலிர்நெறி சிதைய இழுமென
உருமிசைப் புணரி உடைதரும் துறைவர்க்கு
உரிமை செப்பினர் நமரே விரியலர்ப்
புன்னை ஓங்கிய புலாலஞ் சேரி
இன்னகை ஆயத் தாரோடு
இன்னும் அற்றோஇவ் வழுங்க லூரே.

வளையல்களை அணிந்தவளே நம் சுற்றத்தார் விரைதலையுடைய வளைந்த காலையுடைய வளையின்கண் வாழும் நண்டு தன் கூரிய நகத்தினால் கீறிய ஈரமுள்ள மணலையுடைய நீருள்ள வழி சிதையும்படி இழுமென்னும் ஓசையுண்டாக இடியினது முழக்கத்தையுடைய அலைகள் உடையும் துறையையுடைய தலைவருக்கு நீ உரியாயென்றமையை உடம் பட்டுக் கூறினர்; அதனையறிந்து நான் மகிழ்ந்தேன்; விரிந்த மலர்களையுடைய புன்னை மரங்கள் உயர்ந்து வளர்ந்த புலால் நாற்றத்தை யுடைய சேரியிடத்துள்ள இனிய நகையையுடைய மகளிர் கூட்டத்தினரோடு இந்த ஆரவாரத்தையுடைய ஊர் இன்னும் மகிழ்ச்சியுடையதாகும் என அம்மூவனார் என்னும் புலவர் எடுத்துக் காட்டுகின்றார்.

ஆரம்ப காலங்களில் ஊரறியத் திருமணங்கள் இருந்ததில்லை. ஆனால் பல மணமுறிவுகள், ஏமாற்றங்கள், நம்பிக்கை இழப்புக்கள் ஊரறியத் திருமணம் செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது. பொய்யும் வழுவும்; தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்று திருமணத் தோற்றம் பற்றித் தொல்காப்பியர் எடுத்துரைக்கின்றார். தாய்வழிச் சமூகமாக இருந்தபோது சடங்கு ரீதியான பண்பைத் திருமணங்கள் பெறவில்லை. பெண் தனக்கான ஆணைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றிருந்தாள். உடைமையற்ற சமூகமாக இருந்த இனக்குழுக்கள் மற்ற குழுக்களுடனான தம் உறவைப் பெருக்கிக்கொள்ள, உயரிய உடைமையான தம் உடல்களைப் பகிர்ந்து கொண்டன என்கிறார்கள் சமூகவியலாளர்கள். இன்று ஊரறியத் திருமணங்கள் நடந்தும் மணமுறிவுகள் அதிகரித்துள்ளன.

சங்ககாலத்தில் திருமணமான தம்பதிகள் தனிக்குடித்தனமாக வாழுகின்ற போது பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டாலும் அன்பினால் ஒன்றுபட்டு வாழுகின்ற வாழ்க்கையே மதிப்புமிக்க வாழ்வாகக் கருதப்பட்டது. செல்வச்செழிப்புடன் தேனும் பாலும் ஊட்டி வளர்க்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும் தலைவன் வீட்டில் செல்வச்செழிப்பு இல்லாத நிலையிலே வீட்டிலே உணவில்லாமல் தண்ணீரை உணவாக உண்பதும் அந்தத் தண்ணீரும் விலங்குகள் குடிக்கின்ற நீராகவும் பலகாத தூரம் நடந்து சென்று எடுப்பதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையிலும் தலைவி தன் பிறந்த வீட்டுக்குச் சென்று கையேந்தி நிற்காது வீட்டிலே எந்நிலையையும் உரைக்காது வாழுகின்ற தன்மையையுடையதாக இருந்தது.

அன்னாய் வாழி வேண்டன்னை நம் படப்பைத்
தேன் மயங்கு பாலினும் இனிய அவன் நாட்டு
உவலைக் கூவல் கீழ
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே

இது தற்காலத்தில் சின்னச்சின்ன காரணங்களுக்காக மணமுறிவேற்பட்டுப் பிறந்த வீட்டுக்குப் போகின்ற பெண்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியதாக இருக்கின்றது.

கண்ணகி,காரைக்காலம்மையார் போன்ற இலக்கிய கதாபாத்திரங்களும் தனிக்குடித்தனம் நடத்தியவர் களே. ஆனால், அவர்களின் பாரிய பிரச்சினைகளுக்கு இந்த தனிக்குடித்தனமும் காரணமாக இருந் திருக்கலாம் என்று எண்ணக்கிடக்கின்றது. மதுரை எரிக்கும் அளவு சக்தி வாய்ந்த ஆளுமை மிக்கவளாக கண்ணகியும் மாங்கனி நினைத்தவுடன் பெறக்கூடிய சக்தி மிக்கவளாக காரைக் காலம்மையாரும் இருந்தனர். தனிக்குடித்தன வாழ்க்கையிலே அவர்கள் இருவருடைய ஆளுமையையும் பல சந்தர்ப்பங்களில் கோவலன். பரமதத்தன் ஆகிய இருவரும் சந்தித்திருக்கலாம். இதனால், அதனை ஏற்றுக்கொள்ளமுடியாமல் பிரிந்து சென்றிருக்கலாம். இந்தப் பிரிவு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்திருந்தால் தடுக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.

ஆனாலும் தற்கால சூழ்நிலையில் மணமுறிவுகள் அதிகரித்திருந்தாலும் தனிக்குடித்தனம் அவசியம் என்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. எவ்வாறாயினும் மணமுறிவுகளை தவிர்த்து அது கூட்டுக் குடும்பமோ தனிக்குடித்தனமோ குடும்பவாழ்க்கை வாழும் காலகட்டமே மனித வாழ்க்கையில் பாரிய பிரச்சினைகளை வென்று சாதிக்கும் ஒரு காலகட்டமாக அமைகின்றது.

615 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *