எங்கடை ஆச்சி

அஞ்சாம் வகுப்பு சோதினை பெயிலானவன் எல்லாம்
அலைஞ்சா திரியப் போகினம்?.

கந்தையா பத்மநாதன்-இலங்கை

1974 ம் ஆண்டு ஒருநாள் சனிக்கிழமை வழக்கம் போல வெள்ளணக் காலமை நித்திரையால எழும்பி வளவுக்குப் போய் வந்து கைகால் முகம் எல்லாம் கழுவி சாமி கும்பிட்டுப் போட்டு ஆட்டட்டி மாட்டடி எல்லாம் துப்பரவாக்கிபோட்டு கோப்பி குடிக்க எண்டு அடுக்களைக்குப் போனன். ஒவ்வொரு நாளும் ஆச்சி மணக்க மணக்க வேர்க்கொம்பும் போட்டு ஆட்டுப்பாலிலை கோப்பி ஊத்துவா. அப்ப எங்களிட்டை நிண்ட தங்கம்மா எண்ட ஆடு ஆச்சி எப்ப போய் மடியைத் தொட்டாலும் சுண்டுக்கோப்பை நிறையப் பால் தரும். ஆச்சி ஊத்திற உந்தக் கோப்பியைக் குடிச்சா உடம்பிலை புதுசா ஒரு தெம்பு வரும் . அப்பிடி அண்டைக்கும் கோப்பி குடிக்க எண்டு போக வழக்கத்துக்கு மாறா தம்பி போய் குளிச்சுப் போட்டு வாடா எண்டு ஆச்சி சொன்னா.

ஏனணை ஆச்சி இண்டைக்கு சனிக்கிழமைதானே வழக்கமா நான் பத்து மணிக்குத்தானே எண்ணை வைச்சு முழுகிறனான். பேந்து இண்டைக்கு என்னத்துக்கு ஒரு புதிவிதமா என்னை விடிய நேரத்தோட குளிக்கச் சொல்லிறியள் எண்டன்.உடனை ஆச்சி எடே இண்டைக்கு இஸ்கொலர்சிப்பு சோதினை இருக்கு போய் எழுதிப் போட்டு வா எண்டு சொன்னா . அப்பதான் எனக்குத் தெரியும் அப்பிடி ஒரு சோதினை அண்டைக்கு எனக்கு இருக்கெண்டு.

பேந்து வெள்ளிக்கிழமை பள்ளிக்கத்துக்குப் போட்டுப் போட்டு தோய்க்கவெண்டு கொடியில கழட்டிபோட்ட காச்சட்டை சட்டையைப் போட்டுக்கொண்டு தீட்டாத பென்சிலும் ரேசரும் செத்தையிலை செருகிக் கிடந்த பழைய மெய்கண்டான் கலண்டர் மட்டையும் எடுத்துக் கொண்டு காலுக்கு செருப்பும் போடாமல் போய் ஒரு மாதிரி சோதினை எழுதிப் போட்டு வந்தனான். என்னோடை ஆச்சியோ அப்புவோ பின்னாலை வால் பிடிச்சுக்கொண்டும் வரேல்லை கண்டகிண்டபடி ஒண்டும் அலட்டவும் இல்லை. எண்டாலும் ஆச்சி போகேக்கை மோனை கவனம் இஞ்சுப்பெற்றர் வந்தால் சலாம் குண்டுமணி சொல்லவேணும் எண்டு வழிக்கு வழி சொல்லி அனுப்பினா. சோதினை செய்து போட்டு வந்த பிறகு ஆச்சி அந்தக் கேள்வி செய்தனியே இந்தக் கேள்வி செய்தனியே எண்டு அரியண்டப்படுத்தவும் இல்லை. அயலட்டையிலை உள்ள பெண்டுகளிட்டைப் போய் உன்ரை பெடி சோதினை வடிவாச் செய்ததோ உன்ரை பெட்டை சோதினை வடிவாச் செய்ததோ எண்டு அலட்டவும் இல்லை. அவ தன்ரை பாடு நான் என்ரை பாடு .

பேந்து ஒரு மூண்டு மாதம் கழிச்சு ரிசல்ட் வந்தால் நான் பெயில் ஆனால் எங்கட வகுப்பில ரெண்டு மூண்டு பேர் பாஸ் பண்ணிப் போட்டினம். நான் பெயில் எண்டு நானும் கவலைப்படேல்லை. அம்மாவும் கவலைப்படேல்லை, ஆச்சியும் கவலைப்படேல்லை. அயலட்டையில உள்ள ஆக்களும் அதைப் பற்றி ஒண்டும் விண்ணாயம் கேக்கேல்லை. வகுப்பில ரீச்சர்மாரும் ஒண்டும் கேக்கேல்லை.அவை பாஸ் பண்ணின பெடியளை தூக்கிவைச்சு கதைக்கவும் இல்லை விழாக் கொண்டாடவும் இல்லை.பெயில் பண்ணின என்னைப் போல பெடியளை குறைவாயும் கதைக்கேல்லை.

பேந்து நான் ஆப்பிடியே ஓ எல் படிச்சு பெஸ்ற் ரிசல்ட் எடுத்து அதுக்குப் பிறகு ஏ எல் படிச்சு பெஸ்ற் ரிசல்ட் எடுத்து கம்பஸ் போய் அதுக்குப் பிறகு இன்னும் மேல மேல அதையும் இதையும் எண்டு அந்தக் கம்பஸ் மாறி இந்தக் கம்பஸ் மாறி படிச்சு இந்த நாட்டின்ரை கல்வித்துறை சார்ந்து பல முடிவுகளை எடுக்கக் கூடிய நிலமைக்கு எல்லாம் போனனான்.அதே நேரம் என்னோட படிச்சு உந்தச் சோதினை பாஸ் பண்ணினவங்கள் இப்ப எங்க இருக்கிறாங்கள் எண்டே தெரியேல்லை.

நீதி:அஞ்சாம் வகுப்பு சோதினை பாஸ் பண்ணினவன் எல்லாம் அரசாளப் போவதுமில்லை அதே சோதினை பெயிலானவன் எல்லாம் அலைஞ்சு திரியப் போவதுமில்லை.

534 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *