தொடரும் புதைகுழி மர்மங்கள்

பாரதி

இறுதிப் போர் நடைபெற்ற முள்ளிவாய்காலின் அருகே மீண்டும் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியிருக்கின்றது. முல்லைதீவில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள பல பகுதிகளில் விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. புதைகுழிகளை மூடிமறைப் பதற்காக இந்த விகாரைகள் அமைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வடமாகாண முன்னாள் உறுப்பினர் துரைராஜா ரவிகரன் வெளிப்படுத்தியிருக்கின்றார். அதேபோல மண்டைதீவில் கொல்லப்பட்ட பலர் அங்குள்ள ஒரு கிணற்றுக்குள் புதைக்கப்பட்டிருப்பதாக யாழ். மாவட்ட எம்.பி. சிவஞானம் சிறிதரன் தெரிவித் திருக்கின்றார்.

கொக்குத் தொடுவாயில் ஜூலை முற்பகுதியிpல் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியிலிருந்து 13 பேருடைய சிதைவுகள் மீட்கப்பட்டுள்ள நிலையிலேயே, புதைகுழி விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. அங்கு காணப்பட்ட உடைகள் மற்றும் எலும்புகளின் பாகங்களின் அடிப்படையில் இவை பெண் போராளிகளுடையதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இறுதிப்போரின்போது சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட பெண் போராளிகள் கொல்லப்பட்டு இந்தப் புதைகுழியில் போடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

இந்த புதைகுழிகளின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மைகளைக் கண்டறிய வேண்டுமாயின் சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்பது தமிழர் தரப்பால் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. அதேவேளையில், விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகளும் அவசியம். அவ்வாறில்லாமல் முன்னெடுக்கப்படக்கூடிய விசாரணைகள் உண்மைகளை வெளிக்கொணர உதவப்போவதில்லை.

இறுதிப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில்தான் இவர்கள் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்து. இறுதிப் போரில் இடம்பெற்றது ஒரு இனப்படுகொலை என்பதைத்தான் சர்வதேச அரங்கில் தமிழர் தரப்பு வலியுறுத்திவருகின்றது. அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களில் ஒன்றாக இது போன்ற புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் உதவலாம். நீதிமன்ற விசாரணைகள் மூலமாக மட்டும் நீதியை நிலைநாட்டிவிட முடியாது. கடந்த கால உதாரணங்கள் இதனைத்தான் உணர்த்துகின்றன.

இறுதிப் போரின் போது சரணடைந்த, கைது செய்யப்பட்ட பெருந்தொகையான பொதுமக்களும், போராளிகளும் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இவ்வாறு படையினரால் கொண்டு செல்லப்பட்டு இன்னும் திரும்பி வராதவர்களை அவர்களுடைய உறவினர்கள் இப்போதும் தேடிவருகின்றார்;கள். அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய புதைகுழியாக இது இருக்கலாம் என்பதுதான் இன்று எழும் சந்தேகம்.

இலங்கை அரசாங்கத்தினால் இந்தப் புதைகுழிகள் தோண்டப்படுவதும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதும் கொல்லப்பட்டவர்களுக்கு ஒரு போதும் நீதியைப் பெற்றுத்தராது என்பதும் அனைவருக்கும் தெரியும். இதற்கு கடந்தகால அனுபவங்களும் சான்றாக உள்ளன. மிருசுவிலில் எட்டு பொதுமக்களுடைய படுகொலைகள். திருமலை குமாரபுரத்தில் 26 பொதுமக்களுடைய படுகொலைகள் யாரால் செய்யப்பட்டன என்பது தெரிந்திருந்தும்கூட, நீதி நிலைநாட்டப்படவில்லை.

இராணுவ ஆக்கிரமிப்பையடுத்து மிருசுவிலிலிருந்து உடுப்பிட்டிக்கு இடம்பெயர்ந்த சில அகதிகள் தமது வீடுகளையும், உடமைகளையும் பார்ப்பதற்காகவும் அங்குள்ள காட்டில் விறகு வெட்டி வரவும் உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெற்று 2000 டிசம்பர் 19 ஆம் திகதி மிருசுவிலுக்குச் சென்ற வேளை அரைகுறையாக புதையுண்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலத்தை கண்டனர். அவர்களுள் சிலர் தமது குடும்பத்தவர்களுடன் இத் தகவலை பகிர்ந்து கொண்டுமிருந்தனர். அடுத்த நாள் அதே பகுதிக்குச் சென்று குறித்த சடலத்தை அடையாளங் காண முற்பட்டவேளை அங்கு நிலை கொண்டிருந்த இராணுவத்தினரிடம் அகப்பட்டுக் கொண்டார்கள்.

இவர்களுள் எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியிலுள்ள வீடு ஒன்றின் மலசலகூடக் குழியினுள் வீசப்பட்டனர். கைதானவர்களில் பொன்னுத்துரை மகேஸ்வரன் என்பவர் பலத்த காயங்களுடன் தப்பி வந்து தனது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்ததை அடுத்தே இக்கொலைகள் பற்றிய விபரங்கள் தெரியவந்தது. அவர் வழங்கிய தகவலிலேயே படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் மலசலகூட குழியிலிருந்து மீட்கப்பட்டன.

எட்டு தமிழர்களின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த, இராணுவச் சிப்பாய் சுனில் ரத்னநாயக்க என்பவருக்கு கொழும்பு நீதிமன்றம் 2015 ஜூன் 25 அன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நான்கு இராணுவத்தினரை போதிய ஆதாரமின்மையால் விடுதலை செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மரண தண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்திநாயக்கவை 2020 மார்ச் 26 இல் கோட்டாபய ராஜபக்ஷ மன்னிப்பளித்து விடுதலை செய்தார்.

திருமலை, குமாரபுரம் கிராமத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி இலங்கை இராணுவம் மற்றும் துணைப்படைகள் மேற்கொண்ட படுகொலை சம்பவத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 36 பேர்வரை படுகாயமடைந்தனர்.

இப்படுகொலைகள் தொடர்பாக இராணுவ சிப்பாய்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. 15 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற வழக்கில், 8 இராணுவத்தினர் சந்தேகநபர்களாக இனங்காணப்பட்ட நிலையில், ஒருவர் பின்னர் நிரபராதியென விடுவிக்கப்பட்டதுடன் ஒருவர் இறந்துவிட்டார்.

தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில்,அவர்களும் குற்றமற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள்.

இது போன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில்தான் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் புதைகுழி தொடர்பாக சர்வதேச மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சர்வதேச நியமங்களுக்கமைய புதைகுழியை தோண்டும் செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட ஆதாரங்கள் மிக அவசியமானவை. இந்த ஆதாரங்கள் எந்தளவுக்குப் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன என்ற கேள்வியும் மிக முக்கியமானது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களை சேகரிப்பதற்கான செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. அதற்கான அலுவலகம் ஒன்றையும் அமைத்து, தொடர்ச்சியாக ஆதாரங்களைத் திரட்டும் செயற்பாடுகளையும் மனித உரிமைகள் பேரவை முன்னெடுத்து வருகின்றது. இதுவும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சாதகமான ஒன்று. கொக்குத் தொடுவாய் விவகாரத்தில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கான செயற்பாடுகளை தமிழக் கட்சிகள் போதியளவுக்கு முன்னெடுக்கவில்லை என்பது தெரிகின்றது.

கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த 29ம் தேதி குழாய் நீர் பொருத்தும் பணிகளுக்காக பிரதான வீதியோரத்தில் நீர்வழங்கல் அமைச்சினால் குழியொன்று தோண்டப்பட்டுள்ளது. இதன்போது, பெண்களின் உள்ளாடைகள் மற்றும் மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் எச்சங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு விடயங்களை தெளிவூட்டியதுடன்,

குறித்த பகுதியில் மனித புதைக்குழி உள்ளதா என்பது தொடர்பிலான பூர்வாங்க அகழ்வு பணி கடந்த (ஜூலை) 6-ஆம் தேதி இடம்பெற்றது.

இதன்போது, குறித்த இடத்திலிருந்து 13 பேருடையது எனக் கருதப்படும் மனித எச்சங்களை அதிகாரிகள் அடையாளப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஜூலை 14 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

சுர்வதேச கண்காணிப்பாளர்களைப் பொறுத்தவரையில் அவ்வாறு யாரையும் தம்மால் அழைக்க முடியாது என நீதிபதி கூறியிருக்கின்றார். ஆனால், சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் தாமாகவே இவற்றைக் கண்காணிப்பதற்கு வந்தால் அதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நீதிபதி தெரிவித்திருக்கின்றார். அதேவேளையில் அகழ்வுப் பணிகளில் தொல்லியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர்களை இணைத்துக்கொள்வதற்கும் நீதிபதி இணங்கியிருக்கின்றார்.

நீதிபதியின் இணக்கத்தின் அடிப்படையில் சர்வதேச பிரதிநிதிகளைக் கண்காணிப்பாளராகக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை தமிழத் தரப்பினரும் முன்னெடுக்க முடியும். இந்தப் புதைகுழிகளின் பின்னணியில் உள்ள மர்மங்களை வெளிப்படுத்துவதற்கு இவை உதவலாம்.

நடைபெற்றது ஒரு இனப்படுகொலை என்பது நிரூபிக்கப்படும் பட்சத்தில், அதன் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு ஒன்றுக்கு இலங்கையை நிர்ப்பந்திக்கும் அவசியம் சர்வதேசத்துக்கு உருவாகும். இந்தப் புதைகுழி மட்டுமன்றி, வேறு இடங்களில் இருப்பதாகக் கருதப்படும் புதைகுழிகளில் புதைந்துள்ள மர்மங்களை வெளிக்கொண்டுவருவதற்கு விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் முக்கியம். அதற்கான அழுத்தங்கள் மட்டுமன்றி, முயற்சிகளும் தமிழர் தரப்பினரால் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் இது மற்றொரு மிருசுவில், அல்லது குமாரபுரம் படுகொலைகள் போல மறைந்துவிடுவதற்கான வாய்ப்புக்களே அதிகமாக இருக்கும்!

1,044 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *